பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் பாரிய போராட்ட நடைபவணியொன்றை நடத்துவதற்கு 'ஜன அரகலய வியாபாரய' (மக்கள் போராட்ட இயக்கம்) ஆயத்தமாகி வருகின்றது.
இன்று காலை நுகேகொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவ்வியக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரான வசந்த முதலிகே இதனை வெளிப்படுத்தினார்.
போராட்டம் பொரளை கெம்பல் மைதானத்தில்
இந்தப் போராட்ட நடைபவனி நாளை நண்பகல் 12.00 மணிக்கு பொரளை கெம்பல் மைதானத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினர் மக்களின் அன்றாட பொருளாதார நெருக்கடி குறித்து உரிய கவனம் செலுத்துவதில்லை என இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டது.
பொதுமக்களின் அன்றாட நுகர்வு மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளை முதன்மைப்படுத்தி இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவு மற்றும் கல்வி உபகரணங்கள்
பாடசாலை உபகரணங்கள் மற்றும் அடிப்படை உணவுப் பொருட்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை காரணமாக குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வசந்த முதலிகே சுட்டிக்காட்டினார்.
அவர் முன்வைத்த புள்ளிவிவரங்களின்படி, சில உணவுப் பொருட்களின் வரிச்சுமை பின்வருமாறு:
-
நெத்தலி கருவாடு: ஒரு கிலோவிற்கு சுமார் 100 ரூபாய் வரி
-
கோழி இறைச்சி: ஒரு கிலோவிற்கு சுமார் 310 ரூபாய் வரி
-
முட்டை: ஒரு முட்டைக்கு 11 ரூபாய் வரிச்சுமை
புரதம் நிறைந்த உணவை உட்கொள்வதற்குக்கூட இதனால் சாதாரண குடும்பங்களுக்குத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"தற்போது அரசாங்கம், எதிர்க்கட்சி, சர்வதேச நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒரே பக்கத்திற்கு வந்து, அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்த நாட்டின் ஏழை மக்களை நோக்கி ஏவுகணைகளையும் பீரங்கிகளையும் ஏவுவதற்கு ஆயத்தமாகியுள்ளனர். அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள மக்கள் அணிதிரள வேண்டும். வீதிப் போராட்டத்தைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவேதான், நாளை அக்டோபர் 3 ஆம் திகதி வரிச்சுமைக்கு எதிராக 'ஜன அரகலய வியாபாரய' நடத்தும் பாரிய போராட்ட நடைபவனியில் கலந்துகொள்ளுமாறு நாட்டின் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொருளாதார சீர்திருத்தங்களும் மக்கள் நெருக்கடியும்
நாட்டில் நடைமுறையிலுள்ள வரிப் கொள்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுக்கு மத்தியில் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் மூலமும் மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அரச கடன் மறுசீரமைப்பு மற்றும் அதிக வட்டி வீதங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் நிதியியல் நடவடிக்கைகளின் சுமை இறுதியில் பொதுமக்கள் மீதே சுமத்தப்படுகின்றது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சூழ்நிலைக்கு எதிராக அனைத்து சமூகக் குழுக்களும் நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என 'ஜன அரகலய வியாபாரய' வலியுறுத்துகின்றது.


