-
தூங்காமல் படிக்கலாம் என்ற தவறான பிம்பத்தால் போதை வலையில் வீழும் இளைஞர்கள்.
-
போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பயன்பாட்டினால் நாட்டில் நாளொன்றுக்கு 80 முதல் 100 மரணங்கள் சம்பவிப்பதாக அதிர்ச்சித் தகவல்.
-
'ரட்டம எக்கட்ட' (முழு நாடும் ஒன்றாக) தேசிய அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்ப பீடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைத்து நச்சுப் போதைப்பொருட்களின் பயன்பாடு மிகவேகமாகப் பரவி வருவதாக 'ரட்டம எக்கட்ட' (Ratama Ekatata) தேசிய இயக்கம் வெளிப்படுத்தியுள்ளது.
கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள 'ரட்டம எக்கட்ட' தேசிய இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ இத்தகவல்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் காரணமாகவே இளைஞர்கள் இப் பழக்கத்திற்கு அடிமையாகும் போக்கு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
'படிப்பதற்கான போலிப் பிரசாரம்' மற்றும் தினசரி மரணங்கள்
பல்கலைக்கழக சமூகத்தினரிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதன் பின்னணியிலுள்ள சமூக மற்றும் உளவியல் காரணங்களை விளக்கிய கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ பின்வருமாறு குறிப்பிட்டார்:
"பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருட்களைப் பயன்படுத்தினால் தூக்கம் வராது, நன்றாகப் படிக்கலாம் என்ற தவறான கருத்துக்கள் சமூகத்தில் பரப்பப்படுவதால் சில பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். இவ்வாறு அடிமையானவர்களை மீட்ப்பதற்காகப் பல மறுவாழ்வுத் திட்டங்கள் 'ரட்டம எக்கட்ட' தேசிய இயக்கத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன."
நாட்டின் சட்டவிரோத போதைப்பொருள் பரவல் என்பது சட்டப்பூர்வமான மது மற்றும் புகையிலைப் பயன்பாட்டில் இருந்தே தொடங்குகிறது எனச் சுட்டிக்காட்டிய அவர், புகைப்பிடித்தல் காரணமாக மட்டுமே நாளொன்றுக்குச் சுமார் 50 பேர் உயிரிழப்பதாகவும், ஒட்டுமொத்தமாகப் போதைப்பொருள் மற்றும் அது தொடர்பான நோய்களால் நாளொன்றுக்கு 80 முதல் 100 வரையிலான மரணங்கள் சம்பவிப்பதாகவும் தெரிவித்தார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் கூட போதைப்பொருளால் ஏற்படும் தினசரி மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாமல் போனதாக அவர் மேலும் வேதனையுடன் குறிப்பிட்டார்.
தேசிய அளவிலான தலையீடு மற்றும் பொறுப்பு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சுகாதார அறிக்கைகள் சுட்டிக்காட்டுவது போல், போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்துவதுடன் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அத்தியாவசியமாகும்.
குறிப்பாகக் கல்வித் துறை மற்றும் இளைஞர் சமூகத்தை இந்த அழிவுகரமான ஆபத்திலிருந்து மீட்பதற்கு அரசியல், கட்சி அல்லது இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பினரின் கூட்டுத் தலையீடும் தேசிய அளவிலான செயல் திட்டமும் அவசியமாகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல 'ரட்டம எக்கட்ட' தேசிய இயக்கம் பணியாற்றி வருகின்றது.


