அமெரிக்கப் பிராந்தியங்கள் உணரும் வகையில் பனாமாவைப் தாக்கிய ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, அந்நாட்டிற்கும் பல அயல்நாடுகளுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இலங்கை நேரப்படி நேற்று (09) இரவளவில் இடம்பெற்ற இப் பேரழிவு நிலைமையைத் தொடர்ந்து, பிராந்தியம் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டமைடன், கொலம்பியா, ஈக்வடார், நிக்கராகுவா, கோஸ்டாரிக்கா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளுக்கும் அவ் அபாய நிலைமை பரவியிருந்தது.
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தரவுகளின்படி, பனாமா நகரத்திலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவிலுள்ள குறைந்தளவிலான மக்கள் வசதி கொண்ட பகுதியன்றில், 12.6 கிலோமீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் உருவாகியுள்ளது.
இதுவரை 80 க்கும் மேற்பட்ட பின்னதிர்வுகள் (Aftershocks) பதிவாகியுள்ள நிலையில், பீதியடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பைத் தேடி வீதிகளுக்கு வந்துள்ளனர்.
பனாமா நகரத்திற்குத் தென்மேற்கே அமைந்துள்ள பெனொனோம் நகரிலுள்ள ஹோட்டலொன்றின் பகுதி இடிந்து விழுந்தது உட்படப் பல கட்டிடங்களுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும், அதிர்ஷ்டவசமாக இதுவரை எவ்வித உயிர்ச்சேதங்களோ அல்லது கடுமையான காயங்களோ பதிவாகவில்லை.
ஆயினும், அந்நாட்டின் 6 மாகாணங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இவ் அவசர நிலைமைக்கு மத்தியிலும், நாட்டின் பிரதான பொருளாதார மையங்களான பனாமா கால்வாய், கொப்ரே பனாமா செப்புச் சுரங்கம் மற்றும் தொக்குமென் சர்வதேச விமான நிலையம் (தற்காலிக விமானப் போக்குவரத்துத் தடை நீக்கப்பட்ட பின்னர்) என்பன தற்போது வழமை போல் இயங்கி வருகின்றன.
எவ்வாறாயினும், இப் பேரழிவு காரணமாகப் பனாமாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1% முதல் 10% வரையிலான பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும் எனத் கணிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் வெனிசுவேலா மற்றும் கொலம்பியாவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுடன் ஒப்பிடுகையில், இந்நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும் அசம்பாவிதம் ஏற்படாதிருப்பதற்குப் பிரதான காரணம், அப்பகுதியில் 43,000 என்ற குறைந்தளவிலான மக்களே வசித்து வந்தமையாகும்.
வெனிசுவேலா மற்றும் கொலம்பியா போன்ற பிராந்தியங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் 1.4 மில்லியன் மற்றும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


