சட்டத்திற்குப் (PTA) பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு’ (PSTA) தொடர்பாகச் சட்டக் கோளத்தில் கடும் உரையாடல்கள் உருவெடுத்துள்ளன.
அரசாங்கத்தினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு (PSTA), அதனை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களுக்குக் கூட அறிவிக்கப்படாமல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) பிரதிநிதியாகக் குறித்த வரைவுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், குழுவினால் ஏகமனதாக உடன்படப்பட்ட சில தீர்மானமிக்க சரத்துகள் இறுதி வரைவில் அகற்றப்பட்டுள்ளதாக அல்லது மாற்றப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்றார்.
சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, பொலிஸ், முப்படை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் பங்கேற்புடன் இக்குழு செயற்பட்டிருந்தது.
குழு உடன்பட்ட விடயங்கள் மாற்றப்பட்டது எவ்வாறு?
குழு உறுப்பினர்களிடையே பொதுவான உடன்பாடு நிலவிய இரண்டு விடயங்கள் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது:
-
சந்தேகநபர் ஒருவருக்கு எதிராகப் போதுமான சான்றுகள் அல்லது தகவல்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் நீதவானுக்குப் பிணை வழங்குவதற்கு இருந்த அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை.
-
தடுப்புக் காவல் ஆணைகளை நீடிக்கும் நடைமுறை நீதித்துறை மேற்பார்வையின்றி இடம்பெறும் வகையில் மாற்றப்பட்டமை.
இம்மாற்றங்களை மேற்கொண்டது யார், இதற்கான காரணம் என்ன என்பது குறித்துக் குழுவிற்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாகச் சாலிய பீரிஸ் குழுவின் தலைவருக்கு எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிப்புகளை மேற்கொண்டுள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே நிலவிய மூன்று முரண்பாடுகள்
குழு அறிக்கையைத் தயாரிக்கும் போது பெரும்பான்மை அபிப்பிராயத்துடன் உடன்படாத மூன்று அடிப்படை விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படுகின்றது:
-
பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம்: அது அளவுக்கு அதிகமாகப் பரந்ததாகக் காணப்படுவதால் அதிகாரிகளுக்குத் தமது விருப்பப்படி துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புக் கிடைத்தல்.
-
நிர்வாகத் தடுப்புக் காவல் ஆணைகள்: தடுப்புக் காவல் ஆணைகளை விடுவிக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளருக்கு அல்லாது, நீதித்துறை அதிகாரியொருவருக்கே வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு.
-
அமைப்புகளைத் தடை செய்யும் அதிகாரம்: அமைப்புகளைத் தடை செய்யும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்திற்கு அல்லாது, முழுமையாக நீதித்துறை அதிகார அமைப்பிற்கே வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை.
சர்வதேச தரநிலைகள் மற்றும் சட்டக் கோளத்தின் அவதானிப்புகள்
சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகை மறு ஆய்வுகளின் போதும் இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைய காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வடிவில் இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால், சான்றுகள் அற்ற நபர்களைக் கூட நீண்டகாலத்திற்கு விளக்கமறியலில் வைக்க நீதவான்களுக்கு நேரிடும் எனச் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பழைய PTA சட்டத்தின் கீழ் இடம்பெற்றது போன்று அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையினரின் தலையீடுகள் மீண்டும் உருவாகும் அபாயம் காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி தனது முகநூல் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சாலிய பீரிஸின் முழுமையான முகநூல் பதிவு:
"இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதியாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள முன்மொழியப்பட்ட அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) பற்றிய குழுவின் உறுப்பினராக நான் செயற்பட்டேன்.
மூன்று விடயங்கள் தொடர்பாகக் குழுவின் பெரும்பான்மையினரின் அறிக்கையுடன் நான் உடன்படவில்லை. அவை: பயங்கரவாதம் பற்றிய வரைவிலக்கணம் (எனது அபிப்பிராயத்திற்கு அமைவாக அது மிகவும் பரந்ததுடன் அதிகாரிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்புள்ளது); நிர்வாகத் தடுப்புக் காவல் (எனது அபிப்பிராயத்திற்கு அமைவாக அது அமைச்சின் செயலாளருக்கு அல்லாது நீதிபதிகளுக்கே வழங்கப்பட வேண்டும்) மற்றும் அமைப்புகளைத் தடை செய்யும் அதிகாரங்கள் (எனது அபிப்பிராயத்திற்கு அமைவாக அது நீதித்துறை அதிகாரியொருவருக்கே வழங்கப்பட வேண்டும்).
அந்தச் சரத்துகளைத் தவிர, தடுப்புக் காவல் காலத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக எவ்விதக் காரணங்களும் இல்லாத சந்தர்ப்பங்களில் நீதவான் பிணை வழங் அனுமதித்தல் உள்ளிட்ட ஏனைய சரத்துகள் தொடர்பாகக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் உடன்பட்டனர்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட வரைவைப் பரிசீலித்த போது, குழுவில் உடன்படப்பட்ட விடயங்களிலிருந்து, முக்கியமாகப் பிணை வழங்கும் சரத்துகள் மற்றும் தடுப்புக் காவலை நீடிக்கும் நடைமுறை தொடர்பாகப் பாரிய விலகல்கள் இடம்பெற்றுள்ளதை நான் அவதானித்தேன்.
இம்மாற்றங்கள் பற்றியோ அல்லது இம்மாற்றங்களுக்கான காரணங்கள் பற்றியோ குழுவிற்கு ஒருபோதும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. குழுவுடன் எவ்விதக் கலந்துரையாடலும் இன்றி இம்மாற்றங்களை மேற்கொள்வதற்குக் காரணமானவர் யார் அல்லது காரணம் என்ன என்பது குறித்துக் குழுவிற்குக் கூறப்படவில்லை. இதற்கமைய, சட்ட வரைவு குழு அறிக்கையிலிருந்து விலகியுள்ள விதத்தைச் சுட்டிக்காட்டி நான் நேற்று குழுவின் தலைவருக்குக் கடிதமொன்றை அனுப்பினேன்.
இக்குழுவில் சட்டமா அதிபர் திணைக்கள உறுப்பினர்கள், நீதி அமைச்சு, பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் அத்துடன் ஜனாதிபதி சட்டத்தரணிகள், வழக்கறிஞர்கள் சிலர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கியிருந்தனர்.
இச்சட்ட வரைவு தற்போதுள்ளவாறே நிறைவேற்றப்பட்டால், PSTA இன் கீழ் நீண்டகாலத் தடுப்புக் காவல்கள் மேலும் தொடரும். சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்விதக் காரணங்களும் இல்லாதபோதிலும், PSTA இன் கீழ் ஆஜர்படுத்தப்படும் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான்களுக்கு நேரிடும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் இடம்பெற்றது போன்று அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் PSTA துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க முடியாமல் போகும்."


