உரிமைகளைப் பறித்து, இராணுவத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் - தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகத் தமிழ் மக்கள் மூன்று வருடங்களுக்கும் மேலாக எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையிலும், அங்கு தொடர்ந்தும் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை - பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன்
தையிட்டி - திஸ்ஸ விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இதுவரை தவறியுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில், விகாரை அமைந்துள்ள வளாகத்தினுள் சட்டவிரோதமான புதிய கட்டுமானங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நிலப்பரப்பினுள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கழிப்பறைத் தொகுதியொன்றை தற்போது காணக்கூடியதாக உள்ளதாக பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விகாரை வளாகத்திற்குள் நுழைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு
இதுவொரு சட்டவிரோதமான கட்டுமானம் என்பதால் இதனை நிறுத்துவதற்குத் தற்போதைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டும் பத்மநாதன் சாருஜன், மற்றொரு பாரதூரமான விடயத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
விகாரை வளாகத்தில் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்துக் கண்டறிவதற்காக அப்பகுதிக்குச் சென்ற போது, அங்கு கடமையிலிருந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் விகாரை அமைந்துள்ள நிலத்திற்குள் பிரவேசிப்பதற்குத் தனக்கு அனுமதி அளிக்கவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
16 தமிழ் குடும்பங்களின் 8.5 ஏக்கர் காணிகள் இழப்பு
திஸ்ஸ ரஜமஹா விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள தங்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி 2023ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று விகாரைக்கு அருகில் தமிழ் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் குற்றச்சாட்டு தெளிவானது: 16 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 8.5 ஏக்கர் நிலப்பரப்பை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து, இராணுவத்தினர் இந்தத் திஸ்ஸ விகாரையை நிர்மாணித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வரலாறு குறித்து இராணுவம் கூறும் கதை
"கிமு 3ஆம் நூற்றாண்டு வரை பழமைவாய்ந்த வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பியதீச மன்னனால் அமைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது" என இராணுவம் தெரிவிக்கிறது.
"காங்கேசன்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையின் புனரமைக்கப்பட்ட ஸ்தூபியில் கொத்தணி சூட்டும் புண்ணிய நிகழ்வு" 2023 ஏப்ரல் 27ஆம் திகதி இடம்பெற்றதாக இலங்கை இராணுவம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் 2023 ஏப்ரல் 29 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.
'இது உண்மையான திஸ்ஸ விகாரை அல்ல' - நாகதீப நாகிமி
தமிழ் மக்களுக்குச் சொந்தமான உருப்புறுதி (ஒப்பு) உள்ள காணிகளைப் போர்க் காலத்தில் ஆக்கிரமித்துத் தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை, உண்மையான திஸ்ஸ விகாரை அல்ல என நாகதீப புராண ரஜமஹா விகாரையின் விகாராத்பதியும் வட இலங்கையின் தலைமைச் சங்கநாயகருமான நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாகிமி முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


