உள்ளிட்ட உள்நாட்டு அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் காரணமாக, இம்மாத இறுதியில் பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது பயணத்தை இவ்வருட இறுதிவரை பிற்போட்டுள்ளார்.
இந்த அவசரத் தீர்மானம் குறித்து பிரான்ஸ் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இவ்வருடத்தின் பிற்பகுதியில் இந்த விஜயத்திற்கான புதிய திகதியொன்றை ஒதுக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மாக்ரோனின் அழைப்பும் விஜயத்தின் பின்னணியும்: கடந்த பெப்ரவரி மாதம் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact Summit’ மாநாட்டின் போது, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
அச்சந்திப்பின் பலனாக, பிரான்ஸ் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட விசேட இராஜதந்திர உத்தியோகபூர்வ அழைப்பிற்கு அமையவே இந்த பாரிஸ் விஜயம் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விஜயம் பிற்போடப்பட்டதால் ஏற்படும் தீர்க்கமான விளைவுகள்: இந்த விஜயம் பிற்போடப்பட்டமையானது, இலங்கையின் எதிர்கால பொருளாதார மற்றும் வர்த்தக வியூகங்களை நேரடியாகப் பாதிக்கும் சில முக்கிய காரணிகளுடன் பிணைந்துள்ளது.
-
GSP+ வரிச்சலுகை இழக்கப்படும் அபாயம்: இலங்கை தற்போது பெற்றுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 'GSP+' வரிச்சலுகை காலம் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. அடுத்த ஆண்டு (2027) முதல் புதிய வரிச்சலுகைகளைப் பெறுவதற்கு இலங்கை புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதுடன், அதற்கு பிரான்ஸின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதே ஜனாதிபதியின் முதன்மை இலக்காக இருந்தது.
-
சர்வதேச நிபந்தனைகள்: GSP Plus சலுகையைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கு மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட 27 சர்வதேச உடன்படிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறான பின்னணியில், நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் சர்வதேச கண்காணிப்பாளர்களின் பார்வையில் இலங்கைக்கு அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய காரணியாக மாறியுள்ளது.
-
கையெழுத்தாகவிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs): இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, நிதி மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்காக பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையே 3 தீர்க்கமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருந்தன. ஜனாதிபதி பிரான்ஸ் செல்வதற்கு முன்னர் இந்த ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்களை இறுதி நிலைக்கு கொண்டுவர அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது.
பிரான்ஸ் செல்லவிருந்த உயர்மட்ட அரச தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜெயந்த ஆகியோர் உள்வாங்கப்பட்டிருந்தனர். எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு நிர்வாகப் பதற்றங்களைத் தணிக்கும் வரை ஜனாதிபதி நாட்டிலேயே தங்கியிருக்க எடுத்த முடிவின் காரணமாக, ஒட்டுமொத்த இராஜதந்திர பயணமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


