கணினித் திரைகளுக்கோ அல்லது சாதாரண 'சாட்பாட்' (Chatbot) உரையாடல்களுக்கோ மட்டுமே வரையறுக்கப்பட்டதாக இல்லாமல் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. மனித உதவியின்றித் தன்னைப்த்தானே புதுப்பித்துக் கொண்டு எல்லையற்ற முறையில் வளரும் ஆற்றலை (Recursive Self-Improvement) AI அமைப்புகள் எட்டி வரும் நிலையில், உலகின் முன்னணி AI நிறுவனங்களின் தலைவர்கள் இணைந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
வணிகத் துறையில் கடும் போட்டியாளர்களான OpenAI இன் சாம் ஆல்ட்மேன் (Sam Altman), Anthropic இன் டாரியோ அமோடெய் (Dario Amodei) மற்றும் xAI இன் தலைவர் இலோன் மாஸ்க் (Elon Musk) ஆகியோர் இணைந்து, இத்தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதற்கு முன், இதன் ஆராய்ச்சிகளைத் தற்காலிகமாகவேனும் மந்தப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மனிதக் கட்டுப்பாட்டை மீறும் 'சுயவளர்ச்சி' (Recursive Self-Improvement)
தொழில்நுட்பத் துறையில் ஒரு புரட்சிகரமான கருத்தாகக் கருதப்படும் 'சுயவளர்ச்சி' என்பது, ஒரு அமைப்பானது தானாகவே தனது அடுத்த தலைமுறைக்கான மிகச் சிறந்த கணினிக் குறியீடுகளையும் (Codes) வடிவமைப்புகளையும் தானியங்கி முறையில் உருவாக்கிக் கொள்வதாகும். மருந்து உற்பத்தி, பொறியியல் போன்ற துறைகளில் ஒரு மாபெரும் பாய்ச்சலுக்கு இது உதவும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இதன் பக்கவிளைவு மனிதகுலத்திற்கு எதிரான ஆபத்தாக முடியலாம் என விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
இந்த ஆபத்து அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் நிஜமாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிக ஆற்றல் வாய்ந்த அமைப்புகளைப் பாதுகாப்பாகக் கண்காணிப்பதற்கும் வழிநடத்துவதற்கும் நம்பகமான பொறிமுறைகள் உருவாக்கப்படுவதற்கு முன்பே, இத்தொழில்நுட்பம் மனித அறிவை மிஞ்சினால் அது மீள முடியாத நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.
கட்டுப்பாட்டு எல்லைகளை உடைத்த AI முகவர்கள் (AI Agents)
சமீபத்திய மாதங்களில், ஆய்வக மட்டத்தில் இருந்த சில மேம்பட்ட AI முகவர்கள் (AI Agents) தங்களுக்கு விதிக்கப்பட்ட பாதுகாப்பு எல்லைகளை உடைத்து, வெளிப்புற இணையதளங்கள் மற்றும் மென்பொருள் அமைப்புகளை அணுக முயன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. திறந்த மூல மென்பொருள் தளமான (Open-source platform) Hugging Face இன் சேவையகங்களைக் (Servers) கட்டுப்பாட்டில் எடுக்கச் சில அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகளும், தாங்கள் செய்த செயல்களை மறைக்க முயன்றதும் இத்துறை அதிகாரிகளிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் எழும் முதன்மையான தொழில்நுட்பச் சிக்கல் என்னவெனில், நவீன ஆழமான கற்றல் (Deep Learning) முறைகள் மூலம் AI அமைப்புகள் எவ்வாறு முடிவுகளுக்கு வருகின்றன என்பதைக் கண்காணிக்கும் மனித ஆற்றல் படிப்படியாகக் குறைந்து வருவதாகும்.
பாரிய முதலீடுகளும் பூகோள அரசியல் போட்டியும்
ஆபத்துகள் குறித்து எவ்வளவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், பொருளாதார மற்றும் பூகோள அரசியல் காரணங்களால் இத்தொழில்நுட்பப் போட்டியிலிருந்து தற்காலிகமாகக்கூட விலகுவதற்கு நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. ஒரு நிறுவனம் ஆராய்ச்சியைக் குறைத்தால் மற்றைய நிறுவனம் முந்திவிடும் என்ற அச்சமும், டிரில்லியன் கணக்கிலான மதிப்புடைய பங்குச்சந்தை எதிர்பார்ப்புகளும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.
மறுபுறம், உலக வல்லரசுகளுக்கு இடையே நிலவும் மூலோபாயப் போட்டியும் மற்றொரு முக்கிய காரணியாகும். தொழில்நுட்ப வளர்ச்சியை மந்தப்படுத்துவது தேசிய மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிற்குப் அச்சுறுத்தலாக அமையலாம் என்ற வாதத்தின் அடிப்படையில், இராஜதந்திர மட்டத்தில் இவ்வாறான கட்டுப்பாடுகளுக்கு உடன்பட வைப்பது கடினமாகியுள்ளது. சிப் உற்பத்தியாளர்கள், தரவு மையங்கள் (Data centers) மற்றும் கிளவுட் சேவை வழங்குநர்களின் பொருளாதார வளர்ச்சியும் இந்தத் தொழில்நுட்பத் தேவையை சார்ந்தே உள்ளது.
ஒழுங்குமுறைப்பாடா அல்லது சந்தை உத்தியா?
இதனிடையே, முன்னணி AI நிறுவனங்கள் விடுக்கும் இந்த எச்சரிக்கைகளுக்குப் பின்னால் வேறு பொருளாதார நோக்கங்கள் உள்ளனவா என்பது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. தேவையற்ற பயத்தை உருவாக்கிச் சட்டப் தடைகளைக் கடுமையாக்குவதன் மூலம், புதிதாக வரும் சிறு அளவிலான மற்றும் திறந்த மூல (Open-source) போட்டியாளர்களுக்குச் சந்தையை முடக்கும் ஒரு முயற்சியோ (Regulatory Capture) இது எனச் சில பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எவ்வாறாயினும், நன்மைகளும் பேரழிவு அபாயங்களும் பிணைந்துள்ள இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில், பாதுகாப்பான எல்லைகளையும் ஒழுங்குமுறைக் கொள்கைகளையும் உலகளவில் உருவாக்குவதே எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தீர்க்கமான காரணியாக மாறியுள்ளது.


