(Centralized Electronic System) பதிவுகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போன அரச அதிகாரிகளுக்கு, தங்களது சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கால எல்லை எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதிக்குள் விபரங்களைச் சமர்ப்பிப்போருக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படமாட்டாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023.03.31ஆம் திகதி வரையான வருடாந்த மற்றும் ஓய்வூதியத்திற்குப் பின்னரான சொத்து, கடன் விபரக் கூற்றுகளை ஜூன் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது. எனினும், குறித்த விபரங்களை ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்ற போதிலும், அதற்கு அபராதம் செலுத்த நேரிடும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த 28ஆம் திகதி முதல் மத்தியமயமாக்கப்பட்ட மின்னணு அமைப்பிற்குள் ஒரே நாளில் பெருமளவிலான பயனர்கள் உள்நுழைந்தமையால் ஏற்பட்ட அதிகப்படியான நெரிசல் காரணமாக, விபரங்களை உள்ளீடு செய்வோர் பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் பிரகாரம், சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நிறுவப்பட்டுள்ள உத்தியோகபூர்வ மத்தியமயமாக்கப்பட்ட மின்னணு அமைப்பின் ஊடாக மட்டுமே தங்களது விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்தியமயமாக்கப்பட்ட மின்னணு அமைப்பில் விபரங்களை உள்ளிடுவது தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் அல்லது தெளிவுபடுத்தல்கள் காணப்படின், ஆணைக்குழுவின் சொத்து மற்றும் கடன் விபரக்கூற்றுப் பிரிவின் 076 70 11 954 அல்லது 011 25 87 287 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.


