-
47 ஆண்டுகள் பழமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கி, சர்வதேச தரத்திற்கு இணையான புதிய சட்டக் கட்டமைப்பு.
-
தொழிற்சங்க உரிமைகள் மற்றும் ஜனநாயகப் போராட்டங்கள் பயங்கரவாதமாகப் பேரினப்படுத்தப்படாது என விசேட பிரிவு சேர்ப்பு.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் நடைமுறையிலிருந்த 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை (PTA) முற்றாக நீக்கி, அதற்குப் பதிலாக புதிய சட்டக் கட்டமைப்பை நிறுவுவதற்காக தயாரிக்கப்பட்ட "அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்" (Protection of the State from Terrorism Bill) அரசாங்கத்தினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் வழிகாட்டலின் கீழ் அமைச்சினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் முதன்மை நோக்கங்கள்
நவீன உலகில் உருவெடுக்கும் சிக்கலான தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்புச் சவால்களுக்கு ஏற்ப இந்தப் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிலப்பரப்பிற்குள்ளோ அல்லது வெளியிலோ இடம்பெறும் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதும், இலங்கை நிலப்பரப்பையோ அல்லது நாட்டின் பிரஜைகளையோ சர்வதேச பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதும் இதன் முதன்மை நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவொன்று பொதுமக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் கருத்துக்களைப் பெற்று இந்தச் சட்டமூலத்தைத் தயாரித்ததாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனநாயக சுதந்திரமும் மனித உரிமைகள் பாதுகாப்பும்
பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் முன்வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டு யாதெனில், அமைதியான அரசியல் நடவடிக்கைகளை அடக்குவதற்கு அதனைப் பயன்படுத்த முடியும் என்பதாகும்.
புதிய சட்டமூலம் அந்த விடயத்திற்குத் தெளிவான சட்ட விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி, அமைதியான போராட்டங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள், ஊடகவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள், சட்டப் பிரதிநிதித்துவங்கள் மற்றும் சிவில் சமூக நடவடிக்கைகள் தனியாக நோக்கப்படும் போது பயங்கரவாதக் குற்றங்களாகக் கருதப்பட மாட்டாது என்ற தெளிவான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கைதுகளும் நீதித்துறை மேற்பார்வையும்
புதிய சட்டமூலத்தின்படி, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்படும்போது அதற்கான காரணங்கள் அவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதுடன், அவரது நெருங்கிய குடும்பத்தினருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் அது குறித்து அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாதாரண நடைமுறையின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர் 48 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவுகளை மறுஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் சுயாதீன மறுஆய்வுக் குழுவொன்றை நிறுவுவதற்கும் யோசன முன்வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளின் முக்கியத்துவம்
இந்தச் சட்ட மறுசீரமைப்பு இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு நேரடியாகப் பங்களிப்பதாகும். முக்கியமாக, இலங்கையின் ஆடைத் துறை உள்ளிட்ட ஏற்றுமதித் துறைக்கு மிகவும் தீர்மானமிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகையைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதற்கு நாட்டின் மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைவாக இருக்க வேண்டும். அத்துடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் பழைய சட்டத்திற்குப் பதிலாக நவீன சட்ட அமைப்பை அறிமுகப்படுத்துவது காரணமாக அமையும்.
இந்தச் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தில் இதன் அரசியலமைப்புத் தன்மையை ஆராயும் மற்றும் பாராளுமன்ற விவாதங்களை நடத்தும் ஜனநாயக செயல்முறைகள் ஆரம்பமாகும்.


