'மருத்துவர்' ஒருவரால் இல்லாத தனியார் மருத்துவமனை ஒன்றிலிருந்து வழங்கப்பட்ட போலி மருந்துச் சீட்டைப் பயன்படுத்தித் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பயன்பாட்டை நியாயப்படுத்த முயன்ற எதியோப்பிய மாரத்தான் வீராங்கனை ரூதி அகாவுக்கு (Ruti Aga) ஆறு ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊக்கமருந்து பயன்பாடும் சான்றுகளைத் திரித்தலும்
2019 டோக்கியோ மாரத்தான் போட்டியை 2 மணிநேரம் 20 நிமிடங்கள் 40 வினாடிகளில் நிறைவு செய்து வெற்றிபெற்ற அகா, மீதைல்பிரெட்னிசோலோன் (Methylprednisolone) எனும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்செலுத்தியுள்ளமை கடந்த மார்ச் மாதம் சீனாவில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இத் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்திய தண்டனையாக 32 வயதான இவ் வீராங்கனைக்கு ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் தடையே விதிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் சான்றுகளைத் திரித்தமை மற்றும் விசாரணைகளைத் தவறாக வழிநடத்தியமை ஆகியவற்றின் காரணமாக அத் தடையுடன் மேலும் நான்கு ஆண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
குடும்ப உறுப்பினரின் போலி மருந்துச் சீட்டு
முழங்கால் காயம் ஒன்றுக்குச் சிகிச்சை பெறுகையில் இத் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பொருள் உடலுக்குள் சென்றதாக அகா தெரிவித்ததுடன், நடைமுறையில் இல்லாத மருத்துவமனை ஒன்றின் 'மருத்துவர்' ஒருவரால் வழங்கப்பட்ட மருந்துச் சீட்டொன்றையும் சமர்ப்பித்திருந்தார். குறித்த மருத்துவர் உரிய மருத்துவ அதிகாரசபையில் பதிவுசெய்யப்படாத, எவ்வித மருத்துவப் பின்னணியும் அற்ற குடும்ப உறுப்பினர் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த குடும்ப உறுப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தான் முன்னர் பணியாற்றிய இடத்தின் பழைய மருந்துச் சீட்டுத் தாள் ஒன்றை எடுத்துப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார். எனினும் குறித்த நபர் ஒருபோதும் அங்கு பணியாற்றவில்லை என்றும், அம்மருந்துச் சீட்டு தங்களுடையது அல்ல என்றும் அக் கிளினிக் நிர்வாகம் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது.
உலக மாரத்தான் அரங்கின் பிரதான போட்டிகளில் மூன்று முறை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள அகாவின் இப் போட்டித் தடை செப்டம்பர் 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


