-
நீதிமன்றத்தின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஆதரவளிக்க GMOA மற்றும் அரச பல்வைத்தியர்கள் சங்கம் தீர்மானம்.
-
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 30 மனுக்கள் தாக்கல்.
-
இதுவொரு நீதித்துறை மறுசீரமைப்பு என அரசாங்கம் அறிவிப்பு; மக்கள் தீர்ப்பு (ஜனவாக்கெடுப்பு) அவசியம் என எதிர்த்தரப்பும் சிவில் அமைப்புகளும் வாதம்.
முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட 14 நாட்கள் கால அவகாசம் இன்று (31) காலை 11.00 மணியுடன் நிறைவடையும் பின்னணியில், அதற்குத் தமது எதிர்ப்பைப் பதிவிட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மற்றும் அரச பல் அறுவை சிகிச்சை மருத்துவ சங்கம் ஆகியன தீர்மானித்துள்ளன.
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையையும் நடுநிலைமையையும் பாதுகாப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயற்படத் தமது மத்திய செயற்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற மறுசீரமைப்பும் சிவில் அமைப்புகளின் வாதமும்
குறித்த திருத்தச் சட்டமூலமானது நீதித்துறையை பலப்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கை என அரசாங்கம் தெரிவித்து வருகின்ற போதிலும், இதில் உள்ளடக்கப்பட்டுள்ள சில சரத்துக்கள் நீதித்துறை சுயாதீனத்திற்குப் பாதகமாக அமையும் என எதிர்த்தரப்பினரும் சிவில் அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றனர்.
அத்துடன், இத்திருத்தத்தை நிறைவேற்றுவதாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் தீர்ப்பும் (Referendum) பெறப்பட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் இதுவரையில் 30 இற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) 2026.08.30 திகதியிட்டு உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் சன்சிக சரிதகடவு மற்றும் செயலாளர் வைத்தியர் யு.கே.பி. வறகாகொட ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
உன்னத சட்டமாக அரசியலமைப்பு பேணப்பட வேண்டும்
அரசியலமைப்பு என்பது நாட்டின் உன்னதமான சட்டம் என்பதால், அதில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் மிகுந்த பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றியும், அனைத்துப் பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை நடத்திய பின்னருமே மேற்கொள்ளப்பட வேண்டும் என GMOA சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிமன்ற சுயாதீனமும் சட்டத்தின் ஆட்சியும்
நீதிமன்றத்தின் சுயாதீனம், சட்ட அமைப்பின் நேர்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகபட்சமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனச் சங்கம் உறுதியாக நம்புகிறது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் (BASL) கலந்துரையாடல்
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகக் கிடைத்த அழைப்பிற்கு அமைய, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் (BASL) விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இத்திருத்தத்தை முன்வைப்பதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறை குறித்த கவலைகள்
குறிப்பாக நீதித்துறை தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விடயங்களில் எதிர்பாரக்கும் வெளிப்படைத்தன்மை, பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் மற்றும் ஒருமித்த கருத்து ஆகியவற்றை அரசாங்கம் பின்பற்றியுள்ள நடைமுறையில் போதுமான அளவு உறுதிப்படுத்தவில்லை எனச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த எந்தவொரு நடைமுறையும் சுயாதீனமாக இருப்பது மட்டுமன்றி, அது வெளிப்படையாகவும் நடுநிலையாகவும் இயங்குவதே பொதுமக்கள் நம்பிக்கையைத் தக்கவைக்க அத்தியாவசியமாகும்.
தொழில்சார் அமைப்புகளுடன் இணைந்து குரல் கொடுத்தல்
இதற்கமைய, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்த நடைமுறைகள் தொடர்பில் தமது அவதானத்தைச் செலுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உள்ளிட்ட ஏனைய தொழில்சார் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயற்பட GMOA தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்திடம் முன்வைக்கப்படும் கோரிக்கைகள்
-
அரசியலமைப்புத் திருத்த நடைமுறையை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
-
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்.
-
போதுமான மக்கள் உரையாடலுக்கு (Public Discourse) இடமளிக்க வேண்டும்.
-
வெளிப்படைத்தன்மை மற்றும் பரந்த ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அமைந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
GMOA இன் நிலைப்பாடு
தமது இந்த நிலைப்பாடானது அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும்; அரசியலமைப்பு ஆட்சி, நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் அர்ப்பணிப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றும் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இக்கோட்பாடுகள் நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கும் மக்களின் நலனுக்கும் அத்தியாவசியமானவை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


