தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் இந்நாட்டிலுள்ள குடும்பங்களுக்கு அனுப்பும் பணத்திலிருந்து எத்தகைய வரியும் அறவிடப்பட மாட்டாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அச்சப்படத் தேவையில்லாத வரிச் செய்தி
வெளிநாட்டுத் தொழில்களில் ஈடுபடுவோர் இந்நாட்டிற்கு அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படவுள்ளதாகப் கடந்த நாட்களில் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பரப்பப்பட்டவை முற்றிலும் அசத்தியமான பிரசாரங்களாகும்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இது குறித்துத் தெளிவுபடுத்திய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நந்தன குமார குறிப்பிடுகையில், அப் பணத்திலிருந்து எத்தகைய வடிவத்திலுமான வரியும் அறவிடப்படமாட்டாது எனத் தெரிவித்தார்.
தங்கள் குடும்பத்தினருக்காகக் கடின உழைப்புடன் உழைத்து அனுப்பும் பணம் மீது இந்நாட்டின் வருமான வரிச் சட்டம் எக்காலத்திலும் செல்வாக்குச் செலுத்தாது.
பணம் அனுப்பும் போது ஏன் வரி விதிக்கப்படுவதில்லை?
அவர்கள் தொழிலில் ஈடுபடுவதும் தமது உழைப்பைச் செலவிடுவதும் இலங்கைக்கு வெளியிலுள்ள நாட்டிலாகும் என்பதால், இந்நாட்டின் வரிச் சட்டம் அதற்குப் பொருந்தாது.
வெளிநாட்டில் சேவையாற்றும் இலங்கையர் ஒருவர் பொதுவாக இந்நாட்டில் ‘குடியிருப்பற்றவர்’ (Non-resident) அல்லது இலங்கைக்கு வெளியில் வசிப்பவர் என்றே கருதப்படுவார்.
அவர் சேவையாற்றும் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக வரிச் செலுத்துதல்கள் இடம்பெறக்கூடும் என்பதால், மீண்டும் இலங்கையில் அந்தப் பணத்திற்கு வரி அறவிடும் அதிகாரம் சட்டரீதியாக இல்லை.
15% வரி யாரிடமிருந்து அறவிடப்படுகிறது?
இங்கு பலரது மத்தியிலும் தவறான புரிதலொன்று ஏற்பட்டிருந்தமைக்கு இந்நாட்டிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சேவை வழங்குவோர் தொடர்பான சட்டமே காரணமாகும்.
இலங்கைக்குள் வாழ்ந்துகொண்டு, கணினி அல்லது இணையம் ஊடாக வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சேவை வழங்கிப் பணம் சம்பாதிக்கும் நபர்களுக்கு மாத்திரமே 15% வருமான வரி பொருந்தும்.
நாட்டை விட்டு வெளியேறி மத்திய கிழக்கு உள்ளிட்ட ஏனைய நாடுகளில் தொழிலாற்றிப் பணம் அனுப்பும் எந்தவொரு தொழிலாளிக்கும் இவரி எப்பாகத்திலும் பொருந்தாது.


