மானுட அபிவிருத்திப் பணிகளுக்கு உடனடி நிதி ஒதுக்கீடு
கடினமான தருணத்தில் நீட்டிய கரங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு
நேபாளத்தைப் பாதித்துள்ள பேரழிவுமிக்க வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக அவதிப்படும் மக்களுக்கு அவசர நிவாரணம் மற்றும் மானுட அபிவிருத்திப் பணிகளுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் (USD 1 Million) நிதி உதவியை வழங்கிட இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நேரடிப் பணிப்புரையின் பேரில் இந்த நிதி உதவி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பேரழிவினால் உயிர்களை இழந்த மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்காக இலங்கை அரசாங்கத்தினதும் நாட்டு மக்களினதும் ஆழ்ந்த இரங்கலும் நேபாளத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர மட்டத்திலான தலையீடு
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால இருதரப்பு நட்புறவை நினைவு கூர்ந்து, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சிஷிர் கனால் (Shisir Khanal) உடன் தொலைபேசி மூலம் நேரடிச் සා his உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, பேரழிவுக்கு மத்தியில் இலங்கை நேபாளத்துடன் உறுதியாக நிற்பதாகத் தெரிவித்த அமைச்சர், தொடர்ச்சியான மீளமைப்பு நடவடிக்கைகளில் மேலதிக உதவிகளை வழங்குவதற்கான வழிகள் குறித்து ஆராயப்படும் என்றும் உறுதிப்படுத்தினார்.
தெற்காசிய ஒத்துழைப்பை மெச்சி ஐ.நா பாராட்டு
இலங்கையின் இந்த உடனடி மானுடவியல் நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் (UN) விசேட பாராட்டைப் பெற்றுள்ளது. இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அன்ட்ரே பிரான்சே (Marc-André Franche) தனது 'X' பதிவில், இழப்புகளையும் பிறரின் கருணையையும் அனுபவித்த ஒரு நாட்டிலிருந்து வெளிப்பட்ட இந்த உயிர்காக்கும் தலையீடு, "தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின்" (South-South solidarity) சிறந்த முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.



