புகையிரதப் பாதை, பேராபத்துமிக்க 'செல்ஃபி மண்டலமாக' மாறிய பின்னணி
மூளையில் கோர்ட்டிசோல் குறைந்து டொபமைன் அதிகரிக்கும் போது உயிராபத்தை மறக்கச் செய்யும் 'செல்ஃபிடிஸ்' (Selfitis) மனநிலை
கடந்த ஜூலை 19 ஆம் திகதி காலை நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் அம்பேவெல பகுதியில் வைத்து கீழே விழுந்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பெண் ஒருவர் பலத்த காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி பதிவாகியிருந்தது. இது இலங்கையின் புகையிரதப் பாதையில் கேட்கப்படும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமல்ல. புகையிரத மற்றும் வைத்தியசாலை வட்டாரங்களின் தகவலின்படி, ஓடும் புகையிரதத்தின் கதவில் தொங்கியவாறு செல்ஃபி எடுக்க முயன்றபோதே அவர் இந்த விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இலங்கையின் மலைநாட்டு புகையிரதப் பாதை உலகின் மிக அழகான 10 புகையிரதப் பாதைகளில் ஒன்றாக போர்ப்ஸ் (Forbes) சஞ்சிகையினால் பெயரிடப்பட்டிருந்த போதிலும், அதன் மறுபக்கம் அது உலகின் மிக ஆபத்தான 'செல்ஃபி எடுக்கும் இடங்களில்' ஒன்றாக மாறியுள்ளமையாகும்.
குறிப்பாக எல்ல, ஒன்பது வளைவுப் பாலம் (Nine Arch Bridge), இதல்கஸ்ஹின்ன, தெமோதரை, ஒஹிய மற்றும் அம்பேவெல போன்ற எழில்மிக்க பகுதிகளைச் சூழ ஓடும் புகையிரத கதவுகளில் தொங்கியவாறோ அல்லது படிக்கட்டுகளில் அமர்ந்தவாறோ புகைப்படம் எடுக்க முற்படும் போது, பாதையின் இருமருங்கிலுமுள்ள மரங்கள் அல்லது சுரங்கப் பாதைகளின் சுவர்களில் மோதுவதாலும், தலை மற்றும் கைகளை வெளியே நீட்டுவதாலும் விபத்துக்கள் சம்பவிப்பது இன்று சர்வசாதாரணமான ஒன்றாக மாறியுள்ளது.
இந்த விபத்துக்களுக்கு வெளிநாட்டவர்கள் மட்டுமன்றி, உள்நாட்டு இளைஞர் யுவதிகள் பலரும் இந்த வெறித்தனத்திற்குப் பலியாகியுள்ளனர். புகையிரதத் திணைக்களமும் இலங்கை பொலிஸாரும் இவ்வாறான ஆபத்தான செயற்பாடுகள் குறித்துத் தொடர்ச்சியாக எச்சரித்து வந்த போதிலும், சட்டத்தினால் அல்லது தண்டப் பணத்தினால் மாத்திரம் தீர்க்க முடியாத ஆழமான உளவியல் காரணியொன்று இதற்குப் பின்னால் இருப்பதால், இந்த எச்சரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன.
'விலகலும்' மூளையின் இரசாயன மாற்றமும்
உளவியலில் 'விலகல்' (Diversion) என்பது, மனிதன் தனது அன்றாட வாழ்க்கையின் தாங்க முடியாத மன அழுத்தம், பதற்றம் மற்றும் ஒரே மாதிரியான சலிப்பூட்டும் தன்மையிலிருந்து தற்காலிகமாகத் தப்பிச் செல்வதற்காகக் காட்டும் ஒரு இயல்பான விருப்பமாகும். இது ஒரு வகையான உத்தியோகபூர்வமற்ற உளவியல் சிகிச்சை முறையுமாகும்.
நவீன மனிதன், குறிப்பாக ஐரோப்பியர்கள் போன்ற எந்திரத்தனமான, கால அட்டவணைக்குட்பட்ட, சீரான வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு இலங்கையின் மலைநாட்டு புகையிரதப் பயணம் என்பது வெறுமனே ஒரு போக்குவரத்துச் சாதனம் மட்டுமல்ல, அது ஒரு சொர்க்கத்திற்குள் நுழைவதைப் போன்றதாகும்.
அங்கு காணப்படும் பனிமூட்டம், தேயிலைத் தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், குளிர்ந்த காற்று மற்றும் புகையிரதத்தின் சத்தம் ஆகிய அனைத்துமே மனித நரம்பு மண்டலத்தில் நேரடியாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன.
இந்தச் சூழலில், மூளையின் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கோர்ட்டிசோல் (Cortisol) ஹோமோனின் அளவு விரைவாகக் குறைவடைகின்றது. அதற்குப் பதிலாக மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் டொபமைன் (Dopamine) மற்றும் செரட்டோனின் (Serotonin) ஆகியவை விரைவாக வெளிவிடப்படுகின்றன. உளவியலில் "உச்சக்கட்ட இன்பத்தின் கணம்" (Peak Euphoric Moment) என அழைக்கப்படும் இந்த தருணத்தில், மூளையின் தர்க்கரீதியான முடிவுகளை எடுக்கும் மற்றும் நன்மை தீமைகளை ஆராயும் பகுதியான 'முன் நெற்றிப் புறணி'யின் (Frontal Cortex) தொழிற்பாடு தற்காலிகமாகச் செயலிழக்கின்றது. இதன் விளைவாக, "நான் கீழே விழுந்துவிடுவேனா? இது ஆபத்தானதா?" என்ற இயற்கையான சுய பாதுகாப்பு எண்ணம் அடக்கப்பட்டு, "இந்தத் தருணத்தை இதையும் விட அழகாக, சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும்" என்ற உணர்வு மேலோங்குகின்றது.
'மாயை இன்பம்' (Deceptive Euphoria) மற்றும் சமூக ஊடக மோகம்
உளவியலில் 'மாயை இன்பம்' (Deceptive Euphoria) என அழைக்கப்படும் இந்த நிலைமையின் மிக ஆபத்தான விளைவு என்னவெனில், மூளையின் உயிரிரசாயனத் தொழிற்பாட்டினால் மன அழுத்தம் விரைவாக நீங்குவதுடன், சுய பாதுகாப்பு குறித்த உணர்வும் குறைவடைவதாகும். இந்த நிலைமை புகையிரதத்திற்கு மாத்திரம் உரித்தானதொன்றல்ல; மது அருந்திவிட்டு ஆழமான நீர்நிலைகளில் நீந்தச் செல்லும் போது ஏற்படும் விபத்துக்களுக்கு பின்னாலும் இந்த உளவியல் காரணியே காணப்படுகின்றது.
வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் மறப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாக இது இருந்தபோதிலும், அதனுடன் சேர்ந்து தன்முன்னே உருவாகும் மரண ஆபத்து பலருக்குப் புலப்படாமல் போவது மிகவும் பயங்கரமான ஒரு நிலைமையாகும். மதுபானம் அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மனிதன் இந்த 'மாயை இன்பத்தையே' தேடுகிறான். இங்குள்ள ஒரே வேறுபாடு என்னவெனில், மலைநாட்டு புகையிரதப் பயணத்தின் போது இந்த மாயை இன்பத்தை இயற்கை வழங்குகின்றது என்பதாகும். இருப்பினும் இதன் இறுதி விளைவு சமமான ஆபத்தையே தருகின்றது.
இதற்கு மேலதிகமாக, நவீன சமூக ஊடக யுகத்தில் காணப்படும் 'அங்கீகாரத்தைத் தேடும் மனநிலை' (Validation Seeking) என்பதும் இதற்குப் பலமான காரணியாக அமைகின்றது. "நான் இந்தச் சொர்க்கத்தில் இருக்கின்றேன், நான் எவ்வளவு சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டும்" என்ற உணர்வு இன்று மனிதர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. தான் அனுபவிக்கும் அனுபவத்தைச் உண்மையாக அனுபவிப்பதை விடவும், அதனை மற்றவர்களுக்குக் காட்டி 'லைக்குகள்' (Likes), 'கமெண்ட்டுகள்' (Comments) மற்றும் 'ஷேர்களை' (Shares) பெற்றுக்கொள்வதே இன்றியமையாத பணியாக மாறியுள்ளது.
இதன் காரணமாக, மிகவும் ஆபத்தான, வித்தியாசமான மற்றும் இதுவரை எவரும் எடுக்காத ஒரு விசித்திரமான புகைப்படத்தை எடுப்பதற்கான தூண்டுதலானது, தனது உயிரை விடப் பெறுமதியானது என ஒரு கணத்தில் மனிதனுக்குத் தோன்றுகின்றது. இந்த அதிகப்படியான ஈர்ப்பையே உளவியலாளர்கள் 'செல்ஃபி மோகம்' (Selfitis) என அழைக்கின்றனர். இது கடுமையான உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உண்மையான மனநல நிலைமையாகும்.
பாதுகாப்பான அனுபவமும் எதிர்கால மாற்றமும்
புகையிரதக் கதவில் தொங்கியவாறு எடுக்கும் ஒரு புகைப்படம் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக ஊடகங்களில் மிக அழகாகத் தோன்றினாலும், அதற்குப் பின்னால் ஒரு வினாடியில் பிரிந்து செல்லக்கூடிய பெறுமதிமிக்க உயிரொன்று இருக்கின்றது. மலைநாட்டு புகையிரதப் பாதையின் அழகானது நாம் பாதுகாக்க வேண்டிய ஒரு தேசியச் சொத்தாகும்; அதேவேளை அந்த அழகை ரசிக்கும் விதம் குறித்து நம்மிடையே ஒரு புதிய சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும். அங்கு உண்மையில் கட்டுப்படுத்தப்பட வேண்டியது ஓடும் புகையிரதத்தை அல்ல, நமது சொந்த மனதையே ஆகும்.
இதற்காக 'மாயை இன்பம்' என்பது ஒரு உண்மையான உயிரியல் நிகழ்வு என்பதையும், "எனக்கு எதுவும் ஆகாது" என்ற எண்ணமே பாரிய ஆபத்தின் முதல் அறிகுறி என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதேபோன்று தனது உயிர் சமூக ஊடகங்களின் ஒரு 'லைக்கை' விடப் பெறுமதியானது என்பதைப் புரிந்துகொள்ளும் சமூக ஊடக எழுத்தறிவு காணப்படுவது அத்தியாவசியமானதுடன், எவரும் நமது 'மரண சான்றிதழுக்கு' 'லைக்' போடப்போவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும், புகையிரதத் திணைக்களத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 'எல்ல தொடசி' (Ella Odyssey) புகையிரதத்தில் சுற்றுப்புறத்தை இலகுவாகப் பார்க்கக்கூடிய திறந்த பார்வையாளர் தளங்கள் (Open observation carriage) பயன்பாடு இதற்கான ஒரு பாதுகாப்பான நடவடிக்கையாகும். அத்துடன் ஆபத்தான இடங்களில் எச்சரிக்கைப் பலகைகளைக் காட்சிப்படுத்துவது போன்ற பொறுப்புமிக்க நடவடிக்கைகளை புகையிரதத் திணைக்களம் முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், சுற்றுலாப் பயணிகளாகிய நாமும் அவற்றுக்குக் கட்டுப்பட வேண்டும்.
இறுதியாக, சுதந்திரம் என்பது நினைத்தபடி நடந்துகொள்வது அல்ல; தனது உணர்ச்சிகளை முறையாகக் கட்டுப்படுத்தி, பாதுகாப்பாகவும் விழிப்புணர்வுடனும் அந்தத் தருணத்தை அனுபவிக்க முடிவதாகும். அவ்வாறன்றி சுய பாதுகாப்பைக் கருதாது மேற்கொள்ளப்படும் விநோதப் பயணம் உங்களது 'இறுதிப் பயணமாக மாறுவதற்கும்', அலட்சியமாக எடுக்கும் 'செல்ஃபி' உங்களது வாழ்க்கையின் 'இறுதிப் புகைப்படமாக மாறுவதற்கும்' அதிக வாய்ப்புகள் உள்ளன.


