பரிவர்த்தனைகளைச் சட்டப்பூர்வமாக்கி, அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், எதிர்காலத்தில் வரவிருக்கும் சர்வதேச நிதி மதிப்பீடுகளுக்கு மத்தியில், இது நாட்டின் நிதி ஒழுக்கத்திற்கு ஒரு தீர்க்கமான பரிசோதனையாகும்.
சர்வதேச நிதிச் சந்தையில் இன்று அதிவேகமாகப் பரவி வரும் கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் சொத்துக்களை (Virtual Assets) இந்நாட்டின் நிதி அமைப்பிற்குள் உத்தியோகபூர்வமாக ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் புதிய சட்டக் கட்டமைப்பையொன்றை உருவாக்கி வருகின்றது.
பணச்சலவை மற்றும் சட்டவிரோதப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகச் சர்வதேச நிறுவனங்களுக்கு முன்பாக இலங்கை முகம் கொடுக்கும் தீர்க்கமான மதிப்பீட்டிற்கு முன்னர் இந்த மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
புதிய சட்டத்தினால் என்ன நடக்கும்?
அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற கொள்கைக் கட்டமைப்பிற்கு இணங்க, கிரிப்டோ பரிவர்த்தனை மையங்கள் (Exchanges) மற்றும் அந்தச் சொத்துக்களைப் பாதுகாப்பாக வைப்பிலிட்டு வைக்கும் நிறுவனங்களை (Custodians) ஒழுங்குபடுத்தும் அடிப்படை அதிகாரம் இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு (SEC) வழக்கப்பட்டுகின்றது.
இது தொடர்பாகப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்கள் தயாரிக்கப்பட்டு வரும் அதேவேளையில், மத்திய வங்கி (CBSL), நிதி நுண்ணறிவுப் பிரிவு (FIU) மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) என்பனவும் ஒரு ஒருங்கிணைந்த பொறிமுறையில் இணையவுள்ளன.
இங்கு சாதாரண வாடிக்கையாளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய சில பிரதான விடயங்கள் உள்ளன:
-
கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வப் பணமல்ல (Legal Tender): சாதாரண ரூபாயைப் போன்று அன்றாடப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கோ அல்லது கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கோ இதனைச் சட்டப்பூர்வப் பணமாகப் பயன்படுத்த முடியாது.
-
உள்நாட்டுக் கொடுப்பனவுகள் கட்டுப்படுத்தப்படும்: ஆரம்ப கட்டத்தில் இந்நாட்டுச் சந்தைக்குள் டிஜிட்டல் சொத்துக்களைக் கொடுப்பனவு ஊடகமாகப் பயன்படுத்துவது வரம்பிற்குட்பட்டதாக இருக்கும்.
-
சேவை வழங்குநர்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்படுவர்: இந்நாட்டின் பதிவாகும் உத்தியோகபூர்வ பரிவர்த்தனை மையங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் மட்டுமே முதன்மையாக ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படும்.
ஏன் இந்த அவசரச் சட்ட மறுசீரமைப்புகள்?
இலங்கை எதிர்காலத்தில் பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்கு எதிரான சர்வதேச நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கு (Mutual Evaluation) முகம் கொடுக்கவுள்ளது.
கறுப்புப் பணத்தைச் வெள்ளையாக்குவதைத் தடுப்பதற்கான உலகளாவிய 'சாம்பல் பட்டியல்களில்' (Grey Lists) நாடு சேர்க்கப்படுவதைத் தவிர்க்க வேண்டுமானால், ஒழுங்குபடுத்தப்படாத மெய்நிகர் சொத்துக்கள் மூலம் ஏற்படக்கூடிய நிதி முறைகேடுகளைக் கட்டுப்படுத்த பலமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நிரூபிக்க வேண்டும். அரச நிறுவனங்களுக்கும் தனியார் நிதித் துறைக்கும் இடையே உடனடித் தகவல் பரிமாற்றம் இல்லாவிட்டால் அமைப்பின் பலவீனங்கள் வெளிப்படக்கூடும் என நிதி நுண்ணறிவுப் பிரிவும் சர்வதேச நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவதானிகள் பார்க்கும் நடைமுறைச் சவால்கள்
சட்ட மூலங்களைத் தயாரிப்பதை விரைவுபடுத்துவதற்குச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்ட போதிலும், சட்டங்களை உருவாக்குவதை விட அதனைத் தரைமட்டத்தில் நடைமுறைப்படுத்துவதே பாரிய சவாலாகும் எனப் பொருளாதார மற்றும் நிதி அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முதலாவது, பிணையங்கள் ஆணைக்குழுவிற்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான பாடப் பரப்பு எல்லைகள் துல்லியமாகப் பிரித்தறியப்படாவிட்டால், கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது நிறுவன மோதல்கள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இரண்டாவது, இணையம் ஊடாக வெளிநாடுகளில் செயற்படும் பதிவாகாத கிரிப்டோ தளங்களைக் (Unlicensed offshore platforms) கட்டுப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிரமமாகும்.
டிஜிட்டல் சொத்துக்களுக்குச் சொந்தக்காரரை அடையாளம் காணுதல் (KYC), சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை உடனடியாக அறிக்கையிடுதல் மற்றும் வரித் தவிர்ப்பைத் தடுத்தல் என்பவற்றுக்காகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் நிலவும் தொழில்நுட்பத் திறனிலேயே இந்த புதிய ஒழுங்குமுறையின் உண்மையான வெற்றி தீர்மானிக்கப்படும்.


