சிலையை பொலிஸார் அகற்றியமைக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் பலத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்திய-இலங்கை படைகளுக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளுக்காகவும் அஹிம்சை வழியிலான போராட்டத்தை ஆரம்பித்து, திலீபன் என அழைக்கப்படும் ராசையா பார்த்தீபன் 39 ஆண்டுகளுக்கு முன்னர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட யாழ்ப்பாணம் நல்லூரில், அண்மையில் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட வெண்கலச் சிலையை பொலிஸார் அகற்றிச் சென்றமையைக் கண்டித்து வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் தலைமையில், செப்டம்பர் 28 திங்கட்கிழமை தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் ஆதரவுடன் நடைபெற்ற இப்போராட்டங்களின் போது, திலீபனின் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டதாக பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக அஹிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்தமையினால் ‘தியாகதீபம் திலீபன்’ எனப் போற்றப்படும் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் லெப்டினன்ட் கேணல் ராசையா பார்த்தீபனை நினைவுகூர்வதற்காக நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் நினைவுச் சின்னம் 2010ஆம் ஆண்டு அரசாங்கப் பாதுகாப்புப் படையினரால் இடிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் வெண்கலத்திலான புதிய சிலையொன்று நிறுவப்பட்டு, அவரது 39 ஆவது நினைவேந்தல் செப்டம்பர் 15ஆம் திகதி பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் மலரஞ்சலி செலுத்தி நினைவுகூரப்பட்டிருந்தது.
முதல்வரின் விளக்கமும் அரசாங்கத்தின் நிலைப்பாடும்
செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை காலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று, புதிதாக நிறுவப்பட்ட அந்த வெண்கலச் சிலையை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்திருந்தது.
இது தொடர்பாக மக்கள் எதிர்ப்பு வெளிப்பட்டதையடுத்து, செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) உறுப்பினரான சேதுகாவலர் மதுசிகன் செய்த கோரிக்கைக்கு அமைய, குறித்த நினைவுச் சின்னத்தைச் செப்டம்பர் 26 ஆம் திகதி வரை மட்டுமே தற்காலிகமாக நிறுவுவதற்கு அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் யாழ்ப்பாண மாநகர சபை அனுமதி அளித்திருந்ததாகத் தெரிவித்தார்.
"15 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இச்சிலை எவ்வாறு வைக்கப்பட்டது, எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்று தொடர்ந்து என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார். இது தற்காலிகமாக வைக்கப்பட்ட சிலை என்றும், அதுவும் சபையின் தற்காலிக அனுமதியுடனேயே வைக்கப்பட்டது என்றும் கூறினேன். நீங்கள் தனியாகவா இந்தத் தீர்மானத்தை எடுத்தீர்கள் என்று கேட்டார். இல்லை, இது சபையின் அனுமதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, சபையிலுள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த அனுமதியை வழங்கின. 26.09.2026 வரை இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தொலைபேசி மூலம் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தேன்" என முதல்வர் குறிப்பிட்டார்.
செப்டம்பர் 21 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட கருத்து விவரிப்பைத் தொடர்ந்து கிடைத்த நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸாரால் சிலை அகற்றப்பட்டதாக அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
"இந்தச் சிலை வழக்குப்பொருள் (Nadu Bhanda) ஒன்றாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது" என ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை ஊக்குவிப்பதற்கு எதிரான சட்டமே இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் தொடர் போராட்டங்கள்
ராசையா பார்த்தீபனின் நினைவுச் சின்னத்தைப் பொலிஸார் அகற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துச் செப்டம்பர் 27 ஆம் திகதி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், குறித்த நினைவுச் சின்னத்தை மீண்டும் நிறுவி தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் திலீபனின் சிலை அகற்றப்பட்ட இடத்தில் கூடிய போராட்டக்காரர்கள், சிலை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யப்படும் வரை தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
ராசையா பார்த்தீபனின் நினைவுச் சின்னத்தை அகற்றுவதற்குப் பொலிஸார் எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், வர்த்தக சமூகத்தினர் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனும் கலந்துகொண்டதாகப் பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், மன்னார் நகரப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலையின் அருகில் முன்னெடுத்த போராட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்கஸ் அடிகளார் உட்பட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகில் போராட்டத்தை முன்னெடுத்ததுடன், வவுனியாவில் பொங்கு தமிழ் நினைவுச் சின்னத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்புப் பேரணி பழைய பேருந்து நிலையம் வரை சென்று அங்கு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
திலீபனின் கோரிக்கைகளும் வரலாற்றுப் பின்னணியும்
கடந்த காலத்தில் தென்னிலங்கை போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக 39 ஆண்டுகளுக்கு முன்னரே திலீபன் போராடியிருந்தார்.
-
தமிழ் மாகாணங்களில் இருந்து சிங்கள இராணுவ முகாம்களை அகற்றுதல்,
-
தமிழ் மக்களின் பகுதிகளில் தற்காலிகத் தமிழ் அரசாங்கமொன்று அமையும் வரை புனர்வாழ்வுப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்துதல்,
-
தமிழ் மக்களுக்குச் சொந்தமான கிராமப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவதனை நிறுத்துதல்,
-
தமிழ் மாகாணங்களில் சிங்களப் பொலிஸ் நிலையங்களை அமைப்பதை நிறுத்துதல்,
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பொலிஸ் தடுப்புக் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்தல்,
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த லெப்டினன்ட் கேணல் திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் திகதி வீரமரணமடைந்தார்.



