Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 'CID அடித்தது; பலவந்தமாக வாக்குமூலம் பெற்றது'; எதிரிக்கூண்டிலிருந்து பரபரப்பு வாக்குமூலம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 20, 2026 • 5:23 AM

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 'CID அடித்தது; பலவந்தமாக வாக்குமூலம் பெற்றது'; எதிரிக்கூண்டிலிருந்து பரபரப்பு வாக்குமூலம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஷ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இவ்வழக்கு தினசரி அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.
  • வழக்கில் முறைப்பாட்டாளரின் (அரசுத் தரப்பு) சாட்சிய விசாரணை கடந்த வாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எதிரிகளின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகின.
  • "அழுத்தங்களுக்கு மத்தியில் அளித்த வாக்குமூலங்களில் உண்மையும் பொய்யும் உள்ளன" 15ஆம் எதிரி தமிழ் மொழியில் தனது சாட்சியத்தை முன்வைத்த வழக்கின் 15ஆம் எதிரியான மொஹம்மது மொஹம்மது ஹனீஃபா செய்னுல் ஆப்தீன் என்ற 'அபூ ஹினா', ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நீதிமன்றத்தில் தர்க்கங்களை முன்வைத்தார்.
  • "எனக்கு 2014 முதல் சஹ்ரான் மௌலவியைத் தெரியும்.
எழுத்து அளவு:

செய்தமை மற்றும் அதற்கு அணுசரனை அளித்து அனுகூலமளித்தமை தொடர்பாகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், எதிரிகள் மூன்றாவது நாளாகவும் எதிரிக்கூண்டிலிருந்தவாறு தங்களது சாட்சியங்களை முன்வைக்கும் நடவடிக்கைகள் இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்ற மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றன.

நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஷ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இவ்வழக்கு தினசரி அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.

வழக்கில் முறைப்பாட்டாளரின் (அரசுத் தரப்பு) சாட்சிய விசாரணை கடந்த வாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எதிரிகளின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகின. இன்று பிற்பகலுக்குள் வழக்கின் மூன்று முக்கிய எதிரிகள் தங்களது கூற்றுகளைப் பதிவு செய்தனர்.

"அழுத்தங்களுக்கு மத்தியில் அளித்த வாக்குமூலங்களில் உண்மையும் பொய்யும் உள்ளன" 15ஆம் எதிரி

தமிழ் மொழியில் தனது சாட்சியத்தை முன்வைத்த வழக்கின் 15ஆம் எதிரியான மொஹம்மது மொஹம்மது ஹனீஃபா செய்னுல் ஆப்தீன் என்ற 'அபூ ஹினா', ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நீதிமன்றத்தில் தர்க்கங்களை முன்வைத்தார். இவரது உரை துவாலின் துவான் சதாம் என்பவரால் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

2018/2019 காலப்பகுதியில் நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகள், ஹலால் சர்ச்சை, திகன மற்றும் அலுத்கம சம்பவங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நினைவுகூர்ந்த அவர், அக்காலத்தில் நிலவிய பாதுகாப்பற்ற சூழல் காரணமாகவே தாங்கள் கலந்துரையாடல்களை நடாத்தியதாகத் தெரிவித்தார்.

"எனக்கு 2014 முதல் சஹ்ரான் மௌலவியைத் தெரியும். பள்ளிவாசலின் சிறப்பு சொற்பொழிவுகளுக்காக அவரை அழைத்திருந்தோம். நுவரெலியாவில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு நான் சென்றிருந்தாலும், சாட்சியமளித்த அனஸ் என்பவர் குறிப்பிட்டது போல நான் அங்கு தங்கியிருக்கவில்லை.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தயாரித்துக் கொடுத்த சாட்சியத்தையே அவர் வழங்கியுள்ளார் என்பது தெளிவாகிறது. பிரிவு 127 இன் கீழ் நான் அளித்த வாக்குமூலம் சுயவிருப்பத்துடன் வழங்கப்பட்டதன்றாகும்.

CIDஇல் நிலவிய சூழல் மற்றும் சித்திரவதைகள் காரணமாகவே அவ்வாறு கூற நேரிட்டது. நான் முற்றிலும் நிரபராதி என்பதால் என்னை விடுவித்து விடுதலையாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்."

"சூப்பர்மார்க்கெட் கார்டுக்கும் அடித்தார்கள்; இன்று நான் நிரந்தர நோயாளி" – 13 ஆம் எதிரி

அதனைத் தொடர்ந்து, கொழும்பு சாஹிரா கல்லூரியில் சிங்கள மொழியில் கல்வி கற்றதாகக் குறிப்பிட்ட வழக்கின் 13 ஆம் எதிரியான மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப் என்ற 'அபூ மொஹமட்', சிங்கள மொழியிலேயே தனது சாட்சியத்தை முன்வைத்தார்.

2019 ஏப்ரல் 26 ஆம் திகதி தமது அலுவலகத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

"எனது பணப்பையில் இருந்த சூப்பர்மார்க்கெட் பாயிண்ட்ஸ் கார்ட் (Points Card) ஒன்றை சர்வதேச கணக்கின் அட்டை எனக் கூறிக்கூட என்னை அடித்தார்கள். PVC குழாய்களாலும் விளக்குமாறுகள் உடையும் வரையிலும் அடித்ததால் எனது முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இன்று நான் மாற்றுத்திறனாளியாக மாறியுள்ளேன்.

சஹ்ரானுடன் சதித் திட்டம் தீட்டியதாகவோ அல்லது ஆயுதப் பயிற்சி பெற்றதாகவோ சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முற்றாக மறுக்கிறேன். எனது மடிக்கணினி அல்லது தொலைபேசிகளைப் பரிசோதித்ததில் நான் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான எந்தச் சான்றுகளும் வெளிவரவில்லை."

18 எதிரிகளின் சாட்சியங்கள் நிறைவு

அதனைத் தொடர்ந்து, சஹ்ரானின் குழுவின் ஆயுதப் பிரிவின் தலைவராகப் பெயரிடப்பட்டுள்ள 3 ஆம் எதிரியான ஹயாத்து மொஹம்மது அஹமது மில்ஹான் (அபூ சலா) தனது சாட்சியத்தை முன்வைக்கத் தொடங்கிய நிலையில், மேலதிக விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வழக்கின் 17 ஆம் எதிரி உயிரிழந்துள்ளதோடு, 6ஆம் எதிரியான மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் என்ற ‘அபூ தரீக்’ என்பவர் எதிரிக்கூண்டில் இருந்து சாட்சியமளிக்காமல் மௌனம் காக்கத் தீர்மானித்துள்ளார். அதற்கமைய, இதுவரை வழக்கின் 18 எதிரிகளின் சாட்சிய விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

24 எதிரிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கிற்காக முறைப்பாட்டாளர் தரப்பில் 2,309 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணைகளுக்காக முறைப்பாட்டாளர் தரப்பில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜெயசுந்தர மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் குழுவொன்று ஆஜராகியுள்ளதுடன், எதிரிகள் தரப்பில் சட்டத்தரணிகளான கனீல் மத்துமககே, ரவிது யசஸ், நிரோஷன் சிறிவர்தன மற்றும் லாரன்ஸ் ஆடம்ஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று ஆஜராகியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 'CID அடித்தது; பலவந்தமாக வாக்குமூலம் பெற்றது'; எதிரிக்கூண்டிலிருந்து பரபரப்பு வாக்குமூலம்! | Tamil Leader | We Lead the Nation