-
"2015 இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை 2026 இல் சவாலுக்கு உட்படுத்துவது காலாவதியானது" - சட்டமா அதிபர் பூர்வாங்க ஆட்சேபனை
-
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை தனிப்பட்ட முறையில் பிரதிவாதியாகப் பெயரிட்டமையும் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை வலுவிழக்கக் கோரியமையும் சட்டவிரோதமானது எனத் தீர்ப்பு
உயிரியல் அடிப்படையின்றி, மருத்துவ அறுவைச் சிகிச்சைகள் மூலம் நபர்கள் தமது பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்வதற்கு அனுமதித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் பாராளுமன்றச் சட்டங்களை வலுவிழக்கச் செய்யுமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று (20) தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு, இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரரின் சமர்ப்பணமும் சட்டமா அதிபரின் ஆட்சேபனையும்:
மனுதாரரான சாந்த ஜயதிலக்க நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை மேற்கொண்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, மனநல மருத்துவர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் நப ஒருவர் அறுவைச் சிகிச்சை மூலம் தனது பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்வதற்கு அனுமதிப்பது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டார்.
அவ்வாறு பாலினத்தை மாற்றிக்கொள்ளும் நபர்களுக்குப் புதிதாகப் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதையும் அவர் சவாலுக்கு உட்படுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன், பூர்வாங்க ஆட்சேபனையொன்றை (Preliminary Objection) முன்வைத்தார்.
அரசியலமைப்பிற்கு அமைவாக அடிப்படை உரிமை மனுவொன்று தொடர்புடைய சம்பவம் இடம்பெற்று ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும், எனினும் மனுதாரர் 2015 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை சவாலுக்கு உட்படுத்தி 2026ஆம் ஆண்டிலேயே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதால், இது முற்றாகக் காலாவதியான (Time-barred) ஒரு வழக்கு எனச் சுட்டிக்காட்டி அதனை நிராகரிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
இடைக்கால மனுதாரர்களின் சட்ட வாதங்கள்:
இந்த வழக்குத் தொடர்பில் இடைக்கால மனுவொன்றைச் சமர்ப்பித்திருந்த கலாநிதி ராதிகா குமாரசுவாமி உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருகையில், பாராளுமன்றத்தினால் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டு சபாநாயகரினால் கையொப்பமிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்கப் பெண்கள் வலுவூட்டல் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கு உயர் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனச் சுட்டிக்காட்டினார். இவ்வாறான கோரிக்கை மக்கள் இறையாண்மைக்கு (Popular Sovereignty) முரணானது எனவும் அவர் வாதிட்டார்.
பெண்கள் ஊடக கூட்டமைப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை மேற்கொள்கையில், அரசியலமைப்பின் 35ஆம் பிரிவுக்கு அமைவாக ஜனாதிபதிக்கெதிராகத் தனிப்பட்ட ரீதியில் வழக்குத் தொடர முடியாது என்பதுடன், பிரதிவாதியாகச் சட்டமா அதிபரை மாத்திரமே பெயரிட முடியும் எனத் தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைத் தனிப்பட்ட முறையில் பிரதிவாதியாகப் பெயரிட்டதன் மூலம் மனுதாரர் சட்ட விதியை மீறியுள்ளதால், இந்த மனுவை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்ல முடியாது என அவர் வலியுறுத்தினார்.
நீதிமன்றத்தின் வினவலும் இறுதித் தீர்ப்பும்:
அனைத்துத் தரப்பினரதும் வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மனுதாரரை நோக்கி, இந்தச் செயற்பாட்டின் மூலம் மனுதாரரின் தனிப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன என வினவினார்.
இதற்குப் பதிலளித்த மனுதாரர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இவ்வாறான சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்குச் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை எனவும், உயிரியல் அடிப்படையின்றி பாலின அடையாளத்தை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிப்பது சட்டவிரோதமானது என்றும் மீண்டும் தெரிவித்தார்.
அதன்போது தலைமை நீதியரசர், "சரி, அதனால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன?" என வினவிய போது, மனுதாரர் தான் சட்டப்பூர்வ அதிகாரம் தொடர்பான பிரச்சினையை மாத்திரமே சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட அனைத்துச் சட்டக் கருத்துக்களையும் இடைக்கால மனுதாரர்களால் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளையும் ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், மனுதாரரின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்பட்டுள்ளதை திட்டவட்டமாக நிரூபிக்கத் தவறியமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரித்து உத்தரவிட்டது.


