இன்றைய தினத்திற்குரிய (24) பாராளுமன்ற அமர்வின் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இந்த அமர்வு நடைபெறுகின்றது.
இதேவேளை, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சியினர் கடந்த 21 ஆம் திகதி சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளித்திருந்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின் போது, தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் நிறைவேற்றத் தவறியமையினாலேயே நீதி அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய, இன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையிலான காலம் நிலையான கட்டளைகள் 22 இன் 1 முதல் 6 வரையிலான பாராளுமன்ற நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலான காலம் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரையிலான காலம் நிலையான கட்டளைகள் 27/2 இன் கீழான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியில் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்திருந்தது.
இதற்கமைய, இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணைகள் எதிர்வரும் திகதியொன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.


