நிராகரித்து, 2015–2019 காலப்பகுதியில் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட முக்கிய ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் 50 இன் விரிவான அறிக்கையை ஆளும்தரப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நேற்று இந்நடவடிக்கையை மேற்கொண்டார்.
இங்கு முன்வைக்கப்பட்ட பிரதான அவதானிப்பு என்னவெனில், இவ்வழக்குகள் எதுவும் தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டவை அல்ல என்பதாகும்.
என்ன இந்தப் பட்டியல்?
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியவற்றினால் பல ஆண்டுகளுக்கு முன்னர் சாட்சியங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பல வழக்குகள் இதில் அடங்குகின்றன.
இங்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களுள் முக்கிய துறைகள் சில தனித்து நிற்கின்றன:
-
அரச வளங்களைத் துஷ்பிரயோகம் செய்தல்: சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை, திவிநெகும நிதியத்தைப் பயன்படுத்தியமை மற்றும் அரசின் காணிகள் மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்குகள்.
-
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைச் சேர்த்தல்: வெளிப்படுத்தப்பட்ட சட்டப்பூர்வ வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களைச் சேர்த்தமை மற்றும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் தொடர்பான வழக்குகள்.
-
நிதி மற்றும் நிறுவன முறைகேடுகள்: மத்திய வங்கி பிணைமுறி ஏலம், வான் மற்றும் கடற்படைத் திட்டப் பரிவர்த்தனைகள் மற்றும் மாகாண சபை நிதிகள் தொடர்பான சம்பவங்கள்.
20 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், அவர்களின் நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் சில முன்னாள் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலரின் பெயர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டுகளும் சட்ட யதார்த்தமும்
அரசியல் அரங்கின் சில தரப்பினர் இந்நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் எனக் வர்ணிக்கும் அதேவேளை, கடந்த காலத்தில் பல்வேறு அரசியல் உடன்பாடுகளின் கீழ் அமுக்கி வைக்கப்பட்டிருந்த நீதித்துறைச் செயன்முறையைச் சுயாதீனமாகச் செயற்பட அனுமதித்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
எவ்வாறாயினும், சட்ட வல்லுநர்கள் ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர். பாராளுமன்றத்தில் பட்டியலிடப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது. நீதிமன்றத்தின் முன் விசாரிக்கப்படும் வழக்குகளில் சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது முழுமையாக நீதித்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பணியாகும். ஏற்கனவே மேல் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் விடுவிக்கப்பட்ட நபர்கள் மற்றும் மேல்முறையீடுகள் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகள் என்பனவும் இப்பட்டியலில் உள்ளடங்கியுள்ளதால், செய்திகளை அறிக்கையிடும் போது சட்டச் சமநிலையைப் பேணுவது அத்தியாவசியமான காரணியாகும்.
முதலீட்டு நம்பிக்கையும் சர்வதேச அனுபவங்களும்
சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்படுவது ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாகும். தென்கொரியா 1997 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் பெருமளவிலான ஊழல் தடுப்புச் சட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்திய விதத்தையும், சிங்கப்பூர் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுத்த விதத்தையும் இங்கு உதாரணங்களாகச் சுட்டிக்காட்ட முடியும்.
வெளிப்படைத்தன்மை கொண்ட அரசாங்க நிர்வாகம் மற்றும் சுயாதீன நீதித்துறை பொறிமுறை நிலவுவது சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) நாட்டிற்கு ஈர்ப்பதற்கான முதன்மை முன்நிபந்தனையாகக் கருதப்படுகின்றது.
அரசியல் இலாபங்களுக்காகச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நிறுவனங்களின் சுயாதீனத்தின் ஊடாக நியாயமான வழக்கு விசாரணைகளை உறுதிப்படுத்துவது இலங்கையின் எதிர்காலப் பயணத்திற்குத் தீர்மானமிக்க காரணியாக அமையும்.
குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியல்
சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோரின் பட்டியல் இதோ...


