அங்குள்ள உயரமான கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் அல்லது வெளிநாட்டு கையிருப்புக்களின் அளவினால் மாத்திரம் அளவிடப்படுவதில்லை. அச் சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் உலகத்தைப் பார்க்கும் கண்ணோட்டம், நிஜத்தைப் புரிந்துகொள்ளும் விதம் மற்றும் பிரச்சினையொன்றை எதிர்கொள்ளும் போது பயன்படுத்தும் தர்க்கத்தின் மீதே அது தங்கியுள்ளது.
21 ஆம் நூற்றாண்டில் நமது நாடு
துரதிர்ஷ்டவசமாகத் தற்போதைய இலங்கையைப் பார்க்கும் போது, தொழில்நுட்ப ரீதியாக 21 ஆம் நூற்றாண்டிற்குள் காலடி எடுத்து வைத்திருந்த போதிலும், சிந்தனை ரீதியாக இன்னமும் அமானுடவாதம் மற்றும் மூடநம்பிக்கையின் இருண்ட யுகத்திற்குள் சிக்கியுள்ள ஒரு சமூகத்தின் அறிகுறிகளே தென்படுகின்றன.
எந்தவொரு சமூகத்திலும் நபர் ஒருவருக்குத் தான் விரும்பிய மத அல்லது ஆன்மீக நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கான உரிமையுள்ளது. எனினும், அப் தனிப்பட்ட நம்பிக்கைகள் சான்றுகளின் அடிப்படையிலான அறிவியல் அல்லது அரச கொள்கைகளை மிஞ்சி, பொதுமக்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கும் போதே பிரச்சினை எழுகிறது.
கோவிட் பெருந்தொற்று நிலவிய காலத்தில் பானமொன்றை ஆறுகளில் கொட்டுவதன் மூலம் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என நம்பிய சுகாதார அமைச்சரிலிருந்து, விவசாய, பொருளாதார அல்லது அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர் நிமித்தங்கள் மற்றும் ஜோதிடத்தைப் பின்தொடரும் தலைவர்கள் வரையிலான ஆட்சிப் பண்பாட்டிற்குள் அறிவியல் அணுகுமுறைக்கு இடமில்லை. தற்போது 'மகாசோன் சமையம்' ஆடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு மத ரீதியிலான மூடநம்பிக்கைகளும் அமானுட நம்பிக்கைகளும் அரச பொறிமுறைக்குள் நுழையும் போது நாட்டின் முன்னோக்கிய பயணம் முற்றாக முடங்கிப்போகிறது.
தேவாலயத்தின் மூடநம்பிக்கைக்கு எதிராக
17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவும் இவ்வாறானதொரு அந்தகாரத்திலேயே காணப்பட்டது. கத்தோலிக்க தேவாலயத்தின் சித்தாந்த ஆதிக்கம் அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தடை செய்ததுடன், கேள்வி எழுப்பும் புத்திஜீவிகள் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.
ஆனால் ஐரோப்பா அந்தப் பிந்தைய மத்தியகால இருளிலிருந்து மீண்டது கல்வியியலாளர்களும் புத்திஜீவிகளும் பயமின்றி முன்னால் வந்ததனாலேயாகும். கலீலியோ, கோப்பர்நிக்கஸ், ஜோன் லொக், வோல்டயர் மற்றும் ரூஸோ போன்ற அறிஞர்கள் தேவாலயத்தின் கோட்பாடுகளுக்கு எதிராகத் தர்க்கம், சான்றுகள் மற்றும் சுதந்திர சிந்தனையை முன்னிறுத்தினர்.
அங்கு கல்வியியலானது வெறும் பட்டங்களை வழங்கும் இடமாக மாத்திரம் இராது, சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய மூடநம்பிக்கைகளைச் சவாலுக்குட்படுத்தும் மற்றும் அரசையும் மத அதிகாரத்தையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கு அறிவுப்பூர்வமான வழிகாட்டலை வழங்கும் மையமாக மாறியது.
சம்பாஷணைகளுக்குப் பதிலாக மௌனமாகும் கல்வியியல்
ஆனால் இலங்கையின் சூழமைவுக்குள் பல்கலைக்கழகங்கள் மற்றும் புத்திஜீவி நிறுவனங்களிடம் காணப்படுவது இதற்கு முற்றிலும் மாறுபட்ட கவலைக்கிடமான நிலைமையாகும். நாட்டிற்குள் பாரிய அளவில் மூடநம்பிக்கைகள் பரப்பப்படும் போது, மக்கள் நோய்கள் அல்லது பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியில் அனாதரவாகி அமானுட பாதுகாப்புகளைத் தேடிச் செல்லும் போது, நாட்டின் பல்கலைக்கழக அமைப்பு பாரதூரமான மௌனத்தைக் காத்து வருகிறது.
அதற்கான பிரதான காரணம் உயர்கல்வி என்பது விமர்சனப் பூர்வமான புத்தியை வளர்ப்பதற்குப் பதிலாக, பரீட்சைகளில் சித்தியடைவதற்கோ அல்லது குறுகிய வேலைவாய்ப்புச் சந்தைக்குத் தேவையான அறிவை வழங்குவதற்கோ உரிய இயந்திரமாக மாறியுள்ளமையாகும்.
அதேபோன்று பாரம்பரிய அல்லது மத ரீதியிலான கருத்துக்களைக் கேள்விக்குட்படுத்துவது தேசிய அல்லது கலாச்சார உரிமைக்கு எதிரான தாக்குதலாக முத்திரை குத்தப்படச் சமூகம் முற்படுவதால், அத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகும் பயம் காரணமாக பெரும்பாலான அறிஞர்கள் தங்களது ஆராய்ச்சி அறைகளுக்குள் மட்டுமே முடங்கிவிடுகின்றனர்.
தர்க்கரீதியான எதிர்காலத்திற்காக
மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்ட தர்க்கம் மற்றும் அறிவியல் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்ட அபிவிருத்தியடைந்த சமூகமொன்றை உருவாக்க வேண்டுமாயின் நாம் உடனடியாகச் சில நடவடிக்கைகளை நோக்கி நகர வேண்டும்:
-
முதலாவதாக, பாடசாலை மட்டத்திலிருந்தே மனனம் செய்யும் கல்விக்குப் பதிலாகக் கேள்வி எழுப்புதல், தர்க்கித்தல் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் அறிவியல் நடைமுறையைச் செயன்முறை ரீதியாகப் பழக்கப்படுத்த வேண்டும்.
-
இரண்டாவதாக, சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் சுற்றாடல் போன்ற அரச தீர்மானங்களை எடுக்கும் போது எந்தவொரு மத அல்லது அமானுட நம்பிக்கைகளுக்கும் இடமளிக்காமல், ஆராய்ச்சிகள் மற்றும் தரவுகளின் மீது மட்டுமே தங்கிச் செயற்படும் மதச்சார்பற்ற அரச கொள்கையொன்றை (Secular Policy) நிறுவ வேண்டும்.
-
மக்களின் பயத்தையும் அனாதரவான நிலையையும் பணமாக மாற்றும் மூடநம்பிக்கைப் பிரசாரங்களை முறைப்படுத்தி, பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அறிஞர்களும் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பு மண்டலங்களிலிருந்து விடுபட்டுச் சமூகத்தின் சித்தாந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் பகிரங்கமாக விவாதிக்க முன்வர வேண்டும்.
சமூகமொன்றின் வளர்ச்சி தங்கியிருப்பது அது தனக்கு உரித்தான கடந்த கால மூடநம்பிக்கைகளை எந்தளவிற்கு கைவிட்டு, யதார்த்தமான மற்றும் தர்க்கரீதியான எதிர்காலத்திற்காக மாறத் தயாராகவுள்ளது என்பதன் மீதேயாகும்.
குருட்டு நம்பிக்கைகளுக்குப் பதிலாகப் பிரஞையும், மௌனத்திற்குப் பதிலாக விமர்சனப் பூர்வமான சம்பாஷணைகளும் பிரதியீடு செய்யப்படாத வரை நம்மால் அபிவிருத்தியடைந்த சமூகமொன்றைக் கனவு காண முடியாது.


