Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

கொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த பின்னரும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரல்!

T

The Leader Desk

அக்டோபர் 21, 2026 • 4:19 AM

கொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த பின்னரும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் மைல்வாகனம் நிமலராஜன் நினைவாக இருபத்தாறு ஆண்டுகள் கடந்தும் நீதி வழங்கப்படாத நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்ட வடக்கில் நினைவுகூரப்பட்டுள்ளார்.
  • பொலிஸ் விசாரணைகளின் தோல்வியை வெளிப்படுத்திய அறிக்கை நிமலராஜன் படுகொலை தொடர்பான விசாரணைகளின் தோல்விகளைப் பரிசீலிக்கும் அந்த அறிக்கையின் தமிழ்ப் பிரதி 2025 செப்டம்பர் 7 ஆம் திகதி யாழ்ப்பாண ஊடக மையத்தில் வெளியிடப்பட்டது.
  • காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சங்கம் அந்த அறிக்கையை மும்மொழிகளிலும் செப்டம்பர் 8 ஆம் திகதி கொழும்பில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.
  • இந்தச் சமர்ப்பிப்பின் காரணமாக 2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரசியல் பேரணியொன்றின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக மற்றொரு கைது 2023 இல் இடம்பெற்றது.
எழுத்து அளவு:

கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் மைல்வாகனம் நிமலராஜன் நினைவாக இருபத்தாறு ஆண்டுகள் கடந்தும் நீதி வழங்கப்படாத நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்ட வடக்கில் நினைவுகூரப்பட்டுள்ளார்.

அச்சமற்ற, எளிய ஊடகவியலாளராகப் போற்றப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் நிசப்தமாக்கப்பட்ட மைல்வாகனம் நிமலராஜன் மலர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றி 2026 அக்டோபர் 19 திங்கட்கிழமை யாழ்ப்பாண ஊடக மையம், வடமராட்சி ஊடக மாளிகை மற்றும் முல்லைத்தீவு ஊடக மையம் ஆகியவற்றால் நினைவுகூரப்பட்டுள்ளார்.

தமது தொழிற்துறைச் சகா மைல்வாகனம் நிமலராஜனை நினைவு கூர்வதற்காக யாழ்ப்பாண ஊடக மையத்தின் ஊடகவியலாளர்களுடன் தெற்காசிய ஊடகப் பெண்களுக்கான அமைப்பும் இணைந்து கொண்டிருந்ததாக மாகாண நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், பெருமளவில் சிங்கள மொழியிலும் வடக்கின் நிலவரங்களைச் செய்தி வெளியிட்ட நிமலராஜன் தெற்கிலுள்ள எந்தவொரு ஊடக அமைப்பினாலும் நினைவுகூரப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

யுத்த களத்தின் உண்மையை உலகிற்கு வெளிப்படுத்திய குரல்

பேரழிவுமிக்க யுத்தமும், அதனால் இன்னலுறும் வடக்கின் தமிழ் மக்களும் குறித்த யுத்தப் பீடிக்கப்பட்ட பூமியிலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் ஊடாக உலகின் கவனத்திற்குக் கொண்டுவருவதில் ஊடகவியலாளர் மைல்வாகனம் நிமலராஜன் வெற்றியீட்டினார்.

பிபிசி (BBC), மற்றும் வீரகேசரி உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் செய்திகளை வழங்கி வந்த நிமலராஜன், 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் திகதி இரவில் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் வைத்து, யுத்தப் பீடிக்கப்பட்ட மக்கள் குறித்து வீரகேசரி பத்திரிகைக்குக் கட்டுரை ஒன்றினை எழுதிக்கொண்டிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியின் காலத்தில் இடம்பெற்ற இப்படுகொலை தொடர்பில் இன்றும் நீதி வழங்கப்படவில்லை.

இலங்கை அரசுப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத தமிழ் ஊடகவியலாளர் மைல்வாகனம் நிமலராஜன் படுகொலை தொடர்பான விசாரணைகளின் தோல்விகளை ஆராயும் புதிய அறிக்கையொன்று 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வடக்கிலும் தெற்கிலும் வெளியிடப்பட்டிருந்தது.

பொலிஸ் விசாரணைகளின் தோல்வியை வெளிப்படுத்திய அறிக்கை

நிமலராஜன் படுகொலை தொடர்பான விசாரணைகளின் தோல்விகளைப் பரிசீலிக்கும் அந்த அறிக்கையின் தமிழ்ப் பிரதி 2025 செப்டம்பர் 7 ஆம் திகதி யாழ்ப்பாண ஊடக மையத்தில் வெளியிடப்பட்டது. காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சங்கம் அந்த அறிக்கையை மும்மொழிகளிலும் செப்டம்பர் 8 ஆம் திகதி கொழும்பில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

தென்னாபிரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட இலங்கையின் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச இயக்கம் (ITJP) மற்றும் REDRESS இணைந்து எழுதிய 64 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையானது, பிபிசியின் முன்னாள் நிருபர் நிமலராஜன் மைல்வாகனம் படுகொலை தொடர்பாக இலங்கைப் பொலிஸ் விசாரணைகள் குறித்த தடயவியல் பகுப்பாய்வு ஒன்றை முன்வைத்திருந்தது.

அறிக்கை வெளியீட்டிற்கு இணையாக ITJP மற்றும் REDRESS இணைந்து வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில், திட்டமிட்ட முறையில் ஊடகவியலாளர்களின் கொலையாளிகளைப் பாதுகாப்பதற்குச் செயற்பட்டுள்ள இலங்கையில், 2000 ஆம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற பிபிசி யாழ்ப்பாண நிருபர் மைல்வாகனம் நிமலராஜன் படுகொலை தொடர்பான பொலிஸ் விசாரணையின் தோல்வி குறித்து அந்த அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 மற்றும் 2010 களுக்கு இடையில் உள்நாட்டுப் போரைச் செய்தி சேகரிப்பதில் குறைந்தது இலங்கையின் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் தொழிலாளர்கள் 44 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், இன்றுவரை அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய எந்தவொரு குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை என்பதும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"இந்த அளவிலான தண்டனையின்மை, தொடர்ச்சியாகத் தங்களது வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தும், சுய தணிக்கைகளைக் கையாளும் அல்லது நாடு கடந்து சேவையாற்றும் நாட்டில் எஞ்சியுள்ள செய்தி அறிக்கையாளர்களுக்கும் பயங்கரமான செய்தியை அனுப்புகிறது" எனத் தென்னாபிரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூகா (Yasmin Sooka) குறிப்பிடுகிறார்.

சந்தேகநபர்களின் விடுவிப்பும் வெளிநாட்டு விசாரணைகளும்

மைல்வாகனம் நிமலராஜன் மீது அவரது வீட்டிற்குள் வைத்துக் கையெறி குண்டு வீசி சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த அரசாடைகளுடன் இணைந்திருந்த ஈபிடிபி (EPDP) துணை இராணுவக் குழு உறுப்பினர்கள் 2003 ஆம் ஆண்டில் வவுனியா நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

இப்படுகொலை தொடர்பில் நேரடியாகச் சந்தேகிக்கப்படும் ஈபிடிபி பிரமுகரான நெப்போலியன் என அழைக்கப்படும் செபஸ்டியம்பிள்ளை ரமேஷ் பொலிஸ் விசாரணைகள் எவையும் இன்றி நாட்டைவிட்டுத் தப்பியோடி பிரித்தானியாவில் புகலிடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

2017 இல் ITJP மற்றும் REDRESS ஆகியோரால் போர்ச் குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் லண்டன் மாநகரப் பொலிஸின் பயங்கரவாத எதிர்ப்பு ஆணைக்குழுவின் கீழ் உள்ள சிறப்புப் பிரிவொன்றிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துருவொன்றைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சமர்ப்பிப்பின் காரணமாக 2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரசியல் பேரணியொன்றின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக மற்றொரு கைது 2023 இல் இடம்பெற்றது.

"சம்பந்தப்பட்ட நாடு செயற்படத் தவறும் போது, பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச் செய்வதற்காக ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு முக்கியமான பங்களிப்பை ஆற்ற முடியும் என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது" என REDRESS இன் பணிப்பாளர் ரூபர்ட் ஸ்கில்பெக் (Rupert Skilbeck) கடந்த ஆண்டு குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...