பயன்படுத்தி உரையாடும் புதிய வசதி அறிமுகம்
உலகளாவிய ரீதியில் 3 பில்லியன் பயனர்களுக்கு எதிர்வரும் சில மாதங்களுக்குள் வழங்க நடவடிக்கை
பிரபல அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பெயர்களைப் போலி கணக்குகளுக்குப் பயன்படுத்துவதற்குத் தடை
தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை ஏனையோருக்கு வௌிப்படுத்தாமல், பயனர் பெயரை (Username) மாத்திரம் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கான புதிய விசேட வசதியொன்றை வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
உலகெங்கிலும் உள்ள 3 பில்லியன் வட்ஸ்அப் பயனர்களுக்கும் எதிர்வரும் சில மாதங்களுக்குள் இப்புதிய அம்சம் கிடைக்கப்பெறவுள்ளது.
இச்செயன்முறையானது கட்டாயமாக்கப்படவில்லை என்பதுடன், விருப்பமுடைய பயனர்கள் மாத்திரம் தமக்குத் தேவையான பயனர் பெயரை (Username) தனியாக ஒதுக்கிப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாம் தெரிவு செய்த பயனர் பெயரை எந்நேரத்திலும் நீக்குவதற்கோ அல்லது மாற்றுவதற்கோ பயனர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பயனர் பெயரிற்காக அதிகபட்சமாக 35 எழுத்துக்கள் அல்லது குறியீடுகளை மாத்திரமே பயன்படுத்த முடியும்.
மேலும், பிரபல அரசியல்வாதிகள் அல்லது உலகப் புகழ்பெற்ற பிரமுகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மற்றவர்கள் போலி கணக்குகளை (Fake Profiles) உருவாக்குவதைத் தடுக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்குத் தொடர்ந்து தொலைபேசி இலக்கம் கட்டாயமாக இருக்கும் போதிலும், இந்த பயனர் பெயர் (Username) அம்சம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் ஏனையோரால் உங்களது தொலைபேசி இலக்கத்தைப் பார்க்க முடியாது.
இதன் மூலம், குறிப்பாக குழும உரையாடல்களில் (Group Chats) உள்ள முகம் தெரியாத நபர்களுடன் தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்களுக்கு, கூடுதல் தனியுரிமைப் பாதுகாப்பு (Privacy Protection) கிடைக்கும் என வட்ஸ்அப் நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவுத் தலைவர் அலிஸ் நியூட்டன்-ரெக்ஸ் (Alice Newton-Rex) தெரிவித்துள்ளார்.


