சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று முற்பகல் 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் 119 மற்றும் 120 இன் கீழ் இரண்டு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன.
முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை விசேட பிரேரணையாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு முழுமையான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் திட்டம் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (COPA) மேற்கொண்ட விசாரணை அறிக்கையைச் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அத்துடன், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (COPE) விசாரணைகளின் போது வெளிக்கொணரப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைப்பது குறித்தும் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை பொது மனுக்கள் பற்றிய குழுவின் செயல்திறன் குறித்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்றைய தினம் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து விசேட கலந்துரையாடலையொன்றை நாளை மறுதினம் நடாத்தவுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


