வருடாந்த வேல் விழா ஊர்வலம் காரணமாகக் கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் எனப் பொலிஸார் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளி இரத ஊர்வலமானது செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) காலை 7.30 மணிக்கு புறக்கோட்டை செட்டித் தெருவிலுள்ள கதிரேசன் கோவிலில் இருந்து ஆரம்பமாகி, இரவு 8.30 மணியளவில் பம்பலப்பிட்டியிலுள்ள புதிய கதிரேசன் கோவிலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஊர்வலமானது செட்டித் தெரு, கேஸ் வொர்க்ஸ் சந்தி, பிரதான வீதி, கான் கடிகாரக் கோபுரம், YMBA சந்தி, லேடன் பஸ்டியன் வீதி, யோர்க் வீதி, பரன் ஜயதிலக்க மாவத்தை, ஜனாதிபதி மாவத்தை, காலி முகத்திடல் மற்றும் காலி வீதி வழியாக பம்பலப்பிட்டியைச் சென்றடையவுள்ளது.
பொலிஸாரின் தகவல்படி, இந்த ஊர்வலம் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையான காலப்பகுதியில் கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி வழியாகக் காலி வீதியில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இரவு 7.00 மணியளவில் பழைய கதிரேசன் கோவிலையும், இரவு 8.30 மணியளவில் புதிய கதிரேசன் கோவிலையும் சென்றடையும்.
மறுமார்க்க ஊர்வலமானது ஜூலை 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவிலில் இருந்து ஆரம்பமாகி, புறக்கோட்டை செட்டித் தெரு கதிரேசன் கோவிலை நோக்கிப் பயணிக்கும். இவ்வூர்வலம் நள்ளிரவு 12.30 மணியளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பிட்ட காலப்பகுதிகளில் ஊர்வலம் செல்லும் பாதைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், சாரதிகள் மற்றும் பொதுமக்கள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


