நாட்டின் பொருளாதாரத்தைத் துரிதப்படுத்துவதற்காக அரசாங்கம் வர்த்தகங்களுக்கும் தொழிற்துறைகளுக்கும் வரிச் சலுகைகளை வழங்குகின்றது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்பட்டாலும், மறுபுறத்தில் அரச திறைசேரிக்குக் கிடைக்க வேண்டிய பெருமளவான வருமானம் இழக்கப்படுகின்றது.
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் நான்கு பிரதான மறைமுக வரிகளிலிருந்து அரசாங்கத்திற்கு இழக்கப்பட்ட தொகை 461.49 பில்லியன் ரூபாவாகும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அண்மைய அறிக்கையொன்று அம்பலப்படுத்தியுள்ளது.
பிரதான 3 கேள்விகள் ஊடாக இந்தப் பொருளாதாரக் கதையை எளிமையாகப் புரிந்துகொள்வோம்.
1. 461 பில்லியன் ரூபா இழக்கப்பட்டது எவ்வகையான வரிகளிலிருந்து?
நாம் அன்றாடம் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்யும் போது பற்றுச்சீட்டுகள் ஊடாக அரசாங்கத்திற்குச் செலுத்தும் 'மறைமுக வரிகள்' நான்கிற்கு வழங்கப்பட்ட வரி விலக்குகளே இந்த வருமானக் குறைவிற்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
-
பெறுமதி சேர் வரி (VAT): இவ்வரிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் காரணமாகவே அதிகளவான வருமானம் இழக்கப்பட்டுள்ளது. அத்தொகை 242.95 பில்லியன் ரூபாவாகும்.
-
சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரி (SSCL): இவ்வரியிலிருந்து 135.27 பில்லியன் ரூபா திறைசேரிக்குக் கிடைக்கவில்லை.
-
சுங்க இறக்குமதி வரி: வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் காரணமாக 74.25 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளது. இதில் 89.8 சதவீதம் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) பிரிவின் கீழ் விசேட திட்டங்கள் மற்றும் பொதுவான பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
-
உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) வரி: இத்துறையிலிருந்து இழக்கப்பட்ட தொகை 9.02 பில்லியன் ரூபாவாகும்.
2. வாகனங்களை ஒன்றுசேர்த்தல் (Assembling) மற்றும் நேரடி வரிச் சலுகைகளின் நிலைமை என்ன?
உற்பத்தி வரியிலிருந்து இழக்கப்பட்ட 9.02 பில்லியன் ரூபாவில் 99.8 சதவீதம் (அதாவது 9.005 பில்லியன் ரூபா) உள்நாட்டில் வாகனங்களை ஒன்றுசேர்க்கும் தொழிற்துறைகளுக்கு வழங்கப்பட்ட வரி விலக்குகளுக்காகவே செலவிடப்பட்டுள்ளது.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தாம் ஈட்டும் வருமானத்திலிருந்து அரசாங்கத்திற்கு நேரடியாகச் செலுத்தும் 'வருமான வரி' சலுகைகள் காரணமாக இழக்கப்பட்ட தொகையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சடுதியாக அதிகரித்துள்ளது.
-
நிறுவன வருமான வரிச் சலுகைகள்: 2023/24 ஆம் ஆண்டில் 119.29 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட இந்த இழப்பு, 2024/25 ஆம் ஆண்டில் 186.07 பில்லியன் ரூபாவாக 56 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
-
தனிநபர் வருமான வரிச் சலுகைகள்: 10.46 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட இப்பெறுமானம் 36.28 பில்லியன் ரூபாவாக 246.8 சதவீதமெனும் பாரிய விகிதத்தில் உயர்வடைந்துள்ளது.
3. அரசாங்கம் இவ்வளவு வரிச் சலுகைகளை வழங்குவது ஏன்? இதனால் நாட்டிற்கு இலாபம் உள்ளதா?
அரசாங்கம் வரி அறவிடாது விட்டுக்கொடுப்பது குறிப்பிட்ட பொருளாதார இலக்குகளுடனேயே ஆகும். நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், ஏற்றுமதித் தொழிற்துறைகளை மேம்படுத்தல், உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய கொள்கை ரீதியான நோக்கங்களுக்காக இச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.
வரிச் சலுகைகளை வழங்குவதன் காரணமாக அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய பணத்தில் குறைவு அல்லது தாமதம் ஏற்படுவதை அமைச்சு ஏற்றுக்கொள்கின்றது. எனவே, இச்சலுகைகள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு உண்மையான பிரதிபலன் கிடைக்கின்றதா என்பதைத் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்வது அத்தியாவசியமானது என அவ்வறிக்கை வலியுறுத்துகின்றது.


