நிவாரணக் குழுக்களை எதிர்வரும் சில தினங்களில் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை ஆயுதப் படைகளின் உறுப்பினர்களைக் கொண்ட நிவாரணக் குழுக்களை அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அநுராதபுரம் பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.
"நேபாளத்தில் இடம்பெற்ற சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கௌரவ ஜனாதிபதி அவர்கள் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு அரசாங்கமாக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரண நிதியாக வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய இடர் முகாமைத்துவ நிவாரண மையம் ஆகியன நேபாளத்தின் தேவைகளுக்கு ஏற்ப நிவாரணக் குழுக்களை எவ்வாறு அனுப்புவது என்பது குறித்துத் திட்டமிட்டு வருகின்றன. அனுப்பப்படவுள்ள துருப்புகளின் எண்ணிக்கை அல்லது எவ்வாறான நிவாரணக் குழுக்கள் என்பது குறித்து இன்னமும் திட்டமிடப்பட்டு வருகின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவே அரசாங்கமாக நாம் ஏற்பாடு செய்து வருகிறோம். எனவே, மிக அருகில் உள்ள தெற்காசிய நாடு என்ற வகையில் நாம் மிகவும் உணர்வுப்பூர்வமாகச் செயற்படுகிறோம்."


