நிலத்தடி மின் விநியோக வழித்தடம் மற்றும் 14 பெட்ரோலிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு"
கொலோன்னாவை மற்றும் முத்துராஜவெல ஆகிய பகுதிகளில் 8 புதிய எண்ணெய் தாங்கிகளின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துமாறு 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
மின்சக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் நிதித்துறையின் உயர்மட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் 2026ஆம் ஆண்டின் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கான திட்டங்கள் தயாரிப்பு
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று வடக்குத் தீவுகளையும் 'பசுமை மின்சக்தித் தீவுகளாக' (Green Energy Islands) அபிவிருத்தி செய்யவும், கடந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநடுவில் கைவிடப்பட்டிருந்த ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு முகவர் அமைப்பின் (JICA) நிதியுதவியுடனான மின்சக்தி திட்டங்களை 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் உடனடியாக மீள ஆரம்பிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மின்சக்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராய்தல் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் என்பன ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கலப்பு புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மற்றும் மின் விநியோகக் கட்டமைப்பு
வடக்குத் தீவுகளை மையப்படுத்தி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கலப்பு புதுப்பிக்கத்தக்க மின்சக்தி அமைப்புகள் (Hybrid Renewable Energy System - HRES) மற்றும் தேசிய மின் விநியோகக் கட்டமைப்புடன் தொடர்புடைய பிரதான செயற்பாடுகள் சிலவற்றின் முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
-
நிலத்தடி மற்றும் மின் விநியோக நிலைய அபிவிருத்தி: தற்போது கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் கெரவலப்பிட்டியவிலிருந்து கொழும்பு துறைமுகம் வரையான 220 kV இரண்டாவது நிலத்தடி மின் விநியோக வழித்தடம், சம்பூர் - கப்பல்துறை மின் விநியோக அபிவிருத்தித் திட்டம் மற்றும் பாதுக்கை 220kV மின் விநியோக நிலையத்தில் (GSS) STATCOM கட்டமைப்பு நிறுவப்படுவதன் முன்னேற்றம் என்பன இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
-
நவீன மின்சக்தி அணுகுமுறைகள்: கூரைகளில் பொருத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி மற்றும் 'மெய்நிகர் நிகர அளவீட்டுத் திட்டம்' (Virtual Net Metering Project) உள்ளிட்ட நுகர்வோர் மட்டத்திலான மின்சக்தி திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
14 பெட்ரோலிய களஞ்சிய தொகுதி விரிவாக்கத் திட்டங்கள்
நாட்டின் எரிபொருள் பாதுகாப்பு மற்றும் களஞ்சிய வசதிகளை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 14 பிரதான திட்டங்களுக்கான எதிர்கால நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது மதிப்பீடு செய்தார்.
-
புதிய எண்ணெய் தாங்கிகளின் கட்டுமானம்: கொலோன்னாவை எண்ணெய் களஞ்சியகத்தில் புதிதாக 6 எண்ணெய் தாங்கிகளையும் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியகத்தில் 2 புதிய எண்ணெய் தாங்கிகளையும் அமைக்கும் பணிகள் இதில் பிரதானமானவையாகும்.
-
வசதிகளை புனரமைத்தல்: அத்துடன், கொலோன்னாவை எண்ணெய் களஞ்சிய தொகுதியில் உள்ள பழைய எண்ணெய் தாங்கிகளை புனரமைத்தல் மற்றும் அதன் 7ஆம் வலயத்தின் நிரப்புதல் வசதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகளை உரிய காலத்தில் நிறைவு செய்து மக்களுக்கு அதன் நன்மைகளை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


