அதிர்வு; வெளிநாடுகளிலிருந்து அவசர உதவிகள்
இலங்கைக்கும் இத்தகைய ஆபத்து உள்ளதா? புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்கை
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளை உள்ளடக்கிய இமயமலைப் பிராந்தியத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390ஐக் கடந்துள்ளதுடன், காணாமல்போயுள்ள 900க்கும் மேற்பட்டோரைத் தேடும் நோக்கில் இரவும் பகலும் பாரிய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திபெத் எல்லைப் பகுதியிலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 550 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இரு நாடுகளினதும் எல்லைப் பகுதி உள்கட்டமைப்பு வசதிகள் முற்றாக அழிவடைந்துள்ளன.
பனிப்பாறை சரிந்து வீழ்ந்த விதம் மற்றும் அறிவியல் பூர்வ உறுதிப்படுத்தல்
ஆரம்பத்தில் இந்த அதிர்வு ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவான நிலநடுக்கம் என ஊகிக்கப்பட்ட போதிலும், நேபாள பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை அதிகாரசபை (NDRRMA) மற்றும் சர்வதேச ஒருங்கிணைந்த மலைப்பகுதிகள் அபிவிருத்தி மையம் (ICIMOD) ஆகியன இணைந்து நடத்திய பகுப்பாய்வுகளின் மூலம், இது நேபாள எல்லையிலுள்ள ‘லங்டாங் லிரங்’ (Langtang Lirung) மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 5,200 மீற்றர் உயரமான இடத்திலிருந்து பாரிய பனி மற்றும் பாறை அடுக்குகள் கீழே சரிந்து வீழ்ந்ததால், நேபாள-சீன எல்லையினூடாகப் பாயும் 'லெண்டே' ஆறு அடைபட்டு தற்காலிக அணைக்கட்டு ஒன்று உருவாகியுள்ளது. அந்த அணைக்கட்டு உடைந்ததைத் தொடர்ந்து, கீழ்நோக்கிப் பாயும் திரிசூலி (Trishuli) மற்றும் போடேகோஷி பள்ளத்தாக்குகளை நோக்கிச் சில வினாடிகளுக்குள் பாரிய வெள்ளப்பெருக்கு சீறிப்பாய்ந்துள்ளது.
மண்சரிவிலிருந்து விடுபட்டு வந்த பாரிய பாறைத் துண்டுகள் பல மைல்கள் தூரத்திற்கு அடித்துச் செல்லப்படுவதையும், ஆற்றங்கரைகள் அரிப்படைவதையும் ட்ரோன் மற்றும் காணொளிப் பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
மீட்புப் பணிகளும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் நிலையும்
திரிசூலி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையொன்றுக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் உட்பட 350 பேரை நேபாள இராணுவத்தினர் வெற்றிகரமாக மீட்டுள்ளதுடன், அங்குள்ள எஞ்சியோரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் கைலாஷ மானசரோவர் யாத்திரை மற்றும் சுற்றுலாக்களில் ஈடுபட்டிருந்த 178 இந்தியர்கள், 65 அமெரிக்கர்கள், 33 பிரித்தானியர்கள் உட்பட 31 நாடுகளைச் சேர்ந்த 540 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் காணாமல்போயுள்ளதாக நேபாள சுற்றுலாச் சபை தெரிவித்துள்ளது.
சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான பிரதான வர்த்தக மற்றும் சுற்றுலா மையமான 'கிராங்' (Gyirong) எல்லைச் சாவடி மற்றும் வீதி அமைப்பு முழுமையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அழிவடைந்துள்ளதுடன், எல்லையில் புதிதாக நீர்நிலையொன்று உருவாகி வருவதால் மீண்டும் ஒரு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் நிலவுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உதவிகளும் நிவாரணச் சேவைகளும்
பேரழிவை எதிர்கொண்டுள்ள நேபாளத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக ஐக்கிய இராச்சியம் 5 மில்லியன் பவுண்ட் அவசர உதவியை அறிவித்துள்ளதுடன், இந்தியா தற்காலிகக் கூடாரங்கள், கம்பளிகள் மற்றும் மருந்துகள் அடங்கிய 10 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
சீன அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியன அவசர நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை, செஞ்சிலுவைச் சங்கம் 31 மில்லியன் டொலர் அவசர உதவிக்கான கோரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கைக்கான ஆபத்து குறித்து புவியியலாளர்களின் கவனம்
இதேவேளை, நேபாளத்தில் ஏற்பட்டது போன்ற இயற்கை பேரழிவுகள் மற்றும் மலைப்பகுதிகளிலான திடீர் வெள்ளப் பெருக்கு நிலைமைகள் இலங்கையிலும் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைமைப் பேராசிரியர் அதுல சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மலைப்பகுதிகளில் ஏற்படும் பாரிய மண்சரிவுகள் காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகள் அடைபட்டுத் தற்காலிக அணைகள் உருவாவதும், அவை ஒரே நேரத்தில் உடைந்து போவதனால் கீழ் பள்ளத்தாக்குகளுக்குத் திடீர் வெள்ளத் தாக்குதல் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய நிலைமைகளைத் தடுப்பதற்கும், முன்எச்சரிக்கை பொறிமுறைகளை முறைப்படுத்துவதற்கும் அதிகாரிகள் மேலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் பேராசிரியர் வலியுறுத்தியுள்ளார்.


