விமானங்களை கொள்முதல் செய்த நடவடிக்கை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயரை தொடர்புபடுத்துவதற்கு எந்தவொரு எழுத்துப்பூர்வ சான்றுகளும் இல்லை என அவரது சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த நாட்களில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்களை சில தரப்பினர் திரிபுபடுத்தி, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பிரச்சாரம் செய்து வருவதாக சுட்டிக்காட்டினார்.
மின்னஞ்சல் செய்திகள் மற்றும் விசாரணை அறிக்கைகள்
விமான நிறுவனக் கொள்முதல் தொடர்பில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் பரிமாற்றங்கள் அனைத்தும், குறித்த நிறுவனத்தின் உள்நாட்டு அதிகாரிகளுக்கு இடையே மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், அதில் எவ்விடத்திலும் நாமல் ராஜபக்ஷ அல்லது அவரது தலையீடு குறித்து குறிப்பிடப்படவில்லை என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஷமீந்திர ராஜபக்ஷவின் வங்கிப் கணக்கில் லஞ்சப் பணம் வைப்புச் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடக நெட்வொர்க்குகளில் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும் பிரதிவாதி தரப்புச் சட்டத்தரணிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சாட்சியங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் கூட்டுக் குற்றவாளிச் சாட்சியம்
இந்த விசாரணை நடவடிக்கையில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தொழிலதிபர் நிமல் பெரேராவினால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குமூலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சட்டத்தரணி மனோஜ் கமகே, சாட்சியச் சட்டத்தின் கீழ் அத்தகைய வாக்குமூலத்தின் சட்டப்பூர்வத் தன்மை குறித்தும் விளக்கமளித்தார்:
-
சட்டப்பூர்வ நிலைப்பாடு: "இலங்கை சாட்சியங்கள் கட்டளைச் சட்டத்தின்படி, ஒரு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றக் கூட்டாளி ஒருவரின் சாட்சியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்தால் ஒருவரை குற்றவாளியாகத் தீர்ப்பளிக்க முடியாது. அதற்கு சுயாதீனமான வெளிச் சான்றுகள் அவசியமாகும்."
-
அரசியல் பழிவாங்கல்: "இங்கு நாமல் ராஜபக்ஷவை இலக்கு வைத்து அரசியல் பழிவாங்கல் மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது."
சர்வதேச விசாரணைகளும் உள்ளூர் சட்ட நடவடிக்கைகளும்
எயார்பஸ் கொள்முதல் தொடர்பில் பிரித்தானியாவின் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (Serious Fraud Office - SFO) நடத்திய விசாரணை அறிக்கைகள் மூலம், உலகின் பல நாடுகளின் விமானக் கொள்முதல் தொடர்பான தகவல்கள் வெளிவந்தன. அதில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களை கொள்முதல் செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளும் அடங்கியிருந்தன.
இருப்பினும், அந்த சர்வதேச அறிக்கைகளில் உள்ள விடயங்களுக்கும் தற்போது உள்ளூரில் நடத்தப்படும் விசாரணைகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி மனோஜ் கமகே, பொதுச் சொத்துச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சி அரசியல் செயல்பாட்டாளர்களை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சான்றுகள் மற்றும் விசாரணை அதிகாரிகளின் சமர்ப்பணங்களின் அடிப்படையில், வழக்கின் மேலதிக விசாரணைகள் அடுத்துவரும் நாட்களில் மீண்டும் அழைக்கப்படவுள்ளன.


