Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 10, 2026 • 1:11 PM

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
  • அக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரர் குற்றவாளியாகக் காணப்பட்டு, அவருக்கு 19 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, அதனை 6 ஆண்டுகளில் அனுபவித்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
  • பின்னர் அத்தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
எழுத்து அளவு:

விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு, சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.

    நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விரிவாக விசாரணை செய்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

    குறித்த விசேட பொதுமன்னிப்பை வழங்கும் போது, அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கழிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தன்னிச்சையாகவும் உரிய நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    ஹோமாகம சம்பவம் மற்றும் ஆறாண்டு சிறைத்தண்டனை

    பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், நீதிமன்ற மண்டபத்தினுள் அமைதியற்ற முறையில் நடந்துகொண்டு நீதிபதிக்கும் வழக்கு நடவடிக்கைகளுக்கும் இடையூறு விளைவித்ததுடன், சந்தியா எக்னெலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலும் ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

    அக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரர் குற்றவாளியாகக் காணப்பட்டு, அவருக்கு 19 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, அதனை 6 ஆண்டுகளில் அனுபவித்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டது. பின்னர் அத்தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஜனாதிபதி பொதுமன்னிப்பு சவாலுக்குட்படுத்தப்படல்

    விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையில் சுமார் ஒன்பது மாதங்கள் சிறைவாசம் அனுபவித்திருந்த ஞானசார தேரருக்கு, 2019 மே மாதத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பின் 34(1) சரத்தின் கீழ் விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

    அத்தீர்மானம் சட்டத்தின் ஆட்சிக்கும் நீதித்துறை சுதந்திரத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் எனச் சுட்டிக்காட்டி சந்தியா எக்னெலிகொட, மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA) உள்ளிட்ட சிவில் அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களைத் தாக்கல் செய்து, குறித்த விடுதலையானது தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டிருந்தன.

    நிறைவேற்று அதிகாரமும் சட்டத்தின் ஆட்சியும் குறித்த முன்மாதிரி

    இலங்கையின் அரசியலமைப்பு வரலாற்றில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கிய மற்றொரு விசேட சந்தர்ப்பமாக இத்தீர்ப்பு சட்டத்துறையினரால் அவதானிக்கப்படுகிறது.

    இதற்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஸ்ரீமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு ஆகியவையும் உயர் நீதிமன்றத்தினால் அண்மைக் காலத்தில் செல்லுபடியற்றதாக்கப்பட்டன. அதற்கு அமைய, ஜனாதிபதிக்கு உரித்தான மன்னிப்பு அளிக்கும் அரசியலமைப்பு அதிகாரம் வரம்பற்றது அல்ல என்பதும், அது நீதித்துறை மறுாய்வுக்கு (Judicial Review) உட்பட்டது என்பதும் இத்தீர்ப்பின் மூலம் மீண்டுமொருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

    எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

    சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

    Tamil Leader • எங்களைப் பற்றி

    Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

    மேலும் வாசிக்க (Read More)→

    கலந்துரையாடல் (0)

    உரையாடலில் இணையுங்கள்

    கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

    கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

    ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு! | Tamil Leader | We Lead the Nation