சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் இளைஞர்களின் பேரிடர் ஆயத்தநிலை மற்றும் அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட ‘The Resilience Lab, பேரிடர் தருணங்களில் உள்ளூர் இளைஞர் தொழிற்பாடு’ எனும் தேசிய வேலைத்திட்டம் இன்று (12) மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA) மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (NYSC) ஆகியவை இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஒழுங்கமைத்திருந்தன.
இம்முறை சர்வதேச இளைஞர் தினத்தின் கருப்பொருளான ‘வெவ்வேறு சூழல்கள், பொதுவான எதிர்பார்ப்புகள்’ (Different Contexts, Shared Aspirations) என்பதன் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடளாவிய ரீதியில் உள்ள இளைஞர் கழக வலையமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி 100 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.
பேரிடருக்குப் பின்னரான நிவாரணச் சேவைகளுடன் மட்டும் வரையறுக்கப்படாமல், முன்-பேரிடர் அபாய மேலாண்மை, முன்-எச்சரிக்கை தொடர்பாடல் மற்றும் சமூகங்கள் பேரிடர் நிலைகளுக்கு ஆயத்தத்துடன் முகங்கொடுப்பதற்காக இளைஞர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதுமே இதன் பிரதான நோக்கமாகும்.
2.2 மில்லியன் மக்களைப் பாதித்து, 600க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்து, சுமார் 115,000 வீடுகளை அழித்த 'டித்வா' (Ditwah) சூறாவளி போன்ற கடந்தகால பேரிடர் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இங்கு செய்முறைப் பயிற்சிகள் (tabletop simulations) நடத்தப்பட்டன.
வெள்ளம், மண்சரிவு மற்றும் டெங்கு தொற்றுநோய்ச் சூழ்நிலைகளை மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பயிற்சிகளின் மூலம்:
-
கர்ப்பிணித் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் உட்பட மிகவும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய தரப்பினருக்கு முன்-எச்சரிக்கைகளை வழங்குதல்.
-
பாலின மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் (SRHR) மற்றும் பாலின சமத்துவத்தைப் பேரிடர் பதிலளிப்புகளில் உள்ளடக்குதல்.
ஆகிய விடயங்கள் தொடர்பாக இளைஞர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வேலைத்திட்டத்திற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பேரிடர் மேலாண்மை மையம் (DMC), இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (SLRC) மற்றும் இலங்கை குடும்பக் திட்டமிடல் சங்கம் (FPASL) ஆகிய நிறுவனங்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்கின.
2024 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின்படி, 15-29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் மொத்த சனத்தொகையில் 22% (ஒவ்வொரு 5 பேரிலும் ஒருவர்) ஆவர். நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இயங்கும் இந்த வலையமைப்பின் மூலம் சுமார் 280,000 இளைஞர் படைகளைச் சுறுசுறுப்பாக இணைக்க முடியும்.
அங்கு கருத்துத் தெரிவித்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் இளைஞர் விவகாரப் பணிப்பாளர் நாயகமுமான சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, பேரிடர் தருணங்களில் வெறும் பதிலளிப்பவர்களாக மட்டும் இல்லாமல், முன்-எச்சரிக்கைகளை வழங்கி, சமூகங்களை ஒழுங்கமைத்து, உயிர்களைப் பாதுகாக்கச் சுறுசுறுப்பாகப் பங்களிக்கும் இளைஞர் தலைமையை உருவாக்குவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் எனக் குறிப்பிட்டார்.
அதேபோல், UNFPA இலங்கையின் உதவிப் பிரதிநிதி டாக்டர் தயாநாத் ரணதுங்க தெரிவிக்கையில், இளைஞர் யுவதிகள் வெறும் பேரிடர் நிவாரணம் பெறுபவர்கள் மட்டுமல்ல என்றும்; அவர்கள் தொடர்பாளர்கள், சமூக அமைப்பாளர்கள் மற்றும் முதன்மைப் பதிலளிப்பாளர்கள் என்றும் கூறினார். இளைஞர் வலையமைப்பிற்குத் தொழில்நுட்ப அறிவு மற்றும் பாலின சமத்துவப் புரிதலை வழங்குவதன் மூலம் அவர்களின் ஆர்வத்தை நாட்டிற்கே நன்மையளிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியாக மாற்ற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


