முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 16.2 மில்லியன் ரூபா பெறுமதியான 'வூல்வர்ஹாம்டன்' வழக்கு, தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் போயுள்ள ஒரு அரசியல் பொறியாக மாறி வருவதை அண்மைக்கால நீதிமன்ற அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
கடந்த ஜனவரி 28 மற்றும் 30 ஆம் திகதிகளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய விடயங்களையும், அதற்கு முன்னர் எம்மால் வெளிப்படுத்தப்பட்ட வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ ஆவணங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த விசாரணையானது அரசியலமைப்பையே சவாலுக்கு உட்படுத்தும் 'தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக மாத்திரம் சட்டத்தை அமுல்படுத்தும்' (Selective Prosecution) ஒரு தெளிவான அரசியல் பழிவாங்கல் என்பது புலனாகின்றது.
புதிய நீதிமன்ற அறிக்கைகள் மற்றும் சட்டப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட புலனாய்வு அலசல் இதோ:
01. கைது செய்யப்பட்டு பல மாதங்களின் பின்னர் சாட்சியங்களைத் தேடும் ‘வேடிக்கை’
2026 ஜனவரி 28 ஆம் திகதியிட்ட நீதிமன்ற அறிக்கைகளின்படி, குற்றப்புலனாய்வுத் திணைக்களமானது (CID) பிரித்தானியாவின் வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகச் செயலாளரின் நிறைவேற்று உதவியாளர் கிறிஸ்டின் பிரேசர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லூயிஸ் டொன்க்ஸ் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமாகவும், வேந்தருக்கு (Lord Swraj Paul) பதிவுத் தபால் மூலமாகவும் வினவல்களை மேற்கொண்டுள்ளது. அவை பின்வரும் விடயங்களை உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும்:
# ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு உத்தியோகபூர்வமானதா?
# ல்கலைக்கழகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பு உள்ளதா?
# அங்கு நடைபெற்ற நிகழ்வு பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ விடயமா?
சட்டத்தின் அடிப்படைத் தத்துவம் என்னவெனில், சாட்சியங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேக நபர்களைக் கைது செய்வதாகும். ஆனால் இங்கு என்ன நடந்துள்ளது? முன்னாள் ஜனாதிபதியையும் அவரது செயலாளரையும் முதலில் கைது செய்து விளக்கமறியலில் வைத்துவிட்டு, அதன் பின்னர் வழக்கிற்குத் தேவையான அடிப்படைச் சாட்சியங்களைத் தேடுவதற்காகப் பிரித்தானியாவிற்கு மின்னஞ்சல் அனுப்புகின்றனர்! இது ஒரு முன்கூட்டிய தீர்மானத்துடன் முன்னெடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கை என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றது.

மறுபுறம், எம்மால் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக உத்தியோகபூர்வ ஆவணங்களில், வேந்தரின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் நிகழ்ச்சி நிரலில் "ஜனாதிபதியின் பதில் உரை" (Response from the President) என ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ உரை உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இவ்வாறான விசித்திரமான கேள்விகளை எழுப்புகின்றது.
02 சமன் ஏக்கநாயக்கவின் வெளிப்படுத்தல்:
"அது ஒரு இடைத்தங்கல் மாத்திரமே, மதிப்பீட்டை லண்டன் தூதரகமே தயாரித்தது"
ஜனவரி 30 ஆம் திகதி விளக்கமறியலில் இருந்தவாறு சமன் ஏக்கநாயக்க வழங்கிய வாக்குமூலம் இந்த வழக்கின் கதையை முழுமையாகத் திசைதிருப்பியுள்ளது:
இடைத்தங்கல் (Transit) மாத்திரமே, விஜயம் அல்ல:
இது ஒரு தனிப்பட்ட விஜயம் அல்லவென்றும், நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கொழும்பு திரும்பும் வழியில் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு இடைத்தங்கல் மாத்திரமே என்றும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச மரபுகளின்படி, ஒரு நாட்டுத் தலைவர் இடைத்தங்கல் மேற்கொள்ளும் போது அவருக்கு உத்தியோகபூர்வ அல்லது உத்தியோகபூர்வமற்ற நடவடிக்கைகளுக்காக இராஜதந்திரப் பாதுகாப்பை வழங்குவது கட்டாயமாகும்.
40,445 பவுண் மதிப்பீடு எங்கிருந்து வந்தது?:
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் அனுப்பிய மதிப்பீட்டின் அடிப்படையிலேயே தான் நிதியை விடுவித்ததாகச் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 7 ஆம் திகதி மின்னஞ்சல் ஊடாகவே அந்த ஆவணத்தை அவர் முதன்முதலில் பார்த்துள்ளார். அதில் எந்த இடத்திலும் இது ஒரு "தனிப்பட்ட" விஜயம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
சரோஜா சிறிசேனவின் வகிபாகத்தை மறைத்தல்:
இங்குதான் அரசியலமைப்பின் 12(1) பிரிவை மீறும் பிரச்சினை மீண்டும் எழுகின்றது. இலட்சக்கணக்கான பெறுமதியான இந்த போக்குவரத்து மற்றும் ஏனைய வசதிகளுக்கான (Logistics) மதிப்பீட்டைத் தயாரித்ததும், 'ஸ்கை விங்ஸ்' (Sky Wings) போன்ற இடைத்தரகு நிறுவனங்களுக்குப் பணத்தைச் செலுத்தியதும் முன்னாள் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன என்றால், அவரை வழக்கிலிருந்து விடுவித்துவிட்டு கொழும்பில் இருந்து அனுமதி வழங்கிய சமன் ஏக்கநாயக்கவைச் சிறையில் அடைத்தது எப்படி?
பல்கலைக்கழகத்திடம் இருந்து உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்திருந்தும், "நான் அழைப்பிதழைப் பார்க்கவில்லை" எனக் கூறி அவர் சாட்சியங்களை மறைப்பதானது, அவராலேயே தயாரிக்கப்பட்ட இந்த 40,445 பவுண் மதிப்பீட்டின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

03. கையெழுத்துப் பரிசோதனை மற்றும் 'Mens Rea' (குற்றச் சேதனம்) இல்லாமை
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 124 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி செயலாளரின் கையெழுத்து மற்றும் கையொப்ப மாதிரிகளைப் பெற்று அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்புவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நடவடிக்கை எடுத்துள்ளது.
CID-இன் வாதம்:
கோப்பொன்றில் காணப்பட்ட "தனிப்பட்ட விஜயம்" (Private Visit) என்ற சொல்லை "உத்தியோகபூர்வ விஜயம்" (Official Visit) என மாற்றியது செயலாளரே என்பதை நிரூபிப்பதே அவர்களின் நோக்கமாகும்.
சட்ட ரீதியான உண்மை:
ஒருவேளை செயலாளர் அதனை மாற்றியிருந்தாலும் கூட, அதில் எந்தவொரு 'குற்றச் சேதனமும்' (Mens Rea / Guilty Mind - குற்றச் சிந்தனை) இல்லை. ஏனெனில், ஒரு நாட்டுத் தலைவர் வெளிநாடு செல்லும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவரது போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் செலவுகளைக் திறைசேரியிலிருந்து விடுவிக்க வேண்டுமாயின், நிதி ஒழுங்கு விதிகளின் (FR) கீழ் அது நிர்வாக ரீதியாக "உத்தியோகபூர்வமானது" எனப் பதிவு செய்யப்பட வேண்டும். இது நாட்டுத் தலைவரின் பாதுகாப்பிற்காகச் செய்யப்பட்ட ஒரு நிர்வாகச் செயலே அன்றி, பணத்தைத் திருடும் செயல் அல்ல.
04. கலந்தாலோசித்த உண்மையான தரப்பினர்
ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் குறித்து அன்றைய பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, சென்ட்ரா பெரேரா மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக ஏக்கநாயக்கவின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஜனாதிபதி செயலாளரின் தனிப்பட்ட தீர்மானம் அல்லவென்றும், இது முழுமையான அரச இயந்திரத்தின் (State Machinery) பங்களிப்புடன் நடைபெற்ற ஒரு உத்தியோகபூர்வச் செயன்முறை என்பதும் இதன் மூலம் உறுதியாகின்றது.
பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் இலாப நோக்கற்ற (Not-for-profit) நிறுவனங்கள் என்பதைச் செயலாளர் ஏற்கனவே விளக்கியுள்ள போதிலும், அது "அரசாங்கத்திற்குச் சொந்தமானதா" எனத் தேடுவதற்கு CID மின்னஞ்சல்களை அனுப்புவது அவர்களின் விசாரணையில் உள்ள வறுமையையே காட்டுகின்றது.
அரசியலமைப்பின் 35(1) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்கள் (Immunity) மற்றும் இராஜதந்திரப் பாதுகாப்பு உடன்படிக்கைகளை மீறித் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, ஏப்ரல் 29 ஆம் திகதி மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அதன் இருப்பு பெரும் சவாலுக்கு உள்ளாகும்.
நிதி மதிப்பீடுகளைத் தயாரித்த மற்றும் லண்டன் செயற்பாடுகளை முன்னெடுத்த சரோஜா சிறிசேன சுதந்திரமாக இருக்கும் நிலையில், முன்னாள் ஜனாதிபதியையும் செயலாளரையும் மாத்திரம் வேட்டையாடுவது என்பது நீதியை நிலைநாட்டுவதல்ல, அது ஒரு தீவிர அரசியல் பழிவாங்கல் என்பதை இந்த அண்மைக்கால நீதிமன்ற அறிக்கைகள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளன.
(15/02/2026 அன்று வெளியான சண்டே டைம்ஸ் (Sunday Times) அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)


