மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கிறது
வடக்கில் 5 இடங்களில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாகச் சந்தேகம்: வழக்கு செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு
யாழ்ப்பாணத்தின் தீவகம் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்ட இடங்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
35 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வடக்கின் 5 இடங்களில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு நியாயமான விசாரணைகளை நடத்துமாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஜூலை 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே OMP அலுவலகம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ள ஊர்காவற்றுறை, அர his அராலி சந்தி, மண்கும்பான் கணதேவி கோவில் அருகில், அல்லைப்பிட்டி மற்றும் மண்டதீவு ஆகிய 5 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தி நியாயமான விசாரணை நடத்துமாறு பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் 2025 ஆகஸ்ட் மாதத்தில் ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். அதற்கு அமைவாக ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, 2026 ஜூலை 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் அனிபா ராஜீவ் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பிப்பதில் முன்னின்று செயற்பட்ட வேலணை பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினரான சுவாமிநாதன் பிரகலாதன் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்; உரிய சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை ஒதுக்கித்தர முடியும் என OMP அலுவலகம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
"முறைப்பாட்டாளர்கள் குறிப்பிடும் இடங்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அந்த நிலத்தின் வரலாற்றுப் பதிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இது தொடர்பாக குருக்கள்மடம் மற்றும் செம்மணியில் செய்யப்பட்டது போல ஒரு நிர்வாகக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதாவது பிரதேச செயலகம், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், பிரதேச சபை மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி (JMO) ஆகியோர் ஒன்றுகூடி நிர்வாகக் கூட்டத்தை நடத்தி, சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை கிடைத்த பின்னர் இதற்காகச் செலவாகும் தொகையை ஒதுக்கீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது. அதற்குச் செவிசாய்த்த நீதவான், அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்."
யாழ்ப்பாண மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக சாட்சியங்கள் தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூர்ணிமா மரியநாயகயம் மற்றும் யாழ்ப்பாண ஒருங்கிணைப்பாளர் டி. செல்வகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததாகவும் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கு செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், மண்டதீவு தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் மட்டும் சுமார் 60 சடலங்கள் இருப்பதாக வேலணை பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் 2025 ஆகஸ்ட் 20 ஆம் திகதி வெளிப்படுத்தியிருந்தார். அந்தக்கினற்றில் போடப்பட்டுள்ளதாக நம்பப்படும் சடலங்கள் தொடர்பாகச் நேரில் கண்ட சாட்சி ஒருவர் இன்னமும் உயிரோடு இருப்பதாக அன்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
35 ஆண்டுகளுக்கு முன்னர் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை குறித்து நினைவுகூர்ந்த பிரதேச சபை உறுப்பினர், அன்று படைகளால் பொறுப்பேற்கப்பட்டவர்களில் 84 பேருக்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என வலியுறுத்தினார். இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் படுகொலை செய்யப்பட்டு கிணறுகளில் போடப்பட்டதாகப் பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் அன்று மேலும் வெளிப்படுத்தியிருந்தார்.
இலங்கையில் இதுவரை 17 மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றி கடந்த ஆண்டு முதன்முறையாக வெளிப்படுத்தியிருந்தார். இருப்பினும், மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவது போல் இலங்கை முழுவதும் ஏராளமான மனிதப் புதைகுழிகள் சிதறிக்காணப்படுகின்றன.


