கருதப்படும் செம்மணி சித்துப்பாத்தி புதைகுழியின் அகழ்வுப் பணிகள், மூன்று வார இடைவேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே மேலும் இரண்டு சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக முன்னிலையாகும் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஜூலை 15ஆம் திகதியான நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், நேற்றைய தின அகழ்வாய்வின் போது ஒரே இடத்தில் ஒன்றாகப் புதைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு உடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த 2025 மே மாதம் 15ஆம் திகதி முதல் 2026 ஜூலை 15ஆம் திகதி வரையிலான ஓராண்டுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில், மூன்று கட்டங்களாக 87 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வுப் பணிகளின் போது, செம்மணி சித்துப்பாத்தி புதைகுழியில் இருந்து இதுவரை 414 மனித உடலங்களின் எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அதில் 409 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
அகழ்வாராய்ச்சிப் பணியாளர்களுக்கு ஓய்வு வழங்கும் நோக்கில் கடந்த ஜூன் 23ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த அகழ்வுப் பணிகள், யாழ். நீதவான் செல்வநாயகம் லெனின்குமாரின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஜூலை 15ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இதேவேளை, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முதல்நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூகா, செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
"இலங்கையில் இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், மனிதப்புதைகுழி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதிலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் வழங்குவதிலும் காட்டிவரும் திட்டமிட்ட, தொடர்ச்சியான மற்றும் வேண்டுமென்றே இழைக்கப்படும் தோல்வியின் குறியீடாகவே செம்மணி மனிதப்புதைகுழி விளங்குகின்றது."
இந்தப் புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட எச்சங்களில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் உள்ளடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மிக மோசமான முறையில், ஒழுங்கற்ற முறையில் வீசப்பட்டு புதைக்கப்பட்டிருந்த 25 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் (piles of bones) இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிநடத்தலின் கீழ், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் முதன்முதலாக கடந்த 2025 மே 15ஆம் திகதி இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அகழ்வாய்வுகளின் போது மனித எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, இதுவரை 120க்கும் மேற்பட்ட தனிப்பட்ட உடமைகளும் சான்றுகளாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றுள் பச்சிளம் குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், பொம்மைகள், சிறுவர்களின் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயக் குற்றிகள் என்பனவும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



