மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த அழைப்பிற்குப் பதிலளிக்கும் வகையில், குறித்த விழிப்புணர்வுத் திட்டத்தைப் பொருத்தமான வேறு ஒரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கோரிக்கை விடுத்துள்ளது.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இருதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பையும் உறுதி செய்யும் வகையில் அமர்வை நடத்துவதே மிகவும் பயனுள்ளதாக அமையும் எனச் சுட்டிக்காட்டி, சட்டத்தரணிகள் சங்கம் எதிர்க்கட்சித் தலைவருக்குக் எழுத்துப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் ஆரம்ப யோசனை
முன்னதாக நாடாளுமன்றத்தில் விசேட கூற்றையொன்றை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவூடாக இடம்பெற வேண்டிய நீதிபதிகள் நியமனத் தாமதம் குறித்து 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்துவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவை நாடாளுமன்றத்திற்கு அழைப்பதற்குச் சபாநாயகருக்கு அறிவித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
சட்டத்தரணிகள் சங்கம் முன்னர் ஜனாதிபதியைச் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறியது போன்று, நாடாளுமன்றத்திலும் சுமுகமான மற்றும் தொழில்நுட்பக் கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அதற்காக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் எழுத்துப்பூர்வ நிலைப்பாடு
எனினும், குறித்த அழைப்பிற்குப் பதிலளித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசியலமைப்புத் திருத்தம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உணர்வுபூர்வமான விடயம் தொடர்பாகக் தெளிவுபடுத்துவது மிகவும் காலோசிதமான நடவடிக்கை என்ற போதிலும், அதற்குப் பரந்த அளவிலான அரசியல் உடன்பாடும் சமநிலையான பங்கேற்பும் இருப்பது அத்தியாவசியமானது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கம் வெளியிட்டுள்ள நிலைப்பாடுகளைக் கருத்தில் கொள்ளும்போது, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்நிகழ்வில் பங்கேற்கச் செய்வது தொடர்பான ஆயத்தங்கள் குறித்து அவதானிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி ஏற்கனவே எதிர்ப்புகளை வெளியிட்டுள்ள பின்னணியில், சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்படும் தொழில்முறை மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த விடயங்களை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடுநிலையாகப் பரிசீலிக்கக் கூடிய சூழல் உருவாக்கப்படுவதே இதன் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் எனச் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்
அதற்கமைய, இந்தத் தெளிவுபடுத்தல் திட்டமானது வெறும் ஒரு தரப்பினருக்கு மட்டும் வரையறுக்கப்படாமல், முழு நாடாளுமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழுமையான பங்களிப்பை உறுதிசெய்யக்கூடிய மற்றொரு பொருத்தமான திகதியை ஒதுக்கித் தருமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


