ஆவணப்படத்தை அடிப்படையாகக் கொண்டு கத்தோலிக்க மதகுரு ஒருவர் செய்த முறைப்பாடே முன்னாள் உளவுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயஸ்தானிகர் அலுவலகத்திற்கு (OHCHR) இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதிகள் அலுவலகம் 2026 செப்டம்பர் 20 ஆம் திகதியிட்டு இந்த உத்தியோகபூர்வ ஆவணத்தை அனுப்பியுள்ளது.
அதேச்சாதிகாரமான கைதுகள், சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் மற்றும் சுகாதார நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள் நால்வர் 2026 ஜூலை 20 ஆம் திகதி வெளியிட்ட கூட்டு அவசர அறிக்கைக்குப் பதிலளிக்கும் முகமாகவே இந்த விளக்கமளிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணைக்கு மூலக் காரணமான முறைப்பாடும் சட்டப் பின்னணியும்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புப் பிரிவு, 2024 அக்டோபர் 11 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற தொடர்புடைய முறைப்பாட்டைக் கருத்திற் கொண்டே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் B 36882/2024 எனும் இலக்கத்தின் கீழ் தகவல்களைப் பதிவுசெய்து, நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
2026 பிப்ரவரி 25 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் விடுக்கப்பட்ட தடுத்துவைப்பு உத்தரவுக்கு அமைவாகவே சலே கைது செய்யப்பட்டார் என்றும், அது சாட்சியங்கள் குறித்த புறவயமான மதிப்பீட்டின் பின்னர் சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
எந்தவொரு நபரும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என வலியுறுத்தும் அரசாங்கம்; அரசியல், இன அல்லது மத அடிப்படையில் இந்தத் தடுத்துவைப்பு மேற்கொள்ளப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளது.
சாட்சியங்கள் பற்றிய கேள்வியும் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளும்
தடுத்துவைப்பு சட்டப்பூர்வமானது எனத் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், சலே குற்றமொன்றில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதைக் காட்டும் குறிப்பிட்ட சாட்சியங்கள் எவை என்பது பற்றித் தூதரக மட்டத்திலான இந்த ஆவணத்தில் விரிவாக வெளிப்படுத்தப்படவில்லை என இராஜதந்திர அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நடைமுறையிலுள்ள விசாரணையொன்றின் சாட்சியங்களை இராஜதந்திரத் தொடர்பாடலொன்றின் ஊடாக முழுமையாக வெளிப்படுத்தாதிருப்பது வழக்கமான நடைமுறையாகும் என்ற போதிலும், தடுத்துவைப்பு உத்தரவை நியாயப்படுத்தும் காரணிகள் குறித்த சுயாதீன மதிப்பீடொன்றிற்கு இதன் மூலம் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இந்தக் கைதைச் சவாலுக்கு உட்படுத்திச் சுரேஷ் சலே சார்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் CA/Writ/232/2026 எனும் ரீட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை இடம்பெற்று வருவதால், இது குறித்த விடயங்கள் நீதிமன்றத்தின் கவனத்தில் (sub judice) உள்ளதை அரசாங்கம் ஐநாவிடம் வலியுறுத்தியுள்ளது.
நடைமுறைச் சட்டப் பாதுகாப்புகள் (Procedural Safeguards)
கைது நடவடிக்கையின் போது சுரேஷ் சலேயின் சட்டப்பூர்வ உரிமைகள் உறுதி செய்யப்பட்டதாக அரசாங்கத்தின் ஆவணம் விவரிக்கிறது:
-
கைதுக்கான காரணங்கள் தெளிவுபடுத்தப்பட்டு, இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மனைவி உள்ளிட்ட உறவினர்களுக்குக் காண்பிக்கப்பட்டு, அது தொடர்பான இரசீது மனைவியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு (HRCSL) எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரியிடம் (JMO) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
-
வெளி உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு (incommunicado) தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் அரசாங்கம், ஒவ்வொரு புதன்கிழமையிலும் வழக்கறிஞரின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும், வெள்ளிக்கிழமைகளில் தொலைபேசி வாயிலாகவும் சனிக்கிழமைகளில் நேரடியாகவும் குடும்பத்தினரைச் சந்திப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
-
வழக்கறிஞர்களுடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடல்கள் இரகசிய ஆவணங்களாகக் கருதப்படுவதால், அவை வழக்கு விசாரணையொன்றில் சாட்சியங்களாகப் பயன்படுத்தப்பட முடியாது என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
-
கோட்டை நீதவானும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுத்துவைப்பு மையத்திற்கு நேரில் சென்று சிறைக்கூடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
மருத்துவச் சிகிச்சைகளும் சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் பற்றிய நிலைப்பாடும்
சித்திரவதையைத் தடுக்கும் அரசியலமைப்பின் 11 ஆம் பிரிவு மற்றும் 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கச் சட்டத்தை நினைவூட்டும் அரசாங்கம், சலேவிற்கு எதிராக எந்தவொரு மனிதநேயமற்ற நடத்தையோ கொடுமைகளோ இடம்பெற்றதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. சித்திரவதையின் மூலம் பெறப்படும் எந்தவொரு வாக்குமூலமும் சட்டத்தின் முன் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
சலே பெற்ற நிபுணத்துவ மருத்துவச் சிகிச்சைகள் குறித்தும் அரசாங்கம் தகவல்களை முன்வைத்துள்ளது:
-
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும் 2026 ஏப்ரல் 29 ஆம் திகதியும் கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
காது மற்றும் பல் குறைபாடுகள், தோல் நோய்கள், ஊட்டச்சத்துப் பிரச்சினைகள் மற்றும் நரம்பியல் நோய்கள் தொடர்பாகத் தேசிய வைத்தியசாலையின் சிறப்பு மருத்துவர்களிடமும், கண் வைத்தியசாலையிலும் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நரம்பியல் மதிப்பீட்டிற்குப் பின்னர் MRI பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் சிறப்பு மருத்துவரிடமும் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சலே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் மருத்துவ ஆலோசனைகளின் பேரில் தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் பதில் அனுப்பப்பட்ட சந்தர்ப்பம் வரை அவர் தங்கி நின்று சிகிச்சை பெற்றுவந்தார்.
வைத்தியசாலையில் இருந்தபோது அவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை என்றும், வைத்தியசாலையிலிருந்து மீண்டும் தடுத்துவைப்புக் காவலுக்கு எடுப்பது மருத்துவப் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்றும் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு உறுதிளித்துள்ளது.


