Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தொல்பொருள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இலச்சினையை மாற்றுவதற்குப் பரிந்துரை!

T

The Leader Desk

ஜூலை 15, 2026 • 6:10 AM

தொல்பொருள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இலச்சினையை மாற்றுவதற்குப் பரிந்துரை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்கள் எதிர்கொண்டுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு நியாயமானதும் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என வடக்கின் பிரதான அரசியல் சக்தியொன்று தொல்பொருள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளது.
  • இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) மக்கள் பிரதிநிதிகள் இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 14 ஆம் திகதி) பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் சேனரத் விக்ரமசிங்கவைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
  • இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த 6 அரசியல் கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்து பொதுவானதொரு தளத்தை உருவாக்கியதைத் தொடர்ந்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகியவையே அந்த 6 கட்சிகளாகும்.
எழுத்து அளவு:

மக்கள் எதிர்கொண்டுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு நியாயமானதும் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என வடக்கின் பிரதான அரசியல் சக்தியொன்று தொல்பொருள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் அனைத்துப் பிரஜைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தாத வகையில் அமைந்துள்ள தற்போதைய தொல்பொருள் திணைக்களத்தின் இலச்சினையை (Logo) மாற்றுவதும் இந்த முன்மொழியப்பட்ட தீர்வுகளுள் ஒன்றாக உள்ளடங்குகிறது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) மக்கள் பிரதிநிதிகள் இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 14 ஆம் திகதி) பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் சேனரத் விக்ரமசிங்கவைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த 6 அரசியல் கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்து பொதுவானதொரு தளத்தை உருவாக்கியதைத் தொடர்ந்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகியவையே அந்த 6 கட்சிகளாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் சேனரத் விக்ரமசிங்கவுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது. இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வடக்கு, கிழக்கு நிலப்பரப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மேலதிகமாக சிங்கள மக்களும் முரண்பாட்டு ரீதியில் உரிமை கோரி வரும் நிலையில், தொல்பொருள் திணைக்களம் சிங்கள பௌத்தர்களுக்குச் சார்பாகச் செயற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த வருடம் அரசாங்கத்தினால் 19 சிங்கள உறுப்பினர்களை மாத்திரம் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியின் கையொப்பத்துடன் 2025 நவம்பர் முதலாம் திகதி சனிக்கிழமை வெளியிடப்பட்ட 2460/56 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் நியமிக்கப்பட்ட இத்தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் பதவிக்காலம் 2025.03.10 முதல் 2027.03.09 வரை அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோணேஸ்வர ஆலயச் சூழலிலுள்ள வர்த்தக நிலையங்கள்

பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் சேனரத் விக்ரமசிங்கவுடன் கொழும்பில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது, தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் இருவரும் ஒரு முக்கிய விடயத்தை வலியுறுத்தினர். தொல்பொருள் திணைக்களம் இனம், மத வேறுபாடின்றி நடுநிலையாகச் செயற்படுகின்றது என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டுமாயின், பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 54 வர்த்தக நிலையங்களும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையிலுள்ள பெரும்பாலான இந்துக்கள் சிவபெருமானை வழிபட்டு வருவதுடன், இலங்கையில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்து ஈஸ்வரங்கள் (பஞ்ச ஈஸ்வரங்கள்) காணப்படுகின்றன. அவை யாழ்ப்பாணத்தின் கீரிமலை நகுலேஸ்வரம், மன்னாரின் திருக்கேதீஸ்வரம், திருகோணமலையின் திருக்கோணேஸ்வரம், சிலாபத்தின் முன்னேஸ்வரம் மற்றும் தேவேந்திரமுனையின் தொண்டீஸ்வரம் ஆகிய ஆலயங்களாகும்.

புராதன திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்தினுள்ளேயே 54 வர்த்தக நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டமையால் இந்துப் பக்தர்கள் பெரும் அசெளகரியங்களுக்கும் மனவேதனைக்கும் உள்ளாகியுள்ளதாகக் கடந்த காலங்களில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.

இவற்றுக்கு மேலதிகமாக, பெயர்ப்பலகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் போரதீவுப்பற்று பிரதேச சபை மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை ஆகியவற்றிற்கு எதிராகத் தொல்பொருள் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுமாறும் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திடம் கேட்டுக்கொண்டனர்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேரடியாக வருகை தந்து, தந்திரமலை முருகன் ஆலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவ்விரு பிரதிநிதிகளும் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

தொல்பொருள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தொல்பொருள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இலச்சினையானது பௌத்தர்களின் புனித அடையாளங்களான தர்மச்சக்கரம் மற்றும் தூபி (சைத்தியம்) ஆகியவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மதத்தின் அடையாளங்களை மாத்திரம் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இவ்விளச்சினையில் ஏனைய மதங்களினதோ அல்லது இனங்களினதோ அடையாளங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதை பதில் பணிப்பாளர் நாயகம் சேனரத் விக்ரமசிங்கவிற்குச் சுட்டிக்காட்டிய தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இவ்வுத்தியோகபூர்வ இலச்சினை திருத்தியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேவேளை, குச்சவெளிப் பகுதியில் 37 கிலோமீற்றர் தூரத்திற்குள் 42 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றிற்கும் தொல்பொருள் திணைக்களத்திற்கும் இடையே ஏதேனும் தொடர்புகள் காணப்படுகின்றனவா என்றும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இருவரும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திடம் கேள்வி எழுப்பினர்.

மேலும், வன்னிப் பிராந்தியத்திலுள்ள குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலை ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் ஆலயப் பகுதிகளில் தமிழ் மக்கள் தமது மத வழிபாட்டு உரிமைகளை எவ்வித தடையுமின்றிச் சுதந்திரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். குறித்த பகுதிகள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வழிபாட்டு உரிமைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனவும், எனினும் நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் அப்பகுதிகளில் நடைமுறையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் அங்கு சுட்டிக்காட்டினர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...