எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கின் சந்தேகநபர்களுள் ஒருவர் நீதிமன்றத்திற்கு ஆஜராகாது தவிர்த்து வந்தமையால், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி வைத்த 40 மில்லியன் ரூபா சரீரப் பிணைப் பணத்தை அரசுடைமையாக்குமாறு கோட்டை நீதவான் இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.
20 மில்லியன் ரூபாவை இன்றே செலுத்துமாறு உத்தரவு
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய அளவிலான நிதி முறைகேடு தொடர்பான வழக்கு இன்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் இரண்டாவது சந்தேகநபரும், விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியுமான பிரியங்கா நியோமாலி விக்கிரமசிங்க தொடர்ச்சியாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாது தவிர்த்து வந்தமையினால், அவருக்காக வைக்கப்பட்ட பிணைப் பணமே இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்டது.
சந்தேகநபர் சார்பில் முன்னாள் மூத்த கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோரால் சரீரப் பிணை வைக்கப்பட்டிருந்தது. ஒருவருக்கு 20 மில்லியன் ரூபா வீதம் 40 மில்லியன் ரூபா (சுமார் 133,000 அமெரிக்க டொலர்) முழுத் தொகையையும் அரசுடைமையாக்குமாறு கோட்டை நீதவான் பசந்த அமரசேன உத்தரவிட்டார்.
மீதித் தொகைக்கு ஒக்டோபர் 14 வரை அவகாசம்
பிணை பிணைணையாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இன்றைய தினம் 20 மில்லியன் ரூபாவைச் செலுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும், மீதித் தொகையைச் செலுத்துவதற்குச் சலுகை வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரினர்.
அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதவான், 20 மில்லியன் ரூபா பணத்தை இன்றைய தினமே நீதிமன்றத்தில் ஒப்படைக்க அனுமதி வழங்கினார்.
மீதி 20 மில்லியன் ரூபா பணத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் செலுத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றத்தைத் தவிர்த்தலும் பிணையாளர்களின் விளக்கமும்
வழக்கின் முதலாவது சந்தேகநபரான முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன பிணையில் இருந்தபோது முன்னர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருந்தார்.
தனது கணவரின் மறைவையடுத்துத் தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள கடும் பயம் காரணமாக இரண்டாவது சந்தேகநபர் நாட்டிற்கு வருவதைத் தவிர்த்து வருவதாகவும், அவர் தற்போது தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டுள்ளதாகவும் பிணையாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
இருப்பினும், சந்தேகநபர் உயிரிழப்பதற்கு முன்னிருந்தே இரண்டாவது சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு ஆஜராகாது வெளிநாட்டிற்குச் சென்றிருந்ததால், பிணையாளர்களுக்கு மேலும் விசேட சலுகைகளை வழங்க முடியாது என நீதவான் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச பிடியாணை மற்றும் மேலதிக விசாரணைகள்
நீதிமன்றத்திற்கு ஆஜராகாது தவிர்த்து வரும் பிரியங்கா நியோமாலி விக்கிரமசிங்கவைக் கைது செய்வதற்காக ஏற்கனவே திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அது சர்வதேச பொலிஸாருக்கும் (Interpol) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்கள் வருமாறு:
-
வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் சமீந்திர ராஜபக்ஷவிற்கும் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்குப் புதிய விமானங்களை மீளப்பெறும்போது இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
-
2018 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஜே.சி. வலிஅமுன குழு அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
-
இந்த வழக்கு மீண்டும் ஒக்டோபர் 14 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


