மாலபே, தலாஹேன பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விரிவான மற்றும் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, அதன் முன்னேற்ற அறிக்கையை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச மாலபே பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 17) மாலபே பொலிஸ் நிலையத்தின் வழக்கு நடாத்தல் அதிகாரி சாஜன்ட் ருவன் கருணாதாஸவினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த விடயங்கள்:
கடுவலை நீதவான் நீதிமன்றில் தெளிவுபடுத்திய பொலிஸ் சாஜன்ட் ருவன் கருணாதாஸ, தலாஹேன பகுதியில் வசித்துவந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாகவும், அவரது சடலம் முல்லேரியா (கொழும்பு கிழக்கு) ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முல்லேரியா வைத்தியசாலைப் பொலிஸாரினால் மாலபே பொலிஸாருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த அறிவித்தலையடுத்து, துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழலை பரிசோதிப்பதற்காக நீதவானின் கள விஜயம் (Magistrate's Observation) அவசியமென பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
நீதவான்களின் குற்றச் செயலிட மற்றும் வைத்தியசாலை கண்காணிப்பு:
பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக செயற்பட்ட கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, முன்னாள் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான மாலபே, தலாஹேன பகுதியிலுள்ள இல்லத்திற்குச் சென்று குற்றச் செயலிடத்தை (Crime Scene) நேரடியாகப் பார்வையிட்டு கண்காணித்தார்.
அதன் பின்னரே, இச்சம்பவம் குறித்து எவ்வித குறைபாடுகளுமின்றி முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாலபே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பிரதீப் ரணசிங்கவிற்கு உத்தரவிட்டார்.
இதேவேளை, சடலம் வைக்கப்பட்டுள்ள முல்லேரியா வைத்தியசாலைக்குச் சென்ற அளுத்கடை இலக்கம் 8 நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க, சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்து, மரணத்திற்கான காரணத்தை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ அறிக்கையை கடுவலை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அங்குள்ள விசேட தடயவியல் மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மகனான வினுர விக்ரமரத்னவிடம் ஒப்படைக்குமாறும், இறுதிச் சடங்குகளை மாலபே தலாஹேன பொது மயானத்தில் நடத்துவதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழுக்கள்:
இந்த மரணம் குறித்த மேலதிக விசாரணைகள், நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கள தெஹிதெனியவின் அறிவுறுத்தலின் பேரிலும், நுகேகொடை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (2) நிரோஷனின் நேரடி மேற்பார்வையிலும் மாலபே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு மேலதிகமாக, தற்போதைய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் கொழும்பு திசைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக பிறப்பிக்கப்பட்ட விசேட உத்தரவிற்கமைய, மேல் மாகாண தெற்கு விசேட புலனாய்வுப் பிரிவினராலும் (Western South Special Investigation Unit) மற்றுமொரு விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


