ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா மங்களத்தின் இன்று (28) நடைபெறவுள்ள காவடி நடனம் அடங்கிய பெரஹராவிற்காக விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை அமல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸாருக்கு மேலதிகமாகப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பெரஹராவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தெவிநுவர பெரஹராவில் காவடி நடனம் ஆடுவது தொடர்பாகக் குற்றக் குழு உறுப்பினர்கள் இரு பகுதியினரிடையே எழுந்த மோதல் நிலைமையையடுத்து, அந்நடனத்தை இம்முறை நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபரினால் அண்மையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், அது குறித்துத் தீர்மானிப்பதற்காக விசேட கலந்துரையாடலொன்று நேற்று (27) பிற்பகல் மாத்தறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றதுடன், அதில் கடந்த ஆண்டுகளில் காவடி நடனத்தில் பங்கேற்ற அனைத்துக் குழுக்களுக்கும் இம்முறையும் காவடி நடனமாட அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, பொலிஸாரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இன்றைய தினம் தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹரா மங்களம் காவடி நடனத்துடன் வீதி உலா வரவுள்ளது.
இதனிடையே, தெவிநுவர பெரஹரா மங்களத்தின் பாதுகாப்பு தொடர்பாக உருவெடுத்துள்ள பிரச்சினை குறித்து அரசியல் மேடைகளிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய குறிப்பிடுகையில், தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.
தெவிநுவர தேவாலயத்தில் உருவான அசாதாரண சூழ்நிலை குறித்துத் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி கருத்துத் தெரிவிக்கையில், புலனாய்வுத் தகவலொன்று கிடைக்கும் போது அதனைப் பகுப்பாய்வு செய்து தீர்மானங்களை எடுக்கத் தவறவது சில தருணங்களில் தவறாக முடியலாம் என்றும், அது பொலிஸாரின் கடமையாகும் என்றும் கூறினார்.
அதனை அரசாங்கத்தின் குறையாகச் சித்தரிப்பது சில குழுக்களின் பிரச்சினையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றக் குழு உறுப்பினர்களுக்கு நாட்டின் கலாச்சார விழாக்களைக் கட்டுப்படுத்துவதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படக் கூடாது என முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக சுட்டிக்காட்டியுள்ளார்.


