இரண்டாம் நிலை அணியின் காற்பந்து வீரருக்கு நேர்ந்த பெரும் சோகம்
இடிபாடுகளுக்குள் சிக்குண்டோரைத் தேடும் பணிகள் முடிவு; வெனிசுலாவில் பலியானோர் எண்ணிக்கை 1,400 ஐத் தாண்டியது
உதிந்து வரும் இளம் காற்பந்து நட்சத்திரங்களான யிம்வெர்ட் பெரோட்டரான் உட்பட பல வீரர்களும் உயிரிழப்பு
நூற்றாண்டு காலத்திற்கும் மேலான வரலாற்றில் வெனிசுலாவில் பதிவான மிகத் தீவிரமான நிலநடுக்க பேரழிவினால், அந்நாட்டின் இரண்டாம் நிலை காற்பந்து அணியொன்றில் விளையாடி வரும் ஆர்ஜென்டீன காற்பந்து வீரர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை இழந்துள்ளார்.
'கிளப் ஸ்போர்ட் மார்டிமோ லா குவைரா' (Club Sport Maritimo La Guaira) அணியின் காற்பந்து வீரரான லூகாஸ் பெரிஹோ (Lucas Trejo), கடந்த மூன்று நாட்களாக கட்டிட இடிபாடுகளை அகற்றி, தனது மனைவி யனினா மற்றும் பிள்ளைகளான ஏரன், ஏன்ஹோ ஆகியோரின் விபரங்களை தேடுவதிலேயே பெரும் பொழுதைக் கழித்துள்ளார்.
நிலநடுக்கத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 'லா குவைரா' (La Guaira) கடலோர நகரில் அமைந்துள்ள அவரது வீடிருந்த பகுதியில் தற்பொழுது எஞ்சியென எதுவுமே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்க பேரழிவினால் இதுவரை 1,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
38 வயதான பெரிஹோ, தலைநகர் கராகஸில் அமைந்திருந்த அணியின் பயிற்சி முகாமில் இருந்தபோதே இந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக தலைநகரிலிருந்து 18 மைல் தொலைவில் வடக்கே அமைந்துள்ள லா குவைரா நகரிலுள்ள தனது வீட்டிற்கு விரைந்துள்ளார். எனினும், அங்கு அவர் ஒரு பயங்கரமான காட்சியையே எதிர்கொண்டுள்ளார். "கட்டிடம் இருந்த இடத்தில் எதையுமே காண முடியவில்லை. அவரது குடும்பத்தினர் அங்கு இருந்திருக்கக் கூடாது என்பதே எங்களது பிரார்த்தனையாக இருந்தது" என பெரிஹோவின் மைத்துனர் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளைப் பரிசோதித்து, சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கப் பெறுகின்றதா எனத் தீவிரமாக முயற்சித்த பெரிஹோ, மீட்புப் பணிகளுக்காகப் பாரிய கனரக இயந்திரங்களின் உதவியைக் கோரியிருந்தார்.
அவரது நண்பர்களும் சக அணி வீரர்களும் மேலும் வலுவான மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு கோரி காணொளி (Video) ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். "தற்போது எங்களிடம் ஒரேயொரு இயந்திரம் மாத்திரமே உள்ளது. அது போதுமானதாக இல்லை" என வெனிசுலாவின் 'மெட்ரோபொலிடானோஸ்' காற்பந்து கழக வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களைத் தேடும் பணி பலரது இதயங்களை உடைக்கும் விதமாகவே நிறைவுக்கு வந்துள்ளது. பெரிஹோவின் குடும்பத்தினரது மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபத்தை சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம் வெளியிட்டுள்ள அவரது காற்பந்து கழகம், பெரிஹோவின் குடும்பப் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளது. "லூகாஸ், நீங்கள் தனித்து விடப்படவில்லை. காற்பந்து கழகத்தின் உங்கள் குடும்பம் என்றும் உங்களுடன் இருக்கும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இது அரிதாக நிகழக்கூடிய இரட்டை நிலநடுக்கம் (Earthquake doublet) ஆகும். வெறும் 39 விநாடிகள் இடைவெளியில் ஏற்பட்ட இந்த இரு பெரும் நிலநடுக்கங்கள், நாட்டின் பல காற்பந்து வீரர்களின் உயிரைப் பறித்துள்ளதுடன், மேலும் பலருக்குப் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருள், வளர்ந்து வரும் இளம் திறமையான காற்பந்து வீரரான யிம்வெர்ட் பெரோட்டரானும் (Yimvert Berroteran) உள்ளடங்குவதாக வெனிசுலா தேசிய அணி மற்றும் வெனிசுலா காற்பந்து சம்மேளனம் என்பன அறிவித்துள்ளன.
18 வயதான இந்த இளம் வீரர், சில மாதங்களுக்கு முன்னர் தோஹாவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் விளையாடியிருந்ததுடன், அண்மையில் 20 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அணியிலும் விளையாடியிருந்தார். இந்த நிலநடுக்க அனர்த்தம் விக்டர் பலாசியோஸ் (Victor Palacios) மற்றும் ரசான் சிஜா (Razan Sijaa) ஆகிய இளம் வீரர்களின் உயிர்களையும் பலிகொண்டுள்ளது.
மற்றுமொரு வீரரான ஹெக்டர் பெல்லோவின் மனைவி, தனது கைக்குழந்தையைப் பாதுகாத்தவாறே இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார். அத்துடன், எட்டு சீனர் உட்பட வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வௌிநாட்டு நிரந்தரக் குடியிருப்பாளர்களும் உயிரிழந்தவர்களுள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது ஒன்பது ஸ்பானிய பிரஜைகள் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக ஸ்பெயின் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உயிர்களுடன் இருப்பவர்களை மீட்பதற்கான மிகத் தீர்மானமிக்க காலப்பகுதியான முதலாவது 72 மணித்தியாலங்கள் தற்போது கடந்துவிட்டன.
வரலாற்று ரீதியாக, இக்காலப்பகுதிக்கு பின்னர் நீர் இன்றி உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புக்கள் மிக வேகமாக வீழ்ச்சியடையும் சாத்தியக்கூறுகள் உள்ள போதிலும், சில ஆய்வுகளின்படி உயிர்களுடனான மீட்புப் பணிகள் பெரும்பாலும் முதல் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குள்ளேயே அதிகளவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


