வருடாந்த பெரஹராவில் கடந்த ஆண்டுகளில் காவடியாடிய அனைத்துக் குழுக்களுக்கும் இவ்வாண்டும் காவடியாடுவதற்கான அனுமதியை வழங்கத் தீர்மானித்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில், பொலிஸ் மா அதிபரின் பங்கேற்புடன் மாத்தறை மாவட்டச் செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தெவிநுவர பெரஹராவில் காவடியாடுவது தொடர்பாக இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் எழுந்த மோதல் நிலைமையால் உருவான அசாதாரண சூழ்நிலையே இவ்வாறானதொரு கலந்துரையாடலுக்குக் காரணமாக அமைந்தது.
தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹராவில், கடந்த ஆண்டு நீக்கப்பட்ட சில காவடி குழுக்களுக்குக் கட்டாயமாக வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என அச்சுறுத்தும் வகையில் பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கஞ்சிப்பானி இம்ரான்' என்பவரின் பெயரில் வெளியான குரல்பதிவு நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அக்குரல்பதிவு மூலம் குறித்த தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பாதாள உலகக் குழு உறுப்பினரான 'தெஹிபாலே மல்லி' என்பவர் அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து குரல்பதிவன்றை வெளியிட்டிருந்த நிலையில், பின்னர் ஜூலை 21ஆம் திகதி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிப் சூட்டுச் சம்பவமும் இடம்பெற்றிருந்தது.
இவ்வாறான பின்னணியில், தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹராவில் காவடி நடனக் குழுக்கள் கலந்துகொள்வதைத் தற்காலிகமாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்னவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களைக் கருத்திற் கொண்டு பொலிஸ் மா அதிபர் அறிவித்திருந்ததாவது,
“பெரஹராவின் காவடி நடனப் பிரிவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் ஆதரவாளர்களும் நடனமாட வாய்ப்புள்ளதால், அக்குழுக்களுக்கிடையில் ஏதேனும் கலவரங்கள் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் நிகழ வாய்ப்புள்ளது”
என்பதாகும்.
அதற்கமைய, பொலிஸ் மா அதிபரிடமிருந்து கிடைத்த பரிந்துரைகளின் அடிப்படையில், தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹரா மங்களத்திலிருந்து காவடி நடனப் பிரிவை நீக்குமாறு மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேக்கு அறிவித்திருந்தார்.
இருப்பினும், தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க, நேற்று பிற்பகல் இது தொடர்பான தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி:
"தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் 769 ஆவது எசல பெரஹரா மங்களத்தின் 06 ஆவது வீதி பெரஹராவில் காவடி நடனங்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் எனக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், பதிவுசெய்யப்பட்ட 25 குழுக்களுக்கு மாத்திரம் நடனமாட அனுமதி வழங்குகின்றேன்"
இவ்வாறான பின்னணியில், இலங்கை பொலிஸார் இன்று (27) பிற்பகல் செய்தியாளர் சந்திப்பொன்றை அழைத்து, உருவெடுத்துள்ள இந்நிலைமை குறித்துக் கருத்து வெளியிட்டனர்.
அதற்கமைய, இது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று பல தரப்பினரின் பங்கேற்புடன் மாத்தறை மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதற்காகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் மாத்தறை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பெரஹராவுடன் தொடர்புடைய தரப்பினர் கலந்துகொண்டிருந்தனர்.
==================
தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா மங்களத்தில் கடந்த ஆண்டு நடனமாடிய 45 காவடி நடனக் குழுக்களுக்கும் இம்முறை பெரஹராவிலும் நடனமாட அனுமதி வழங்கப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தீர்மானித்துள்ளார்.
மாத்தறை மாவட்டச் செயலகத்தில் இன்று (27) பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன உள்ளிட்ட தரப்பினரின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
நாளை (28) நடைபெறவுள்ள பெரஹராவிற்கு மேலதிக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரையும் பொலிஸாரையும் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்துவதற்கும் இக்கலந்துரையாடலில் மேலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


