சட்டக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் அரச வங்கி அமைப்பின் மறுசீரமைப்புகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கடன் தள்ளுபடிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளார். நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்த அவர், நாட்டின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தைச் செலுத்தும் பிரதான அரச நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது சட்டமன்றத்தின் முதன்மைப் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டினார்.
துறைமுக நகர ஆணைக்குழுவின் சட்டக் கண்காணிப்பு
பரந்த அளவிலான ஒழுங்குமுறை மற்றும் சட்ட அதிகாரங்களைக் கொண்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (CPCEC) போன்ற சிறப்பு பொருளாதார மண்டல ஒழுங்குமுறை அமைப்பொன்று, கடந்த இரண்டு வருடங்களாக நிரந்தரச் சட்டப் பணிப்பாளர் (Legal Director) ஒருவர் இன்றி இயங்கி வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சிறப்பு முதலீட்டு மண்டலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள், வரிச் சலுகைகள் மற்றும் ஒழுங்குமுறை முடிவுகளை எடுக்கும் போது சட்ட வழிகாட்டல் ஒரு அத்தியாவசிய காரணியாக இருக்கும் பின்னணியில், இந்த வெற்றிடம் நிலவும் சூழலில் ஆணைக்குழு எடுக்கும் முடிவுகளின் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தும் மாற்றுப் பொறிமுறை எதுவென்று அவர் வினவினார்.
சம்பள விபரங்களும் வெளிப்படைத்தன்மைப் பிரச்சினையும்
ஆணைக்குழுவின் அதிகாரிகளின் தனிப்பட்ட சம்பள விபரங்கள் முன்னதாகப் பாராளுமன்றத்திற்கு கோரப்பட்ட போதிலும், மொத்த சம்பளச் செலவு குறித்த அறிக்கை மட்டுமே கிடைத்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், அரச நிறுவனமொன்றின் தணிக்கை வெளிப்படைத்தன்மை முழுமையடைய வேண்டுமாயின் குறிப்பிட்ட தரவுகள் வெளிப்படுத்தப்படுவது முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
சட்டப் பணிப்பாளர் பதவி வெற்றிடமாக உள்ளமை மற்றும் விரிவான சம்பள அறிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளமை ஆகிய இரு விடயங்களையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் இது குறித்து உத்தியோகபூர்வ விளக்கமளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அரசு வங்கி கடன்களும் பாராளுமன்ற நிதி அதிகாரமும்
அண்மைய உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புகள் மற்றும் நிதித்துறை சீர்திருத்தங்களுக்கு மத்தியில், அரச வங்கிகளால் அறவிடப்படாத அல்லது தள்ளுபடி செய்யப்பட்ட (written-off) பெருளவிலான கடன்கள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.
வணிக வங்கித் துறையின் சாதாரண விதியான வாடிக்கையாளர்களின் இரகசியத்தன்மையைப் (Banking Confidentiality) பாதுகாப்பதன் தேவையைத் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர், இருப்பினும் பொதுமக்களின் வைப்புகள் மற்றும் வரிப் பணத்தைக் கொண்டுள்ள அரச வங்கிகளின் நிதி நடவடிக்கைகள் தொடர்பாகப் பாராளுமன்றத்திற்கு இருக்கும் அரசியலமைப்புச் சட்டப் படிநிலையான நிதி அதிகாரத்தை (Financial Oversight) அது அடக்கிவிடக் கூடாது எனக் கூறினார்.
குறிப்பாக, வங்கி இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் வகையில் சம்பந்தப்பட்ட பாராளுமன்றக் குழுக்களிடம் பிரதான ஆவணங்களைச் சமர்ப்பித்து, பாரிய கடன்களைத் தள்ளுபடி செய்யும் போதோ அல்லது மறுசீரமைக்கும் போதோ உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என ஆராய்வதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குச் சந்தர்ப்பம் இருக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.


