முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ வெளிநாடு சென்றதாக வெளியான ஊடக செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக்ஷ குடும்பத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (16) அதிகாலை சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது அவசர சுகாதாரத் தேவைக்காக என்றும், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேரடியாக விமான நிலையத்திற்கு வந்தடைந்தார் என்றும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் நடந்தது என்ன?
ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் தெளிவுபடுத்தியதன் படி, இன்று அதிகாலை 12.50 மணிக்கு புறப்படவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SQ-469 என்ற விமானத்தில் அவர் ஏறத் தயாரான போது, விமான நிலைய அதிகாரி ஒருவரால் எதிர்பாராத விதமாகக் கடிதம் ஒன்று அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் FCID பிரிவிடமிருந்து எவ்வித உத்தியோகபூர்வ அழைப்பாணையோ அல்லது எழுத்துப்பூர்வ அறிவித்தலோ அவருக்குக் கிடைத்திருக்கவில்லை என்றும், அவர் நாட்டிலிருந்து புறப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
எனவே, விசாரணைகளைத் தவிர்ப்பதற்காகவே அவர் நாட்டிலிருந்து வெளியேறினார் எனச் பரப்பப்படும் தகவல்கள் உண்மையற்றவை என்பதே ராஜபக்ஷ குடும்பத்தின் நிலைப்பாடாகும்.
பின்னணியில் உள்ள விசாரணைகள்
கடந்த அரசாங்கக் காலத்தில் நடைமுறையிலிருந்த ‘சிறிலிய சவிய’ கணக்கின் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் ரிட்ஜ்வே ஆர்யா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாகக் கிடைத்த மருத்துவ உபகரணங்கள் தொடர்பான பழைய விசாரணைக்கு அமைவாக, எதிர்வரும் நாளில் அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் FCID பிரிவிற்கு அறிவுறுத்தியிருந்தது. இதற்கமைய, வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி FCID முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்படவிருந்ததாக ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், குடும்பப் பேச்சாளர் குறிப்பிட்டது போல், இந்த விமானப் பயணம் மேற்கொள்ளப்பட்ட போது ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எதிராக நீதிமன்றத்தால் எவ்வித வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டிருக்கவில்லை. அவர் ஒரு சாதாரண பயணியாகச் சட்டப்பூர்வமான பரிசோதனைகளுக்குப் பின்னரே விமானத்தினுள் சென்றுள்ளார்.


