Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
கட்டுரைகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்கள் 'இறக்கும் வரை அரசாங்கம் காத்திருக்கிறது'

T

The Leader Desk

ஆகஸ்ட் 2, 2024 • 2:45 PM

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்கள் 'இறக்கும் வரை அரசாங்கம் காத்திருக்கிறது'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வழங்குமாறு வடக்கிலுள்ள ஊடகவியலாளர் சங்கம் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
  • ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் கொல்லப்பட்டபோது அவருக்கு 22 வயது.
  • மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் மேற்கு கொக்குவில் புகையிரத நிலைய வீதியில் உள்ள நிலக்சனின் வீட்டிற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
  • இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS) கடந்த தசாப்தத்தில் கொல்லப்பட்ட 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களின் பட்டியலை வெளியிட்டது.
எழுத்து அளவு:

செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வழங்குமாறு வடக்கிலுள்ள ஊடகவியலாளர் சங்கம் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தமிழர் பிரதேசத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களின் மரணம் தொடர்பான விசாரணைகளை இந்த அரசு தவிர்த்து வருவதாக யாழ்ப்பாணம் ஊடக மையத்தின் தலைவர் கே. செல்வகுமார், யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் ஏழாவது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

“நிலக்கசனின் தாய் அண்மையில் காலமாகியுள்ளார். தன்னுடைய மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென அந்த தாய் ஏறாத இடமில்லை. சகல ஜனநாயக வழியிலான போராட்டங்களிலும் பங்கேற்றும் தனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென போராடினார். அதேபோலத்தான் தமிழர் பிரதேசத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் இறப்பு குறித்து ஒரு விசாரணை கூட நடத்தாமல் இந்த அரசு தட்டிக்கழித்து வருகிறது. காலப்போக்கில் அவர்களின் உறவினர்களும் உயிரிழப்பார்கள் அப்பொழுது இந்த விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவரலாம் என நினைக்கின்றார்களோ என எண்ணத் தோன்றுகிறது. ஆகவே உயிரோடு இருக்கும் ஊடகவியலாளர்களாகிய நாங்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டுமென்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவோம்.”

நேற்றைய தினம் (ஓகஸ்ட் 01) யாழ்ப்பாணம் ஊடக மையத்தில், வடக்கின் ஊடகவியலாளர்கள் இணைந்து 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி, படுகொலை செய்யப்பட்ட சகாதேவன் நிலக்சனுக்கு மலர் மாலை அணிவித்தும் விளக்கேற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் கொல்லப்பட்டபோது அவருக்கு 22 வயது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (MRTC) ஊடகவியலைக் கற்றுக்கொண்டிருந்ததோடு, யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரபல மாணவர் வெளியீடான 'சாளரம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார்.

jaffna 2

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் மேற்கு கொக்குவில் புகையிரத நிலைய வீதியில் உள்ள நிலக்சனின் வீட்டிற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

குற்றவாளிகளால் அச்சமடைந்த அவரது நண்பனால் நிலக்சன் வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு நிலக்சனின் பெற்றோர் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நிலக்சன் மற்றும் வடக்கு கிழக்கில் படுகொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரை அதிகாரத்திற்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் முறையான பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொள்ளவில்லை.

இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS) கடந்த தசாப்தத்தில் கொல்லப்பட்ட 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களின் பட்டியலை வெளியிட்டது. அவர்களில் பெரும்பாலோர் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள்.

நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் முதலாவது மனித உரிமைகள் தின நினைவேந்தலின் போது பட்டியலைப் பெற்றுக்கொண்ட அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.  

ஐயாத்துரை நடேசன், எல்.எம்.பலீல் (நற்பிட்டிமுனை பலீல்),  சுப்பிரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகாராஜா, சுப்பிரமணியம் ராமச்சந்திரன், சந்திரபோஸ் சுதாகர், செல்வராசா ரஜீவமன், இசைவிலி செம்பியன் (சுபாஜினி), பரணிரூபசிங்கம் தேவகுமார், இராசையா ஜெயேந்திரன், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, மகாலிங்கம் மகேஸ்வரன், மாரியப்பு அந்தோணிகுமார், ஷோபனா தர்மராஜா (இசைப்பிரியா), திருகுலசிங்கம் தவபாலன் மற்றும் சகாதேவன் நிலக்சன் உள்ளிட்டவர்கள், 2004-2010 வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்கள் 'இறக்கும் வரை அரசாங்கம் காத்திருக்கிறது' | Tamil Leader | We Lead the Nation