கணக்கு விபரங்களை ஹேக்கர்கள் (Cyber Criminals) மாற்றியமைத்துள்ளமை அரசாங்க நிதி பற்றிய குழுவில் (CoPF) அம்பலமாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டுடன் உத்தியோகபூர்வ சேவைக்காலம் (End of Life) நிறைவடைந்த மைக்ரோசொப்ட் (Microsoft Exchange) சர்வர் ஒன்றை, சுமார் 7 வருடங்களாக இற்றைப்படுத்தாமல் (Update செய்யாமல்) பயன்படுத்தியமையே இந்த பாரிய சைபர் பாதுகாப்பு வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருப்பு பணச் சலவை அவதானம் குறித்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் (Federal Reserve) வங்கி மற்றும் சிட்டி வங்கி (Citi Bank) என்பன கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் விடுத்திருந்த எச்சரிக்கைகளை, திறைசேரியின் கீழ்நிலை அதிகாரிகள் மூடிமறைத்துள்ளமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் நீதிமன்றில் இரண்டு 'பி' அறிக்கைகள் (B-Reports) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள தீர்மானமிக்க வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு மத்தியில், திறைசேரியின் அதிஉணர்திறன் மிக்க மற்றும் இரகசிய தகவல்களைக் கொண்ட சைபர் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்டுள்ள பாரிய முறிவு மற்றும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் கடுமையான அலட்சியப்போக்கு காரணமாக, பில்லியன் கணக்கிலான வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகள் சைபர் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டுள்ளமை அரசாங்க நிதி பற்றிய குழுவின் (CoPF) விசாரணைகளில் நேரடியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியிருந்த வெளிநாட்டு கடன் தவணைக்கான வங்கி கணக்கு விபரங்கள் சைபர் தாக்குதல் மூலம் போலியாக மாற்றியமைக்கப்பட்டு, அந்த நிதி ஐக்கிய அரபு அமீரகத்தின் (துபாய்) தனியார் வங்கி கணக்கொன்றிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியா, பெல்ஜியம் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான கடன் கொடுப்பனவுகளின் போதும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
7 வருடங்கள் பழமையான சர்வர் மற்றும் மோசடியின் பின்னணி
திறைசேரி தனது அனைத்து உத்தியோகபூர்வ தொடர்பாடல்களுக்கும் 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டுடன் உத்தியோகபூர்வ சேவைக்காலம் நிறைவடைந்த 'Microsoft Exchange' மின்னஞ்சல் சர்வர் ஒன்றையே பயன்படுத்தியுள்ளது.
-
பூச்சிய மட்டத்திலிருந்த பாதுகாப்பு: 2019ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை இந்த சர்வருக்கான எவ்வித பாதுகாப்பு இற்றைப்படுத்தல்களோ (Security Patches) அல்லது வருடாந்த பாதுகாப்பு கணக்காய்வுகளோ (Security Audits) மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக, எந்தவொரு வெளித்தரப்பினரும் போலி மின்னஞ்சல் முகவரிகள் (Spoofed Emails) ஊடாக திறைசேரியின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவுவதற்கான முழுமையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
தகவல்கள் சரிபார்க்கப்படாமை: உத்தியோகபூர்வ மின்னஞ்சல்கள் மூலம் வந்த வங்கி கணக்கு மாற்றங்கள் குறித்து எவ்வித முறையான சரிபார்ப்புகளையும் (Verification) மேற்கொள்ளாமல், திறைசேரியின் 'பெக் ஆபீஸ்' (Back Office) அதிகாரிகள் அந்த போலி விபரங்களை கணினி கட்டமைப்பில் உள்ளீர்த்து கொடுப்பனவுகளை மேற்கொண்டுள்ளனர்.
எச்சரிக்கைகளை மூடிமறைத்தமை மற்றும் தற்போதைய விசாரணை நிலைமை
-
சர்வதேச வங்கிகளின் தடை: இந்த மோசடியான பணப்பரிமாற்றங்கள் காரணமாக, அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் சிட்டி வங்கி என்பன கருப்பு பணச் சலவை (AML) அவதானத்தை சுட்டிக்காட்டி, கடந்த 2025 நவம்பர் மாதம் முதல் இந்த கொடுப்பனவுகளை நிராகரித்து (Bounce செய்து), மத்திய வங்கி ஊடாக திறைசேரிக்கு அறிவித்திருந்தன. எனினும், திறைசேரி அதிகாரிகள் இது குறித்து மேல் மட்ட நிர்வாகத்திற்கு அறிவிக்கவோ அல்லது உரிய நடவடிக்கை எடுக்கவோ முற்படவில்லை.
-
அதிகாரிகளின் தப்பித்தல் முயற்சி: மத்திய வங்கியிடமிருந்து புதிதாக நிறுவப்பட்ட பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்திற்கு (PDMO) அதிகாரங்களை மாற்றும் இடைமாற்றுக் காலத்தில் ஏற்பட்ட "அறிவுப் பரிமாற்ற இடைவெளியை" (Gaps in Knowledge Transfer) அதிகாரிகள் தங்களின் தப்பிப்பிழைப்பதற்கான காரணியாகப் பயன்படுத்த முயல்வதாக CoPF குழுவில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
-
CERT நிறுவனத்தின் தாமதம் மற்றும் சட்ட நடவடிக்கை: அரசாங்கத்தின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான இலங்கை CERT, திறைசேரியினால் இவ்வாறான பாதுகாப்பற்ற சர்வர் பயன்படுத்தப்பட்டு வருவதை இந்த பாரிய மோசடி இடம்பெற்ற பின்னரே அறிந்துகொண்டுள்ளது. இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதவான் நீதிமன்றில் தற்போது இரண்டு 'பி' அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்க நிதி நிர்வாகத்தில் காணப்பபடும் இவ்வாறான கடுமையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக அலட்சியங்கள் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் நம்பகத்தன்மைக்கு சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பொருளாதார விப்பாளர்கள் பலரும் தங்களது பலத்த கவலையை வெளியிட்டுள்ளனர்.


