போலியான நிறுவனங்களின் பிணையம் மூலமாக 80 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி, அரசாங்கத்திற்கும் நிதி அமைப்புக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நாட்டின் முன்னணி தொழிலதிபர் ஒருவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை மேஜிஸ்திரேட் அசங்க எஸ். போதர இன்று (10) உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் மொஹமட் முஸம்மில் மொஹமட் இன்ஷான் எனும் தொழிலதிபராவார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் பொருளாதாரக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அங்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கைகள் மற்றும் கருத்திற் கொண்டு தலைமை மேஜிஸ்திரேட் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
26 நிறுவனங்களின் கட்டுப்பாடு மற்றும் சந்தேகநபரின் பங்களிப்பு
விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேலதிக அறிக்கையின் மூலம், இந்த பிரம்மாண்ட மோசடியின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் ஜெஃப்ரி மொஹமட் (Jeffrey Mohamed) என்பவரின் பணப் பரிவர்த்தனை செயல்முறையை முழுமையாக இயக்கியவர் கைது செய்யப்பட்ட மொஹமட் முஸம்மில் மொஹமட் இன்ஷான் எனச் சுட்டிக்காட்டினர்.
விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளவாறு, இந்த மோசடியுடன் தொடர்புடைய போலி நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் முழுமையான கட்டுப்பாடும் செயல்பாடுகளும் இச்சந்தேகநபரிடமே இருந்துள்ளன.
சந்தேகநபர்களுக்குச் சொந்தமான பல வங்கிச் கணக்குகள் குறித்து எதிர்காலத்தில் விரிவான தணிக்கை மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், சந்தேகநபருக்குப் பிணை வழங்குவதற்கு விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
நான்கு தனியார் வங்கி அதிகாரிகளும் சிறையில்
நாட்டின் நிதி அமைப்பைக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கி, போலி இறக்குமதி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டுச் செலாவணியை வெளிநாடுகளுக்குக் கடத்தும் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட வலைப்பின்னலுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில், நான்கு முன்னணி தனியார் வங்கிகளின் தலைமை அதிகாரிகள் நால்வர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விளக்கமறியலில் உள்ளவர்கள்:
-
செய்லான் வங்கியின் பம்பலப்பிட்டி கிளையின் மேலாளர் ஷிரான் மரியோ பெரேரா,
-
சம்பத் வங்கியின் உமேஷ் ரந்திக பெர்னாண்டோ,
-
யூனியன் வங்கியின் தர்மலிங்கம் பெர்னாண்டோ,
-
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் அமல உதார.
குறித்த வங்கி அதிகாரிகள் சரியான வாடிக்கையாளர் சரிபார்ப்பு நடைமுறைகளையோ (KYC - Know Your Customer) அல்லது நிதி ஒழுங்குமுறை முறைகளையோ சரியாகச் செயல்படுத்தாமல், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
8 நபர்களின் பெயர்களில் 36 நிறுவனங்கள்: 199 பணப்பரிமாற்றங்கள்
நிதிப் பொருளாதாரக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவல்களின்படி, முக்கிய சந்தேகநபரான ஜெஃப்ரி மொஹமட் எட்டு நபர்களின் அடையாளங்களைப் பயன்படுத்திப் பதிவு செய்த 36 போலி நிறுவனங்கள் மூலம் 199 சந்தர்ப்பங்களில் தந்திப் பரிமாற்றம் (Telegraphic Transfer - TT) வாயிலாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
இப்பணம் நாட்டிற்குப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முன்பணக் கொடுப்பனவாக (Advance Payments) வங்கிகள் மூலம் விடுவிக்கப்பட்ட போதிலும், இலங்கை சுங்கத் திணைக்களம் ஊடாக அதற்குரிய எந்தவொரு பொருளும் நாட்டிற்கு வரவில்லை எனச் சுங்க அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி (Phantom Imports / Advance Payments) நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குப் பெருந்தொகையான பணத்தை (மதிப்பிடப்பட்ட தொகை 700 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான/ 190 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான) தந்திப் பரிமாற்றங்கள் (TT) மூலம் கடத்திய மோசடி குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் FCID பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு கோட்டையிலுள்ள "A.Y. Investments" எனும் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இந்த மோசடியை இயக்கிய முக்கிய சந்தேகநபரான ஜெஃப்ரி மொஹமட் (Jeffrey Mohamed) கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிதி விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மோசடி குறித்துக் குற்றப் புலනாய்வுத் திணைக்களமும் இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவும் (FIU) இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.


