முகநூல் (Facebook) சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பதிவொன்று தொடர்பில் சுமத்தப்பட்ட மத நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசா, அந்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அனைத்துச் சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இராஜதந்திரத் தலையீடுகளைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் (Public Prosecution) அவருக்கு எதிராகத் தொடர்ந்தும் வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லாதிருக்கத் தீர்மானித்துள்ளது.
இத்தீர்மானம் 2026 நவம்பர் 9ஆம் திகதி எடுக்கப்பட்டுள்ளதுடன், நவம்பர் 11ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கமைய, அவருக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த அனைத்துத் தண்டனைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் அனோஜன் சிவராசாவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான தேவையான நடவடிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறைத் தண்டனையிலிருந்து மரண தண்டனை ஊடாக விடுதலை வரை
2026 ஜூலை 1 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டமையுடன் இந்தச் சட்ட நெருக்கடி ஆரம்பமானது. முகநூல் பதிவொன்றின் ஊடாக இஸ்லாமிய மத உணர்வுகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான கருத்தொன்றை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதற்கமைய, வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் பின்வருமாறு அமைந்தன:
-
ஜூலை 27: சவூதி அரேபியாவின் அல் அஹ்ஸா (Al-Ahsa) குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஐந்து வருடச் சிறைத் தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்தது.
-
செப்டம்பர் 17: கிழக்கு மாகாண மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அத்தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது.
-
ஒக்டோபர் 13: இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரத் தலையீடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் அழுத்தங்களுக்கு மத்தியில், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையைச் சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் இரத்துச் செய்தது. அதனைத் தொடர்ந்து, வழக்கை மீண்டும் விசாரிப்பதற்காக அல் அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
ஒக்டோபர் 27: நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு பொது வழக்குத் தொடுநர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
-
நவம்பர் 9: அவ்விசாரணைகளைத் தொடர்ந்து, வழக்கைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லாதிருக்கப் பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் தீர்மானித்தமையுடன், அவருக்கு எதிராக நிலுவையிலிருந்த அனைத்துச் சட்ட நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்தன.
இராஜதந்திர மற்றும் சர்வதேச அழுத்தங்கள்

இவ்விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொண்ட இராஜதந்திரத் தலையீடுகளும், சவூதி அரேபிய அரசாங்கம் மற்றும் நீதித்துறையின் ஒத்துழைப்பும் பக்கபலமாக அமைந்துள்ளன. இரு நாடுகளினதும் இராஜதந்திர அதிகாரிகளின் தலையீடுகள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதற்காகச் சவூதி அரேபியாவிற்குச் சென்ற இலங்கைச் சட்டத்தரணிகள் குழுவின் பங்களிப்பும் அமைச்சரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் தீவிர கவனம் செலுத்தியிருந்தன. சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) போன்ற அமைப்புகள் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அத்தீர்ப்பை இரத்துச் செய்து அவரை விடுதலை செய்யுமாறு சவூதி அதிகாரிகளிடம் கோரியிருந்தன.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரத்திற்கான சர்வதேச ஆணைக்குழுவும் (International Commission for Human Rights and Religious Freedom – ICHRF) அவரது விடுதலைக்காகச் சர்வதேசத் தலையீட்டைக் கோரியிருந்ததுடன், நவம்பர் 6 ஆம் திகதி அவரை ‘மனசாட்சியின் கைதி’ (Prisoner of Conscience) எனப் பெயரிட்டு அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது.
எவ்வித வன்முறைச் செயற்பாடுகளிலும் ஈடுபடாது, தாம் கொண்டிருக்கும் கருத்து அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் சிறைப்படுத்தப்பட்டவரே 'மனசாட்சியின் கைதி' என அவ்வாணைக்குழு முன்வைத்த கருத்து, எதிர்காலத்தில் கைதிகளை வகைப்படுத்துவது தொடர்பில் பெரிதும் பயன்படுத்தப்படும் என அவதானிகள் கருதுகின்றனர்.
இந்தியாவிலிருந்து பிரயோகிக்கப்பட்ட அரசியல் அழுத்தம்
இதேவேளை, அனோஜன் சிவராசாவை விடுவித்துக்கொள்வது தொடர்பில் இந்தியாவின் செல்வாக்கு பிரதானமாகத் துணைபுரிந்ததாகவும் கருத்துகள் நிலவுகின்றன. இது நேரடி அரச தலையீட்டை விடவும் அரசியல் மற்றும் மக்கள் அழுத்தமாகவே நோக்கப்படுகின்றது.
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த அவருக்காக இலங்கைத் தமிழ் தலைவர்களும் இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் தலையிடுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியிருந்ததுடன், சவூதி அரச குடும்பத்துடன் இந்தியாவிற்கு உள்ள நெருங்கிய உறவுகளை இதற்காகப் பயன்படுத்த முடியும் எனவும் வாதிட்டிருந்தனர். இதற்கிடையில், இந்திய வெளிவிவகார அமைச்சுக்குக் கடிதங்கள் அனுப்புதல், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் (VHP) கோரிக்கைகள் மற்றும் சமூக வலைத்தளப் பிரசாரங்கள் ஊடாகவும் இவ்விடயம் தொடர்பில் இந்தியாவின் தலையீட்டிற்கான தூண்டுதல்கள் ஏற்பட்டன.
அனோஜன் சிவராசாவின் குடும்ப உறுப்பினர்களும் நவம்பர் 11 ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்குச் சென்று ஜனாதிபதிக்கும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும், இவ்விடுதலையைப் பெற்றுக்கொடுக்கப் பங்களிப்புச் செய்த அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷ் தம்பதியினரின் துயரம்

இம்மிகுந்த மகிழ்ச்சிகரமான செய்தியுடன், அண்மையில் சவூதி அரேபியாவில் பங்களாதேஷ் பிரஜைகள் இருவரின் தலைகள் துண்டிக்கப்பட்ட (சிரச்சேதம் செய்யப்பட்ட) சம்பவமும் எமது நினைவுக்கு வருகின்றது.
மக்கா பிராந்தியத்தில் பங்களாதேஷ் பிரஜைகளான நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பசீர் மற்றும் சித்தி (ஸ்வீட்டி) அக்தார் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகச் சவூதி அரேபியாவின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 2026 ஒக்டோபர் 14 ஆம் திகதி அறிவித்தது. மக்காவிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்குள் அவர்கள் “அநாகரிகமான செயலொன்றில்” ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், அவ்வறிக்கையில் அச்செயல் என்னவென்றோ, எந்தப் பள்ளிவாசலில் இடம்பெற்றதென்றோ, அவர்கள் எப்போது கைது செய்யப்பட்டார்களென்றோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் பரவிய “உம்ரா தேனிலவைக் கழித்துக்கொண்டிருந்த புதுமணத் தம்பதியினர் நெற்றியில் முத்தமிட்டமைக்காகச் சிரச்சேதம் செய்யப்பட்டனர்” என்ற தகவல் நம்பகமான மூலங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை. உண்மையில் அவர்கள் திருமணமான தம்பதியினரா என்பது கூட உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலதிக அறிக்கைகளுக்கு அமைய, இருவரும் பல வருடங்களாகச் சவூதி அரேபியாவில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். நஸ்ருல் இணையவழிக் குற்றச்சாட்டொன்றின் பேரிலும், ஸ்வீட்டி “ஒழுக்கக்கேடு” என்ற குற்றச்சாட்டின் பேரிலும் 2023 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, ஜித்தாவில் தனித்தனியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் பின்னர் மரண தண்டனைக்குக் காரணமாகக் கூறப்படும் பள்ளிவாசலுக்குள் இடம்பெற்ற செயலுக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
‘தாஸீர்’ (Ta’zir) சட்டமும் நீதிபதிகளின் தற்றுணிபும்
இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது ‘தாஸீர்’ (Ta’zir) எனப்படும் இஸ்லாமியச் சட்டக் கோட்பாட்டின் கீழாகும். இது நீதிபதியின் தற்றுணிபு அதிகாரம் செயற்படும் நீதித்துறையாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, ‘ஹத்’ (நிர்ணயிக்கப்பட்ட தண்டனைகள்) அல்லது ‘கிஸாஸ்’ (பதிலடித் தண்டனை) ஆகியவற்றின் கீழ் வராத குற்றங்களுக்கு, குற்றம் என்ன என்பதையும் தண்டனை என்ன என்பதையும் நீதிபதியே தீர்மானிப்பார்.
சவூதி அரேபியாவிற்குத் தொகுக்கப்பட்ட தண்டனைச் சட்டக்கோவை இல்லை எனவும், நீதிபதிகள் முன்னைய தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல எனவும் மனித உரிமைகள் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் காரணமாகவே, ஒரே மாதிரியான செயற்பாட்டிற்குக் கூட வெவ்வேறு தண்டனைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அனோஜனின் வழக்கிலும் ஆரம்பத்தில் ஐந்து வருடச் சிறைத் தண்டனை, பின்னர் மரண தண்டனை மற்றும் இறுதியில் முழுமையான விடுதலை எனத் தண்டனை மாற்றமடைந்த விதத்திலிருந்தும் இது தெளிவாகின்றது.
கொன்சியூலர் சேவைகளின் மௌனம்
இந்த இரட்டை மரண தண்டனை தொடர்பில் சவூதி அரேபியா இராஜதந்திர மட்டத்தில் பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு அறிவிக்கவில்லை எனப் பல்வேறு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டது. பங்களாதேஷ் இவ்விடயத்தை ஊடக அறிக்கைகள் மூலமே அறிந்துகொண்டது. ஜித்தாவிலுள்ள பங்களாதேஷ் கொன்சியூலர் அலுவலகத்திற்கு முன்கூட்டியே அறிவிப்புக் கிடைத்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷ் பின்னர் சவூதி வெளிவிவகார அமைச்சுக்கு உத்தியோகபூர்வக் கடிதமொன்றை (Note Verbale) அனுப்பி, குற்றச்சாட்டுகள், வழக்குத் தீர்ப்புகள், சட்டத்தரணி உதவி கிடைத்ததா என்பது மற்றும் சடலங்கள் குறித்த தகவல்களைக் கோரியுள்ளது.
இதற்கிடையில், சவூதி அரேபியாவிற்கான பங்களாதேஷ் தூதுவர் மொஹமட் டெல்வர் ஹுசைனின் தலையீடு தொடர்பில் அங்கு பணியாற்றும் 3.5 மில்லியனுக்கும் அதிகமான பங்களாதேஷ் தொழிலாளர்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அறியக் கிடைத்துள்ளது. நீண்ட காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சம்பவமொன்று தூதரகத்தின் கவனத்திற்கு வராமல் போனது எப்படி, தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்குச் சட்ட உதவியும் கொன்சியூலர் உதவியும் கிடைத்ததா என்பது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. வியன்னா கொன்சியூலர் உடன்படிக்கைக்கு அமைய இரு நாடுகளும் கட்டுப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்குச் சட்டத்தரணி ஒருவர் கிடைத்தாரா, மேன்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதா என்பது இன்னும் தெரியவில்லை.
சவூதி அரேபியாவில் பணியாற்றும் பங்களாதேஷ் தொழிலாளர்கள் 3.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இருப்பதுடன், அவர்கள் நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணியில் பெரும் பகுதியை வழங்குகின்றனர். எனினும், அந்தப் பொருளாதாரப் பிணைப்புக் காரணமாகவே கடுமையான இராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பங்களாதேஷிற்குச் சிரமமாக இருந்ததாகவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் பாடம்
அனோஜனின் வழக்கில், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இலங்கைக்குத் தலையிடுவதற்கான கால அவகாசம் கிடைத்தது. ஜனாதிபதி முதல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்டத்தரணிகள் குழு மற்றும் சர்வதேச அமைப்புகள் வரை அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டனர். உயர் நீதிமன்றம் தண்டனையை இரத்துச் செய்ததன் பின்னர், பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் வழக்கைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லாதிருக்கத் தீர்மானித்தமையால் விடுதலை முழுமையடைந்தது.
ஆனால், பங்களாதேஷ் சம்பவத்தில் தண்டனை நிறைவேற்றப்படும் வரை அரசாங்கத்திற்கு அறிவிப்புக் கிடைக்காமையால் தலையிடுவதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. அந்த வேறுபாடே, புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் உயிருக்கும் மரணத்திற்கும் இடையிலான வேறுபாடாக மாறியது.
அதற்கமைய, சவூதி அரேபியாவின் புதிய நிர்வாகக் கட்டமைப்பிற்குள் சர்வதேச சமூகத்திற்குச் செவிமடுப்பது தொடர்பில் அவர்கள் அனோஜன் குறித்து எடுத்த தீர்மானம் முக்கிய சான்றாக அமையும். ஆனால் அதேவேளை, ‘தாஸீர்’ போன்ற தற்றுணிபுச் சட்டமொன்றின் கீழ், வெளிப்படைத்தன்மை, முன்னறிவிப்பு மற்றும் கொன்சியூலர் உதவியின்றி மற்றுமொரு புலம்பெயர் தொழிலாளிக்கு அவ்வாய்ப்புக் கிடைக்காமல் போகக்கூடும் என்பதற்குப் பங்களாதேஷ் சம்பவம் ஓர் எச்சரிக்கையாகும்.

இச்சம்பவம் வெறுமனே இலங்கைப் புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் விடுதலை குறித்த சம்பவமாக மாத்திரமன்றி, வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் மனித உரிமைகள், சமூக வலைத்தளப் பயன்பாடு, மத உணர்வுகள் மற்றும் சட்டப் பாதுகாப்பு தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்த வைப்பதாகும்.
சமூக வலைத்தளப் பதிவொன்று உயிரைக் கூட ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய நாடொன்றில் பணியாற்றும் போது, மத உணர்வுகள் குறித்த விழிப்புணர்வு, சட்டம் குறித்த அறிவு மற்றும் தமது நாட்டுத் தூதரகத்துடனான உடனடித் தொடர்பு ஆகிய இம்மூன்றுமே புலம்பெயர் தொழிலாளியின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானவை என்பதை இவ்விரு சம்பவங்களும் எமக்குக் கற்பிக்கின்றன.


