போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் காணிகள், வாழ்வாதாரம் மற்றும் நீதி தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளை உள்ளடக்கிய விசேட பரிந்துரைத் தொகுப்பொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.
போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தடையாக உள்ள அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது. கள விஜயங்கள், அரச அதிகாரிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விரிவான ஆய்வு அறிக்கையின் ஊடாக ஆணைக்குழு இந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது.
அறிக்கையின் மூலம் அவதானம் செலுத்தப்பட்ட பிரதான துறைகள்
-
தீர்க்கப்படாத காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும் நினைவுகூரும் உரிமையும்:
பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படல், மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூரும் உரிமைக்கு விதிக்கப்படும் தடைகள்.
-
காணிகளும் மீள்குடியேற்றமும்:
சாதாரண மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவித்தல் மற்றும் இடம்பெயர்ந்தோரின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
-
பாதுகாப்புப் பிரிவினரின் தலையீடுகள்:
அப்பகுதியில் நிலவும் தேவையற்ற இராணுவமயமாக்கல், சோதனைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பான மக்களின் முறைப்பாடுகள்.
-
வாழ்வாதாரமும் மதச் சுதந்திரமும்:
அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாகப் பாரம்பரிய விவசாயம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் சார்ந்த சுதந்திரம்.
நிலையான அமைதிக்கான வழி
வரலாற்று ரீதியான அநீதிகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதுடன், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தாமல் உண்மையான நல்லிணக்கத்தை எட்ட முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்துகிறது. கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மக்களின் நலனைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளைச் உடனடியாக எடுக்குமாறு ஆணைக்குழு அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
சர்வதேச சமூகத்தின் மட்டுமன்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) அவதானமும் இந்நாட்டின் நல்லிணக்கச் செயற்பாடுகள் மீது திரும்பியுள்ள பின்னணியில், சுயாதீன ஆணைக்குழுவாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சமர்ப்பித்த இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து எதிர்காலத்தில் பரந்த கவனம் செலுத்தப்படும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


